எழுதாப் பயணம் – நூலறிமுகக் கட்டுரை – பத்மா அரவிந்த்


எழுதாப்பயணம்: நமக்கு உடல் நிலை சரியில்லை என்றால் உடல் உபாதை மட்டும்தான். ஆனால் நம் குழந்தைகளுக்கு பிறந்த சில வாரங்களுக்குக்குள்ளாகவே சின்ன காதுவலியுடன் கூடிய சுரம் வந்தாலே அவஸ்தைப்படும் மனம். நாளாக நாளாக அந்த சுரத்திற்கு பழகிக்கொண்டாலும், மனவலி என்னவோ அதிகம்தான். நம் குழந்தைகள் விளையாட்டில் சின்ன அடி பட்டாலும் அதே போன்ற மனவலி நிச்சயம்.

பிறவியிலேயே ஜீன் அடிப்படையில் வரும் ஜிவனைல் நீரிழிவு குறைபாடுகள் போன்ற சில தீவிரமான நோய்கள் வந்து அவஸ்தைப்படும் குழந்தைகளின் பெற்றோர்களை கவனித்தால் தெரியும், மருத்துவர்களைப்போல அந்த துறையில் பல கட்டுரைகளையும் படித்து தெரிந்து வைத்திருப்பார்கள். சின்ன சின்ன குறிப்புகளையும் கூட கவனித்து செய்வார்கள். ஏனென்றால் நம் குழந்தைகள் நம் உயிர். நம் உயிரையும் விட மேலான பொக்கிஷம். இந்த குழந்தைகளால் தனக்கு வலி என்றால் பேசவும் அதை சொல்லவும், வலியின் தன்மையை உணர்த்தவும் முடியும் என்கிற போதே நம் உள்ளம் இந்த தவிப்பை உணரும்.

அப்படி இருக்கும் போது, ஆட்டிசக் குறை பாடு இருக்கும் குழந்தைகளின் பெற்றோர்கள் நிலை இன்னும் போற்றுதலுக்குரியது. அந்தக் குழந்தைகளின் குறைபாடே தனது வலியை, பசியை வேதனையை மகிழ்ச்சியை இன்னபிற உணர்வுகளை முழுமையாகப் பகிர முடியாததுதான். அதைக் குறிப்பால் கண்டறிந்து குறை நீக்கி கவனிக்க வேண்டிய நிலையில் இருக்கிறார்கள். இந்தியா மட்டும் இல்லாமல் எங்கேயும், அன்னையரே குழந்தையின் முதல்கவனிப்பாளார் என்பதால், பொறுப்பின் பெரும்பகுதி அவர்களிடமே வரும். மருத்துவரிடம் அழைத்து போவது முதல், பள்ளியில் ஆசிரியர்களிடம் பேசுவது வரை. வேலையை விடுவது முதல், முழு காப்பாளராகி கவனித்துக்கொள்வது வரை.

இதை தன் நூலில் மிக அழகாக கொண்டுவர லக்ஷ்மி முயற்சி செய்திருக்கிறார். அழகாக, தன் பார்வையில் தான் செய்த, கண்ட முயற்சிகளை எழுதியிருக்கிறார்.

குடும்ப அமைப்பு: பேச்சுப்பயிற்சி போன்றவைகளுக்கு அதிக செலவு இருப்பதால், ஒருவர் நிறைய உழைத்து பொருளீட்ட வேண்டிய நிலையும் பெரும்பாலான மத்திய தர குடும்பங்களில் உண்டு. இதற்கு இடையே, பெண்களுக்குக் கூடுதலாக குடும்ப உறவுகளில் கணவனின் தந்தை தாய் போன்றோரையும் கவனித்துக்கொள்ளும் கூடுதல் பொறுப்பும், சமுதாய உறவில் தனித்து விடப்படும் நிலையும், மனசிக்கலும் உருவாகும். ஆட்டிச குழந்தைகள் சமுதாய உறவுகளில் நன்கு பழகுவதில்லை, எனவே அந்த குழந்தைகள் உள்ள குடும்பங்களை நண்பர்களோ உறவுகளோ விழாக்களுக்கு அழைப்பதில் தயக்கம் காட்டுவதும் நடப்பதால், சமுதாய உறவுகளால் தனிமைப்படுத்தப்படுவதால் அந்த மனசிக்கலுக்கும் பலர் ஆளாகிறார்கள். இந்த குழப்பம் நல்ல வேளையாக லக்ஷ்மி, பாலாவிற்கு இல்லாததால் இந்த நூலில் இது குறிப்பிடவில்லை. ஆனாலும் இது ஒரு முக்கியமான பார்வை, லக்ஷ்மி இது குறித்தான ஆதரவு குழுக்கள் அமைப்புகள் இருந்தால் தெரிவித்தால் நன்றாக இருந்திருக்கும்.

