கனி கடந்த சில வருடங்களாகவே பாவனை விளையாட்டுக்களில் மிகுந்த ஆர்வம் கொண்டிருக்கிறான். குறிப்பாக வந்தே குருபரம்பரா கோஷ்டியினரின் பாடல்களை யூட்யூபில் பார்த்துவிட்டு தன்னை அந்தப் பாடகர்களின் இடத்தில் பொருத்திப் பார்த்து பாடிப் பார்ப்பதை ஆரம்பித்தான். அதிலும் ராகுல் தன்னை ஒத்தவன் என்று புரிவதால் அடிக்கடி நெஞ்சில் கை வைத்து, தன்னை ராகுல் வெள்ளல் என்றே சொல்லிக் கொள்வான்.
அதெல்லாம் நல்ல விஷயம்தானே என்கிறீர்களா. அந்தக் குழுவின் இன்னொரு பிரதான பாடகியான சூர்ய காயத்ரிக்கும், குருவான குல்தீப் கேரக்டருக்கும் ஆட்கள் வேண்டுமல்லவா? பாட்டு வராதென்றாலும் பரவாயில்லை, நானே பின்னணியில் பாடிக் கொள்கிறேன் என்கிற ஒப்பந்தத்துடன் என்னை சூர்யாவாகவும், பாலாவை குல்தீப்பாகவும் உருவகித்துக் கொள்ள ஆரம்பித்தான். பொம்மலாட்டத்தின் சூத்திரதாரியின் லாவகத்தோடு எங்களை சைகை மூலம் மாறி மாறி வாயசைக்க வைத்து, தானே முழுப்பாடலையும் பாடி ஒப்பேற்றிக் கொள்வான்.
அடுத்ததாக மேடை நிகழ்வுகளை நேரிலும், வீடியோவிலும் பார்க்க ஆரம்பித்த பின்னர் பக்கவாத்தியங்களின் தேவையை உணர்ந்து கொண்டவன் அவன் பாடும் போது பாலாவை மிருதங்கம் வாசிக்கச்(வாசிப்பது போல் நடிக்க மட்டுமே) சொல்வான். பாலாவும் சிவாஜியும், பிரபுவும் வாழைத்தாரை பழுக்க வைக்க அடிப்பார்களே, அந்த ரேஞ்சுக்கு தன் முழுத் திறமையையும் பயன்படுத்தி நடித்துத் தருவார்.
அடுத்து என்னை தபேலா வாசி என்று கட்டளையிட்டான். நானும் என்னால் ஆன அளவுக்கு பாத்திரத்தோடு ஒன்றி நடித்து வந்தேன்(தபேலான்ற பேரில் அவன் இரண்டு பழைய வெந்நீர் குண்டான்களை கவிழ்த்து வைப்பான், அதில்தான் திறமையை காட்ட வேண்டும்)
மெல்ல மெல்ல பாத்திரங்களும், மிருதங்கமும் இல்லாவிட்டால் கூட பரவாயில்லை. அம்பிகையைப் போல இவனும் பாவனா மாத்ர சந்துஷ்ட ஹ்ருதயன் என்பதால் காற்றில் கைகளை அசைத்துக் காட்டினாலே போதும் என்று ஆனது.
சென்ற வாரயிறுதியில் சரவணன் வீட்டிற்கு சென்றிருந்த போது பாட நினைத்தவன் அப்பா மிருதங்கம், அம்மா தபேலா என்றான். கூடுதல் ஆட்கள் கைவசம் இருப்பதை உணர்ந்தவனாக சரவணனைப் பார்த்து கடம் வாசிக்கவும் உத்தரவிட்டான். உடனே சரவணனின் அம்மா ”பாட்டி என்ன வாசிக்க, ஜால்ரா தட்டவாப்பா?” என்று கேட்க நாங்கள் எல்லோரும் சிரித்ததில் வெட்கம் வந்து ஓடிவிட்டான்.