ஒரு ராஜா நகர்வலம் போகும் போது ஒரு வீட்டு வாசலில் ரொம்ப அழகான கோலம் ஒன்றை பார்த்தான். ஆஹா, இவ்ளோ அற்புதமான கோலத்தை யார் போட்டதுன்னு கேட்டவனுக்கு ஒரு பாட்டிய கூட்டிட்டு வந்து காமிச்சாங்க.
அம்மா, ரொம்ப அற்புதமா கோலம் போட்ருக்கீங்கன்னு ராஜா பாராட்டினான். பாட்டிம்மா சந்தோஷம் மகாராஜான்னாங்க.
இளவரசிக்கு கல்யாணத்துக்கு பாத்துட்டிருக்கோம். அவ கல்யாணப் பந்தலில் இவ்ளோ அழகான கோலம் கண்டிப்பா இருக்கணும். நீங்க இன்னிக்கே அரண்மணைல வந்து தங்கிக்கோங்க. இனி உங்கள கவனிச்சுக்க வேண்டியது என் பொறுப்பு. இளவரசி கல்யாணத்தன்னிக்கு கோலம் போடறது உங்க பொறுப்புன்னான் ராஜா.
ஆஹா, நான் கொடுத்து வச்சிருக்கணுமே அதுக்கு என்றபடி பாட்டிம்மா கிளம்பிப் போய் அரண்மணையில் செட்டில் ஆனாங்க.
ராஜகுமாரி கல்யாணம்னா சும்மாவா? தேடித்தேடி பொறுக்கி வரன் பாத்து, கல்யாணம் நிச்சயமாக கொஞ்ச நாளாச்சு. ஒரு வருஷம் வரைக்கும் பாட்டிம்மா அரண்மணைல நிம்மதியா சாப்பிட்டு தூங்கி எழுந்து பொழுத போக்கிட்டிருந்தாங்க.
போற வரப்ப ராஜா கண்ல பாட்டிம்மா பட்டால் உடனே “பாட்டி, கல்யாணத்தன்னிக்கு கலக்கணும் சரியா”ம்பான். பாட்டிம்மாவும் பவ்யமா ஆகட்டும் மகாராஜான்னுவாங்க.
ஒரு வழியா கல்யாண நாள் நாளைக்குன்ற அளவுக்கு நெருங்கிருச்சு. பாட்டிம்மா பரபரன்னு கோலப் பொடி என்ன, வர்ணக் கலவைகள் என்னான்னு லிஸ்ட் போட்டு, அரண்மணைக் காரியக்காரரை விரட்டி வாங்கிட்டு வர வச்சு எல்லாம் ரெடி பண்ணிகிட்டாங்க.
காலைல எழுந்து கோலம் போட வேண்டியதுதான் பாக்கி. அப்பல்லாம் அலாரமா, செல்போனா.. எதுவுமில்லாத காலமில்லயா? பாட்டிம்மாவுக்கு வயசால வந்த தள்ளாமை வேற. நல்ல அரண்மணைச் சாப்பாடு. தூக்கம் அமுக்கிருச்சு. கண்ணு முழிச்சு பாத்தா பலபலன்னு விடிஞ்சுகிட்டிருக்கு.
பாட்டிம்மாவுக்கு என்ன பண்றதுன்னு புரியல. சரின்னு கடகடன்னு ஒரு வாளி தண்ணில எல்லா வண்ண கோல மாவையும் கரைச்சு, கையால அள்ளி வாசல் முழுக்க தெளிச்சு வச்சுருச்சு.
ராஜா பாத்துட்டு பதறிப் போய் என்ன பாட்டிம்மா, இப்படி பண்ணிட்டீங்களேன்னானாம். பாட்டிம்மா சொன்னுச்சாம் “என்ன செய்ய மகாராஜா, அவசர கோலம் அள்ளித் தெளிச்சேன்” அப்படின்னுச்சாம்.
எவ்ளோ முன்னாடி சொல்லி வச்சாலும், கடைசி நிமிஷத்துக்கு முந்தின நிமிஷம் வரைக்கும் பொழுத வெட்டியா போக்கிட்டு, கடைசி நிமிஷத்துல முட்டி மோதி வேலை செய்யறதுதான் என் வழக்கம். அதுக்காக என்னை கிண்டல் செய்ய அப்பா எப்பவும் சொல்ற குட்டிக் கதை இது.
ஒரு மாசம் முன்னாடியே கட்டுரை கேட்டாலும், கெடு தேதிக்கு முந்தின நாள் நைட்டு மானிட்டரில் தலைய முட்டாத குறையா உழைச்சு, ஒருவழியா கட்டுரைய ரெடி பண்ணி அனுப்பும் என் திறமைய பாத்து நேத்து பாலா வியந்தோதிக்கிட்டிருந்தப்ப (அவரோட நேர்ல பழகினவங்களுக்கு இது எப்படியிருக்கும்னு தெரியும்) எனக்கு களுக்குனு சிரிப்பு வந்துருச்சு.
அவருக்கு இன்னும் சுருதி ஏறிடுச்சு. ஏன்மா, நான் இவ்ளோ கடுப்புல பேசிட்டிருக்கேன், சிரிச்சுட்டிருக்கயே, என்ன அர்த்தம்னார்.
இல்ல, எங்கப்பா ஒரு கதை சொல்வார்னு ஆரம்பிச்சு மேற்குறிப்பிட்ட கதைய சொன்னேனா… பாலாவுக்கும் சிரிப்பு வந்துருச்சு.
அப்புறமென்ன, சுபமஸ்து.