கணவன் ஆதரவு: இது மிக மிக முக்கியமான ஒரு அங்கம். குழந்தை வளர்ப்பில் தந்தையின் கடமை முக்கியம் என்பதையும் விட ஆட்டிசம் நிலை குழந்தைகளின் வளர்ப்பில் ஒரு தந்தையின் கடமையை விட ஒரு கணவனாக இந்த ஆதரவு மிக முக்கியம்.
நான் அப்போது பொதுநலத்துறையில் பணியாற்றிக்கொண்டிருந்தேன். என் மேற்பார்வையின் கீழே வரும் ஒரு திட்டத்தில் சிறப்புக்குழந்தைகளுக்கான திட்டமும் உண்டு. சமூக நல சேவகி ஒருவரோடு ஒரு இந்திய வம்சாவளி குடும்பத்திற்கு போய்க்கொண்டிருந்தோம். அவர் குழந்தைக்கு மிக மோசமான ஆட்டிச அறிகுறிகள் இருப்பதால் மருத்துவர் அறிவுறுத்தலின்படி வாரம் 3 தினங்கள் செவிலிகள் அவர் இல்லத்திற்கு சென்று குழந்தையைக் கவனித்துக்கொள்ளவும், அன்னைக்கு உதவியாக இருக்கவும் பரிசீலித்திருந்தனர்.அதற்கு அவர்கள் அனுமதித்தால், நாங்கள் ஒரு பொதுநல செவிலி ஏற்பாடு செய்து, நேரமும் முறையாக ஏற்பாடு செய்து அந்த அன்னைக்கு சில மணி நேரம் ஓய்வும் அவருக்கான நேரமும் தர முடியும். இங்கே(அமெரிக்காவில்) இது முற்றிலும் இலவசம். இதைப்போல இன்னும் பல வசதிகள் இருந்தன, அதற்கு அந்த குழந்தையின் தாத்தா பாட்டியும் ( கணவனின் பெற்றோர்) கூட ஆதரவு தந்தனர். ஆனால், தந்தை மறுத்துவிட்டார். என் வீட்டில் யாருக்கும் இது போல ஆட்டிச குறைபாடுள்ள குழந்தை பிறந்ததே இல்லை, இது இவர்கள் வீட்டினரால் வந்த பிரச்சினை, இவளால் எனக்கும் தண்டனை, ஆகவே இது இவளுக்கு ஒரு பாடமாக இருக்கட்டும் என்றார்.

இதே போல பல பிரச்சினைகள் வரக்கூடும் என்பதால் இது மிக முக்கியமாக கவனிக்க பட வேண்டியது. கணவன் மனைவிக்கு இடையே கூட உறவுச்சிக்கலும் வர இயலும். அதுவும் இந்தியா போன்ற நாட்டில், எல்லா செலவுகளும் பெற்றோரால் மட்டுமே கவனிக்க வேண்டிய இடத்தில் இது இன்னும் கூட பெரிய சுமை.
இதை லக்ஷ்மி, நாங்கள் இருவரும் கவுன்சிலிங் சென்றோம் என்ற ஒரு வரியில் கடந்துவிடுகிறார், இன்னமும் கூட விளக்கமாக எழுதியிருக்கலாம். அதுவும் பாலா போன்ற ஒரு எழுத்தாளரை மணந்து கொண்டவர், இருவருமே முற்போக்காக சிந்திக்க கூடியவர்கள் என்ற நிலையில் எந்த மாதிரியான பிரச்சினைகள் எப்படி அதை சமாளித்தோம் என்பதை விலாவரியாக விளக்கி சொல்லாவிடினும், இன்னும் கூட ஆழமாக கவுன்சிலர் சொன்னது என்ன, அதை எப்படி கவனித்தோம் அதுஏன் முக்கியமானது என்பது போன்ற சில வழிக்காட்டல்கள் முக்கியமானது. இந்த புத்தகம் மற்ற பெற்றோர்களுக்கு தாங்கள் கற்றுக்கொண்டதை தெரிவிக்கும் ஒரு நூலாக இருக்கும் போது இது ஒரு முக்கிய அங்கமாக எனக்கு தோன்றுகிறது.

