கனி புதுவிதமான ஒரு பாட்டுக்குப் பாட்டு விளையாட்டை விளையாட விரும்புவான். அதாவது அவன் ஒரு பாட்டின் எந்த இடத்திலிருந்தும் ஏதேனும் ஒரு வரியைச் சொல்வான். உடனே அடுத்த அடியை நாம் சொல்ல வேண்டும். நமக்கு மூன்று வாய்ப்பு தருவான் – அதாவது மூன்று முறை அதே வரியைத் திரும்பத் திரும்பச் சொல்வான். பதில் வரவில்லை என்றால் கடுப்பாகிவிடுவான்.
அவன் கேட்கும் பாடல்கள் எல்லாவற்றையும் கேட்டே ஆகவேண்டியிருப்பவள் என்கிற முறையில் என்னால் மட்டுமே இவ்விளையாட்டை சரியாக ஆட முடியும். பாலாவிடம் கனியை தனியாக விட்டால் அவர்கள் உரசிக் கொள்ளும் முக்கியமான சிக்கல்களில் இதுவும் ஒன்று.
இரண்டு நாள் முன்பு என்னிடம் வந்து ”நீ தூங்கும் போது” என்று ஆரம்பித்தான். கண்ணான கண்ணே பாட்டிலிருந்துதான் சொல்கிறான் எனக்கு நன்றாகப் புரிந்தது. போன வாரத்தில் இரண்டு முறை நள்ளிரவில் எழுந்து அமர்க்களம் செய்து வைத்திருந்தான். அந்த நினைவில் அவனை முறைத்தபடியே “நானும் உன் பக்கத்துல டமால்னு படுத்து தூங்கிருவேன்” என்றேன். குழம்பிப் போனவன் திரும்பத் திரும்ப அதே வரிகளைச் சொல்லிப் பார்த்தான். நானும் சளைக்காமல் இதே பதிலைச் சொல்லிக் கொண்டிருந்தேன்.
பார்த்துக் கொண்டிருந்த பாலா சண்டை வரும் போலிருக்கே, தட்டில் மிக்சர் போட்டு எடுத்து வரலாமா என்று யோசிப்பது புரிந்தது. ஆனாலும் ஒரு அசம்பாவிதமும் நிகழவில்லை. தான் செய்த ஏதோ ஒரு தவற்றுக்கான உள் குத்துதான் என் சத்தியாகிரகம் என்று புரிந்தவனாய் கனி சமர்த்தாக அடுத்த வேலையைப் பார்க்கப் போய்விட்டான். அவனைப் பற்றித்தான் சொல்லியிருக்கிறேனே, மிஸ்ஸியம்மா நம்பியார் போல, செல்லுமிடத்தில் மட்டுமே சினங்காட்டுவான், செல்லுபடியாகாது என்று தோன்றினால் வெற்றிகரமாகப் பின்வாங்கி விடுவான்.
அவன் வேறு விளையாட்டில் மும்மரமானதும் பாலா என்னிடம் “அவன் என்ன பாட்டு கேட்டான்? ஆனா நிச்சயமா நீ சொன்னது தப்பான பதில்தானே? ஆனாலும் எப்படி டென்ஷனாகாம சமாதானமா போயிட்டான்?” என்று விசாரித்தார்.
அவன் கண்ணான கண்ணே பாட்டில் வரும் “நீ தூங்கும் போது முன்னெற்றி மீது முத்தங்கள் வைக்கணும்” வரியில் முதல் பாதியைச் சொல்லி இரண்டாம் பாதியை நான் சொல்ல வேண்டுமென்று எதிர்பார்த்தான். அந்தப் பாட்டு அப்பா பாடற பாட்டில்லயா, அதுனால அப்படி இருக்கு. நான் அம்மா பாடினா அந்தப் பாட்டு எப்படி இருந்திருக்குமோ அத சொன்னேன், அதான் பேசாம போயிட்டான் என்றேன். முறைத்தபடியே அவரும் அடுத்த வேலைய பார்க்கப் போனார்.
ஐயாவுக்கு முறைப்பு பதில் சொன்னீங்களா. என்ன அக்ரமம்.
அது சரி கனிக்கு அம்மா ,கனி போலத்தான் இருப்பாள். மிக மிக ரசித்தேன் லக்ஷ்மி.