கனிக்கு வந்தே குரு பரம்பரா தொடரில் வரும் எல்லாப் பாடல்களும் மிகவும் பிடிக்கும். குறிப்பாக சூர்ய காயத்ரியின் பாடல்களின் தீவிர ரசிகன் அவன். ராகுலின் பாடல்கள் தனக்கு சரியாகப் பொருந்தும் என்று அவனாகவே முடிவு செய்து கொண்டு அப்பாடல்களை பிரதியெடுக்க முயற்சிப்பதும் உண்டு.
அவர்கள் இருவருமே சென்னைக்கு கச்சேரிக்கு வருகிறார்கள் என்றதும் நிச்சயம் இவனை அழைத்துப் போவது என்று முடிவு செய்திருந்தோம். நாரத கான சபாவில் நடக்கும் பாரத் சங்கீத் உத்சவ் நிகழ்வின் முதல் நாளான நேற்று நாங்கள் செல்ல நினைத்ததற்கு மற்றொரு முக்கிய காரணம் கனிக்குப் பிரியமான சௌம்யா ஆண்ட்டிக்கு விருது வழங்கும் விழா வேறு. எனவே அடித்துப் பிடித்து கிளம்பினோம்.
ஆனாலும் திட்டமிட்டதைவிடத் தாமதமாகப் போய் சேர்ந்ததில் ராகுலின் கச்சேரியின் கடைசி முக்கால் மணி நேரம்தான் கேட்க முடிந்தது. அடுத்து திரு. குல்தீப் பாய்க்கும், திருமதி சௌம்யா அவர்களுக்கும் விருது வழங்கும் நிகழ்வும் அழகாகவும், விரைவாகவும் நடந்து முடிந்தது. அதில் பேசிய எல்லோரும் சொன்னது போல் அது மகளிர் சக்தியைக் கொண்டாடும் விழா போலத்தான் இருந்தது.
நிகழ்வு முடிந்து வெளியேறும் போது ராகுலும், சூர்யாவும் பார்வையாளர்கள் வரிசையில் அமர்ந்திருக்க அவர்களுடன் படம் எடுத்துக் கொள்ள கூட்டம் அலைமோதியது. இரண்டு குழந்தைகளிடமும் கனியோடு படம் எடுக்க அனுமதி கேட்டபோது இனிய புன்னகையுடன் போஸ் கொடுத்தனர்.
குல்தீப்பிடம் கனியை அறிமுகப்படுத்தி உங்கள் குழுமத்தின் பாடல்களின் பரம ரசிகன் என்று சொன்னதும் அவரும் மகிழ்வோடு பேசிக் கொண்டிருந்தார். மீண்டும் சில பல படங்களை எடுத்துக் கொண்டு வீடு வந்து சேர்ந்தோம்.
கனியின் சின்னச் சின்ன ஆசைக்காக, குல்தீப்பிற்கு ஏற்கெனவே மெயில் எல்லாம் அனுப்பி இருந்தோம். அதற்கு பதில் ஏதும் வரவில்லை. ஆனால் சந்திக்கும் வாய்ப்பு சென்னையில் எதிர்பாராமல், கிடைத்துவிட்டது. வீட்டுக்கு வந்து படங்களை அவனுக்கு காட்டியபோது ஒவ்வொருவரையும் பார்க்கையில் அவரவர் பாடலை பாட ஆரம்பித்து விட்டான் கனி. அவனது மகிழ்வே எங்கள் நிறைவு என்பதால் எங்களுக்கும் நேற்றைய பொழுது இனிதானது.