படிப்படியாக சொல்லிக்கொடுக்கும் வழி: தடாலென விரைவாக செல்லும் தமிழ்நாட்டு எக்ஸ்பிரஸ் திடிரென காசிபெட்டில் தண்ணீர் நிரப்ப அரை மணி நிற்பது போல, அழகாக கனிக்கு பல்விளக்குவதை படிப்படியாக சொல்லிக்கொடுப்பதை விளக்கி எழுதுகிறார். இது ஒரு சின்ன உதாரணம். அது போல ஒவ்வொரு வேலையயும் தினமும் சொல்லிக் கொடுப்பதற்கு பொற்பெனும் பெயரதொன்றும், பொறையெணும் பொருளதொன்றும் நற்பெரும் தவத்தளாய நங்கையாக லக்ஷ்மி இருக்க வேண்டும். ஆனால் இது போல, ஆட்டிசக் குழந்தைகளுக்கு சொல்லித் தருவதில் இன்னொரு சிக்கல் இருக்கிறது. படிப்படியாக ஒரு செயலைக்கற்றுக்கொள்ளும் குழந்தைகள், அந்த வரிசையில் ஒன்று மாறினாலும் தவறினாலும் குழம்பிப்போவார்கள். எனவே சொல்லித்தரும் போதே , சில சமயம் மாற்று வழிகளிலும் பழக்க வேண்டும். இங்கே தொழில்முறை கல்வி பழக்கும் போது அப்படியாக சில செயல்முறைகளை ஆட்டிச முறையாளர்களுக்கு கற்ப்பிக்கிறோம்.

ஃபிளாஷ் கார்ட் மூலம் பாடம் சொல்லிக்கொடுப்பதை பற்றி மிக அருமையாக எழுதி இருக்கிறார். இது டிஸ்லெக்க்சிக் குழந்தைகளுக்கும் மிக பொருந்தும். பொதுவாகவே பலருக்கு திட்டங்கள் பார்க்கும் போதுதான் பிடிபடும். நான் முக்கியமாக அந்த வகை. எதையும் எழுதிவிடுவேன். படமாக என் திட்டங்களை போட்டும் வைத்துவிடுவேன். என் மகனுக்கும் அப்படியே. முக்கியமான கணிதப்பாடங்கள், வேதியியல் ஃபார்முலாக்கள் அவன் பழகிய விதம், இன்னமும் படிக்கும் விதம் இப்படித்தான். எழுதிப்படிக்கும் போது மூளை அதை மீண்டும் ஒருமுறை சிந்திப்பதால், மறந்தும் போகாது, இது ஆட்டிச நிலையாளர்கள் விஷயத்தில் படங்களோடு தொடர்புபடுத்தி சொல்லித்தருவதால் பதிந்து போகிறது.

