பெரும்பாலும் கனி ஒரு முறை கேட்டாலே பாடல்களை சரியாகக் கற்றுக் கொண்டு விடுவான். எப்போதாவது சில சமயம் குத்துமதிப்பாக சில வார்த்தைகளைப் புரிந்து கொண்டு பாடுவதும் உண்டு. ஆள் வளர வளர, அவனது மொழியறிவு வளர வளர தன் ஊகத்தால் இது போன்ற தவறுகளை கொஞ்சம் அதிகமாகச் செய்கிறானோ என்று எனக்கு ஒரு சந்தேகம். அதனால் எந்தப் பாடலையாவது அவன் கற்றுக் கொள்ள முயல்வது தெரிந்தால் நானே பாடல் வரிகளை தேடி எடுத்து ஒரு முறை படிக்கக் கொடுத்து விடுகிறேன்.
ஆனாலும் முதல் முறை பாடுகையில் அவன் செய்யும் சில தவறுகள் நம்மை விழுந்து விழுந்து சிரிக்க வைக்கின்றன.
சுட்ட சட்டி சட்டுவம் கறிச்சுவை அறியுமோ என்றபடிக்கு நாள் முழுவதும் ராமா கிருஷ்ணா கோவிந்தா என்றே இவன் பாடிக் கொண்டு திரிந்தாலும் கடவுள், பக்தி, அதன் காரியார்த்த பலன்கள், ஆன்மீகமான உணர்வு என்பதெல்லாம் அவனை எட்டுவதில்லை என்றே தோன்றுகிறது. ராமன், கிருஷ்ணன், அம்பிகை எல்லோரையும் எதோ ஒரு சக மனிதனைப் போலவே இவன் புரிந்து வைத்திருக்கிறான் போல. ஏற்கனவே நாமராமாயணத்தில் காட்டப்படும் ராமர் படம் செருப்போடிருப்பதைப் பார்த்து அவரிடம் “செப்பல் போட்டுட்டு உள்ள வரக்கூடாது” என்று மல்லுக்கட்டிய கதையை இங்கு சொல்லியிருக்கிறேன்.
சமீபத்தில் மகிஷாசுரமர்த்தினி பாடலின் தமிழ் வடிவத்தைக் கேட்டுக் கொண்டிருந்தான். நேற்றுப் பாடுகையில் ஒரு இடத்தில்
“விந்திய மலையின் உச்சியில் அமர்ந்து, விஷ்ணு மாயையாய் படிப்பவளே” என்றான். எனக்கு ஒன்றும் புரியவில்லை. என்னடா என்று பாடலைத் தேடிப் பார்த்தால் விஷ்ணு மாயையாய் ஜொலிப்பவளே என்று இருக்கிறது. படி, எழுது என்றெல்லாம் இவனை அவ்வப்போது பாடாய்ப் படுத்துவதால், ஒரு மனிதருக்கு அதிக பட்ச வேலை படிப்பதாகத்தான் இருக்க முடியும் என்று அவனே முடிவு செய்து கொண்டிருக்கிறான். கேட்டு சிரித்துவிட்டு, வழக்கம் போல் வரிகளைக் காட்டி புரிய வைத்தேன்.
போற போக்குல இந்த அரசாங்கம் சாமிங்களுக்கும் எதுனா நுழைவுத்தேர்வு வச்சு, அதும் சம்ஸ்கிருதத்தில் எழுதினாத்தான் கோவிலுக்குள்ள இடம், இல்லாட்டி தூக்கி போட்ருவோம்னு சொன்னாலும் சொல்லிடக் கூடும்தான். அப்ப ஆத்தாவும் படிச்சுத்தானே ஆகணும் பாவம்.