ஓய்வு பெற்றபோது கிடைத்த தொகை முழுமையும் போட்டு ஒரு தோட்டத்தை விலைக்கு வாங்கினார் அப்பா. உடைமையாளர்கள் தவிர குத்தகைதாரரிடமும் முறைப்படி பணம் தந்து, பதிவும் செய்து முடித்திருந்தார். நடுவில் எப்போதோ சில வருடங்கள் உள்குத்தகைக்கு எடுத்த ஒருவர் சட்டென்று இடையில் புகுந்து அந்த நிலத்தின் குத்தகைதாரர் நான்தான், என்னிடம் தெரிவிக்காமல் நடந்திருக்கும் விற்பனை செல்லாது என்று வழக்கு தொடுத்ததோடு அடாவடியாக தோட்டத்தையும் கைப்பற்றிக் கொண்டார். அப்பா ஒரு காந்தியவாதி என்பதால் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். காலகாலமாக தன்னிடம்தான் அனுபவ உரிமை உள்ளதாக சாதித்தார் அந்த நல்லவர். துணைக்கு சில அதிநல்லவர்களின் சாட்சி வேறு.
சரி, நீதி மன்றத்தில் பார்த்துக் கொள்ளலாம் என்று விட்டுவிட்டார் அப்பா. நான் அப்போது ஆறாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். வரிசையாக கீழ்க் கோர்ட்டிலிருந்து உயர்நீதிமன்றம் வரை வழக்கு நடந்தது – உண்மையில் ஆமை வேகத்தில் ஊர்ந்தது. எல்லாம் முடிந்து உயர்நீதிமன்ற தீர்ப்பு வந்ததும் டக்கென தன் மனைவியின் பேரில் இன்னொரு வழக்கு பதிவு செய்தார் அந்த நல்லவர். மீண்டும் அதே பயணம். மொத்தமாக வழக்கு நடந்த காலம் 25 வருடங்கள். பிரச்சனைக்குரிய தோட்டத்தின் இருபுறமும் எங்கள் தோப்புகள்தான். அதற்காகவே அப்பா அதை ஆசைப்பட்டு வாங்கினார். இந்தப் பக்கமுள்ள ஒரு தோப்பிலிருந்து பம்ப்செட்டில் இறைக்கும் நீரைக் கூட இன்னொரு பக்கத் தோப்பிற்கு தன்(!!!) நிலம் வழியாக விட முடியாது என்றார் அந்த நல்லவர். ”சரி, அவன் நிலம்னே வச்சுண்டாக் கூட தோப்பு வழியா தண்ணி போறது அந்த வழில இருக்கற நாலு செடிக்கு நல்லதே தவிர கெடுதல் ஒன்னுமில்லனு கூட புரியல அவனுக்கு. அசடு, அவனுக்கு தெரிஞ்சது அவ்ளோதான், விடு.” இதுதான் அவரது அதிகபட்ச வெளிப்பாடு. அந்தப் பணத்துக்கு ஒரு ரெட்டை வடம் சங்கிலியும், நாலு வளையலும் பண்ணிப் போட்டிருந்தா நானாவது ஆசை தீர போட்டுப் பாத்திருப்பேன் என்று அவ்வப்போது பொருமுவார் அம்மா.
நிலம் எங்களுடையது என்பதில் சட்டபூர்வமாக எந்த ஒரு சிக்கலும் இல்லை. எனவே தீர்ப்பு எங்கள் பக்கமே வந்தது. மேலும் செலவுத் தொகையாக ஒரு தொகை அவர் எங்களுக்குத் தர வேண்டும் என்றும் தீர்ப்பில் கூறப்பட்டிருந்தது. அமீனாவைக் கொண்டு நிலத்தை வசப்படுத்திக் கொள்ள வேண்டியதுதான் பாக்கி எனும் நிலையில் அப்பா ஒரு காரியம் செய்தார். ஒரே ஒரு நண்பரை மட்டும் அழைத்துக் கொண்டு நேராக சம்பந்தப்பட்டவரின் வீட்டுக்கு சென்றார். ”இதோ பார், அமீனா வந்து ஜப்தி பண்ணினா ஒரு விவசாயியா உனக்கு ரொம்பக் கேவலம். மேலும் இந்த சின்ன தொகைய நீ கொடுக்கறதால் உண்மைல கேசுக்கு நான் செலவழிச்சதுல பத்துல ஒரு பங்கு கூட வரப்போறதில்ல. நான் அந்த செலவுத் தொகைய நீ தந்துட்டதா கையெழுத்து போட்டுடறேன், நீ அமீனா வர அளவுக்கு போகாம நீயாவே தோப்புல உன் சாமான்கள் எதும் வச்சிருந்தா எடுத்துண்டு எனக்கு கொடுத்துடு. என்ன சொல்றே?” என்றார்.