நான் அமெரிக்கா வந்த புதிதில் சாலை விதிகள் எல்லாம், படங்களோடு இருப்பதைக்கண்டு இது எவ்வளவு நல்ல விஷயம், படிக்காத, மொழி புரியாதவர்கள் கூட விளங்கிக்கொள்ளலாம் என அதிசயித்திருக்கிறேன். பிறகு பொது நலகல்வியாளராக பணிபுரிந்த போது, இங்கே 40 மிலியன் மக்களுக்கு புரிந்துகொள்ளும் சக்தி 3 ஆம் வகுப்புக்கு மேல் இல்லை, அதிலும் உடல் நலம் சம்பந்தமாக ( health literacy)மிக குறைவு என்பதால் இப்படி படங்களோடு விளக்குவது தேவை என்பது புரிந்தது. CDC யில் உள்ள பொது நல விளக்க கையேடுகள் பொதுவாக `10 ஆம் வகுப்பு புரிதலோடு இருப்பதால் அதை 3 ஆம் வகுப்பு அளவுக்கு மாற்றி எழுத, கூடுதலாக விளக்க படங்கள் சேர்க்க ஒரு பெரிய திட்டமும் கொண்டு வரப்பட்டது. அப்போது ஆட்டிசநிலைக் குழந்தைகள், அதனால் அல்லலுறும் இளம் வயதினர், அவர்களுக்கு புரியும் திறன் பற்றிய விவாதம் எழுந்த போது, அவர்களால் இப்படி விளக்கங்கள் புரிந்து கொள்ள முடியும், தனியாக தயாரிக்க தேவையில்லை என்றும் பொதுவான கையேடுகளே போதுமானவை என்றும் முடிவானது.

கற்பித்தல் என்பதுதான் நோக்கம் அதை எப்படி கற்பிக்க வேண்டும் என்று முடிவான பின், எந்த ஒப்பீடும் இல்லாமல் இப்படித்தான் இவனால் கற்றுக்கொள்ள முடியும் என்று உணர்ந்து அதை மட்டும் ஒரு தவமாக செய்கிறார். லக்ஷ்மி பொறுமையாக விளக்குகிறார், எப்படி ஒரு தோழியாக, ஒவ்வொரு அட்டையாக எழுதி, கனிக்காக அதை பிடித்துக்கொண்டு நிற்போம் என்பதை. என்னால் என்ன கற்றுக்கொள்ள முடியும், என்ன செய்ய முடியும் என்பதில் மட்டுமே நோக்கம் இருக்க வேண்டும் என்பதில் தெளிவு, எப்போதுமே ஒப்பு நோக்கி ஒரு கன்ணுக்கு தெரியாத போட்டியில் இறங்கி விட்டால், நிம்மதியாக இருக்க முடியவே முடியாது என்பதை ஆட்டிச குழந்தைகளின் பெற்றோர் மட்டும் அல்ல, மற்றவரும் கூட தெரிந்து கொள்ள வேண்டிய செய்தி இதில் இருக்கிறது.

ஆர்வத்தை திறமையாக மாற்ற முயற்சி: கனிக்கு இசை மேல் உள்ள ஆர்வத்தை புரிந்து கொண்ட நிகழ்வையும் அழகாக விவரித்திறார். கொஞ்சம் கொஞ்சமாக அது பெற்றோருக்கு கிடைத்த ஒரு பற்றுக்கோடாகிறது. உடனே அதில் முழு முயற்சியாகத் திணிக்காமல், மெல்ல மெல்ல இசை ஆசிரியர்களிடம் அழைத்துச் சென்று, அங்கேயும் பிள்ளையின் ஆர்வத்திற்கே, விருப்பத்திற்கே முதலிடம் கொடுத்திருக்கிறார்கள். ஒரு மாணவியாக கூடவே இருந்து தானும் கவனமாக கேட்டு, அதை மாலையில் மீண்டும் கனியுடன் பாடி, அதை reinforcement செய்து என்று அதிலும் அவர் சொல்லாமல் சொல்வதை கவனிக்க வேண்டும். சில பெற்றோர்கள், பிள்ளைகளை அழைத்துக்கொண்டு வகுப்புக்கு சென்று விட்டுவிட்டு, அங்கே உள்ள மற்ற பெற்றோர்களுடன் பேசிக்கொண்டு இருந்துவிட்டு, அல்லது ஃபோனில் பாடல்கேட்டு கொண்டு இருந்துவிட்டு, வகுப்பில் என்ன நடக்கிறது என்பதே புரியாமல் இருந்துவிட்டு வருவார்கள். சாதாரணாமான குழந்தைகளுடன், இன்று ஆசிரியை என்ன சொல்லிகொடுத்தார்கள் என்று கேட்டால் அவர்களால் ஒரு வேளை விளக்கமாக சொல்ல முடியலாம், ஆனால், ஆட்டிச நிலையாளர்களால், அப்படி விளக்கிச் சொல்ல முடியாதலால், இந்தக்கூடுதல் கவனிப்பு அவசியமாகிறது.

மற்றவர்கள் ஆட்டிச நிலைக்குழந்தைகளை அன்போடு அணுகுவதும் பழகுவதும் சமுதாய மாற்றங்கள். சட்டென்று ஏற்படுவதில்லை. இங்கே ஃபோர்டு நிறுவனம், தன் விற்பனைத்துறையில் இருக்கும் அனைவரையும் சிறப்புக்குழந்தைகள் இருக்கும் குடும்பங்கள் வந்தால் எப்படி அணுக வேண்டும் என்பதை சிறப்பு பாடமாக சொல்லி தரும் பயிற்சி வகுப்பு நடத்தினார்கள். அது போல பல விற்பனை நிலையங்கள் பயிற்சி வகுப்புகளை செயல்படுத்தி இருக்கிறார்கள்.

ஆனாலும், சில ஸ்பெக்ட்ரம் இருக்கும் ஆட்டிச நிலையாளர்களின் பெற்றோர்கள் அதைவிட மோசமான நிலையில் இருக்கும் குழந்தைகளுடனேயே தங்கள் குழந்தைகளை பழக அனுமதிப்பதில்லை. என் குழந்தை அவ்வவு மோசமாக இல்லை, நாளைக்கு அவனைப்போல இவனும்கைகால்களை அசைக்க துவங்கியோ பொது இடங்களில் கத்த ஆரம்பித்துவிட்டால் என்ன செய்வது, நான் நார்மலாக இருக்கும் குழந்தைகளுடன் மட்டும்தான் பழகச் சொல்ல போகிறேன் என்று சொல்லும் பெற்றோர்கள் உண்டு,அவர்கள் மீது தவறு இல்லை, எல்லா பெற்றோர்களும் தங்கள் குழந்தைகள் நன்றாக இருக்கவே எண்ணுவார்கள். ஆனாலும் இந்த அறியாமை கலந்த பயம் நீங்க வேண்டும். இந்த நிலை மாற வேண்டும். அவர்களும் மற்ற எல்லா குழந்தைகளையும் போலத்தான் என்ற நிலை வர வேண்டும்.

எமர்ஜென்சி மெடிகல் டெக்னிஷீயன் துறையில்பணியாற்றுபவர்களுக்கு அந்த துறையில் சிறப்பு பயிற்சி தரப்படுகிறது, காவலர்களுக்கு கூட. இதெல்லாம் அரசாங்கம் முன்வந்து செயல்படுத்தும் சில திட்டங்கள். என் நண்பர்கள் சிலர், K -12 பயிற்சி பாட திட்டங்களை சில app மூலமாக கணிணி வழியாக கற்கவும் வழி செய்திருக்கின்றனர். விடியோ வழியாக மருத்துவர் குழந்தைகளின் பயிற்சியை கண்காணிக்கவும், குழந்தைகளின் திறன் மேம்பட அடுத்த திட்டத்துக்கு போகவும் வகை செய்யப்பட்டிருப்பதால், பெற்றோர்கள் குழந்தையுடன் விடுமுறை சென்றாலும், பேச்சு பயிற்சியோ சிகிச்சையோ தடையில்லாமல் நடக்கிறது. இவையாவும் காப்பீட்டில் அனுமதிக்கப்பட்டிருக்கிறது.
இன்னொரு மருத்துவ நண்பர், புது தில்லியில் இதே போல சில திட்டங்கள் கொண்டு வந்திருக்கிறார். ஆனால் தமிழ்நாட்டில் பல தடைகள் இருக்கின்றன.

சில குழந்தைகளுக்கு பாடும் திறனும், சில குழந்தைகளுக்கு அளப்பறிய கணித அறிவும் இருப்பதால், எல்லா பெற்றோரும் தங்கள் குழந்தைகளை உடனே அந்த துறையில் சேர அழுத்தம் தர தேவையில்லை. முன்னைவிட இப்போது லக்ஷ்மி போன்றவர்கள் முயற்சியால், விழிப்புணர்வு அதிகரித்திருக்கிறது என்றாலும் போக வேண்டிய தூரம் அதிகம். இன்னும் இந்த குழந்தைகளுக்காக தங்கள் வாழ்க்கையை இழந்து எல்லாவற்றையும் குழந்தைகளுக்காக செய்யும் நிறைய தாய்மார்களின் கதைகளை அவள் போன்ற இதழ்களில் படித்துக்கொண்டுதான் இருக்கிறேன்.