உடனே அந்த இடத்தில் தி.ஜாவின் கடன் தீர்ந்தது கதை போல ஒரு கண்ணீர்க் காவியம் அரங்கேறியிருக்கும் என்று எண்ணிக் கொள்ளாதீர்கள். யதார்த்தம் மிகக் கேவலமானது. நான் என் வக்கீலிடம் பேசிட்டு சொல்றேன் என்றார் அந்த மகானுபாவர். தீர்ப்பு இப்படித்தான் இருக்கும் என்ற யூகம் காரணமாக அந்த முறை எதுவும் பயிர் செய்திருக்கவில்லை. ஆனாலும் வக்கீல் ஆரம்பித்து கோர்ட்டு டவாலி வரை பல்வேறு ஆட்களைப் பார்த்துப் பேசி, சட்டவிரோதமாக எதேனும் செய்ய முடியுமா என்பது வரை அலசிவிட்டு, வேறு வழியே இல்லையென்று புரிந்ததில் ஒரு வழியாக 26வது வருடத்தில் நிலம் எங்கள் கைக்கு வந்தது. அதற்குள் நான் முதுகலை முடித்து வேலைக்குப் போய் சில வருடங்கள் ஆகியிருந்தது. என் அம்மா இறந்து தசாப்தம் ஓடியிருந்தது.
”ஏன்பா இவ்ளோ விட்டுக் கொடுக்கணும், செலவுத் தொகை என்பது நமக்கு ஒரு அங்கீகாரம் இல்லையா, அதைத்தான் வாங்கல, அமீனா மூலம் ஜப்தி பண்ணியிருந்தாலாவது செஞ்ச தப்பு கொஞ்சமாவது உறைக்கும் இல்லயா” என்று நான் கோபமாகக் கேட்டதற்கு அவர் சொன்ன பதில் மீண்டும்”விடும்மா. அப்படியெல்லாம் ஒருத்தர அவமானப்படுத்தி வயத்தெரிச்சல கொட்டிக்கக் கூடாது, அது பாவம்”
”அவர் மட்டும் இத்தன வருஷம் இழுத்தடிச்சு நம்ம வயத்தெரிச்சல கொட்டிக்கலாமா?”
“அப்படியெல்லாம் கணக்கு பாத்தா வாழ முடியாதும்மா. அவன் அசடு, அவனுக்கு தெரிஞ்சது அவ்ளோதான்னு விட்டுட்டுப் போயிண்டே இருக்க வேண்டியதுதான்”
அதுதான் அப்பா. எத்தனை பெரிய துரோகம், ஏமாற்றம், நஷ்டம் எதற்கும் சம்பந்தப்பட்டவர் மீது பகையோ, வன்மமோ கொள்ளாமல் அதே நேரம் தன் சுயமரியாதையை எள்ளளவும் விட்டுக் கொடுக்காமல் வாழ்வது என்பதே அவரது வழி. அவர் வாழ்ந்து காட்டிய பாதையிலிருந்து விலகாமல் என்றும் நான் வாழ வேண்டுமென்பதே என் லட்சியம். இன்று அப்பாவின் இரண்டாவது நினைவு நாள்.
நவம்பர் 20 – அப்பாவின் இரண்டாவது நினைவு நாளன்று எழுதிய முகநூல் பதிவு