அந்த வகையில், மிக அழகாக எளிமையான தமிழில், தன் அனுபவங்களை சொல்லி இருக்கிறார் லக்ஷ்மி. அதுவும் கனிவமுதன், பிறந்த நாள் முதல் எனக்குத் தெரிந்தவன் என்பதாலேயே ஒரு அந்நியோன்னியம் இருப்பதால், ஆர்வத்துடன் படிக்க ஆரம்பித்தவுடன் முடிக்காமல் புத்தகத்தை கீழே வைக்கவில்லை. வெள்ளம் வந்த பின் ஏற்பட்ட தடை, அதை இசை மூலம் தாண்டி வந்த அனுபவம் கூட மிக அழகாக எழுதப்பட்டிருக்கிறது. தன்னுடைய அனுபவத்தின் வாயிலாக மற்ற ஆட்டிச நிலையாளர்களின் பெற்றோர்கள், மற்றவர்களும் கூட எடுத்துக்கொள்ள வேண்டிய விஷயங்கள் இதில் நிறைய.

அடுத்த நூலில் சில முக்கிய குறிப்புகள் சேர்க்க வேண்டும் என்பதை வேண்டுகோளாக வைக்கிரேன்
1. எங்கெல்லாம் இசைப்பயிற்சி கிடைக்கிறது, என்ன கட்டணம் போன்ற விவரங்கள்
2. பேச்சு பயிற்சி
3. பள்ளி மாற்றிய விவரங்கள், கனிவமுதனை அடித்த பள்ளியில் கவனிக்காமல் விட்ட பள்ளி குறித்த முழு விவரங்கள் – அப்போதுதான் மற்ற பெற்றோருக்கு அது ஒரு எச்சரிக்கையாக இருக்கும்
4. தடுப்பூசி, அப்போது ஏற்ப்பட்ட உபாதைகள் சமாளித்த அனுபவங்கள்
5. உணவு விவரங்கள்

எழுதாப்பயணம் என்ற நூலின் தலைப்பே என்னை நிறைய யோசிக்க வைத்தது. செல்லாத பயணமோ முற்றுப்பெறாத பயணமோ இருக்க முடியும். அல்லது எழுதாத பயணக்கட்டுரையோ இருக்க முடியும் அதெப்படி எழுதாத பயணம் என்று ஒன்று இருக்க முடியும் என்று. இப்போதுதான் கனியின் பயணம் ஆரம்பித்திருக்கிறது. இனிமையாக தொடர வாழ்த்துகள்!!! எங்கோ தெரியும் எஞ்சினை விட்டு, ஜன்னலின் ஊடாக தெரியும் ஏரிகளையும் வயலையும் ரசிக்கட்டும்! முட்புதர்கள் கூட வரலாம், ஆனால் அவற்றை கூட பெற்றோர்களும் மக்களும் கூட இருந்து அகற்றி போகலாம்!!

 

**************

தோழி பத்மா அரவிந்த் எழுதாப் பயணம் நூலுக்கு தந்த மதிப்புரை. புத்தகம் ஆன்லைனில் வாங்க – https://tinyurl.com/e-payanam

About லக்ஷ்மி பாலகிருஷ்ணன்

சொல்லிக்கொள்ளுமளவு பெரிதாக ஏதுமில்லை. :)
This entry was posted in ஆட்டிசம், இலக்கியம், எழுதாப் பயணம், படித்ததில் பிடித்தது and tagged , , . Bookmark the permalink.

2 Responses to எழுதாப் பயணம் – நூலறிமுகக் கட்டுரை – பத்மா அரவிந்த்

  1. jasdiaz says:

    A good review. I wish the reviewer had given the details of the publisher, cost and how to buy the book.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s