பானுமதி அருமையான பாடகி, தேர்ந்த நடிகை, இயக்குனர் என்பதெல்லாம் ஊரறிந்த விஷயம். ஆனால் அவர் ஒரு எழுத்தாளரும் கூட, அதுவும் சாகித்திய அகாடமி விருது வென்ற நாவலுக்கு சொந்தக்காரர் என்றறிந்த போது வியப்பாக இருந்தது. தேடிப் பிடித்து அவரது விருது பெற்ற நாவலைப் படித்தபோது நொந்து போனேன்.
சிறந்த கலைஞர்களுக்கு, அவர்களின் மோசமான கலைப்படைப்பை முன்வைத்து பரிசளித்து கௌரவிப்பது அரசாங்க ஸ்தாபனங்கள் அவ்வப்போது கையாளும் டெக்னிக். விருதைக் குறை சொல்லவும் முடியாது, கொண்டாடவும் முடியாது திண்டாட வைக்கும் வர்ம அடி போன்றது இந்த நுட்பம். அப்படித்தான் தி.ஜாவுக்கும் சக்தி வைத்தியம் என்ற அடிவண்டல் சிறுகதைகளுக்கு சாகித்திய அகாடமி விருது கொடுத்து கௌரவித்தது.
ஆனால் விருதுகளைத் தாண்டி, தமிழிலக்கிய வரலாற்றில் யாராலும் தவிர்க்க முடியாத பெரும்புள்ளி அவர். கடந்த வெள்ளியன்று அவரது பிறந்த நாளை முன்னிட்டு ஒரு பதிவெழுதவென்று ஆரம்பித்து அது அமிர்தத்துக்கான நூலறிமுகமாக மாறிக் கொண்டிருக்கவும், அப்படியே ஏறக்கட்டிவிட்டேன். இன்று படித்துப் பார்த்ததில் அப்படியே பதிவிடுவதில் தவறில்லை எனத் தோன்றியதால் இங்கே.
==============
கதாநாயகி நடிகைகள் தங்களது முதல் படத்தில் தோன்றும் விதம் அப்பாவித்தனமான அழகோடு இருக்கும். மண்வாசனை ரேவதி, ஆண் பாவம் சீதாவையெல்லாம் பிற்பாடு வந்த படங்களில் அவர்களின் தோற்றத்தோடு ஒப்பிட்டுப் பாருங்கள். எட்டல்ல எண்ணற்ற வித்தியாசங்கள் இருக்கும். மெல்ல மெல்ல ஆமை ஓடு போல ஒரு மாஸ்க் அமைந்துவிடும் போல.
எழுத்தாளர்களுக்கும் அப்படித்தான் என்று சில படைப்புகளைப் பார்க்கையில் தோன்றுகிறது. சாண்டில்யனின் முதல் கதையான ஜீவபூமி அவரது பிற்காலத்திய வர்ணனைகளின் சாயலில்லாத அழகான நாவல்.
அந்த வகையில் தி.ஜாவின் முதல் நாவலான அமிர்தமும். அவரது பிற்காலத்திய படைப்புகளின் சாயல் எதுவும் இல்லாத வித்தியாசமானதொரு படைப்பு. அவரது பாஷையில் சொல்வதானால் நாள் கிழமையோ, வெள்ளி செவ்வாயோ அல்லாத நாளில் சுங்கடிப் புடவையும், சில முழங்கள் பூவுமாக காட்சி தரும் எளிய அம்பாள் அலங்காரம் போல.
அமிர்தம், அவளது தாயார் குசலம், வேலைக்காரி துளசி, சபேச முதலியார், அவரது மகன், முக்கியமாக ராஜு அண்ணன் என ஒவ்வொரு கதாபாத்திரமும் நுட்பமாக பார்த்துப் பார்த்து செதுக்கப்பட்ட சிற்பங்கள் போல தனித்துவமான வார்ப்புகள்.
தேவதாசிகள் தங்களுக்கு கோவில் சார்பில் கட்ட்டப்பட்ட பொட்டுக்களை அறுத்தெரிந்து கொண்டிருந்த காலகட்டம் அது. அரங்கேற்றம் என்ற வார்த்தையின் அக்காலகட்ட நடைமுறைப் பொருள் தெரிந்தால் இனி யாரேனும் தங்கள் குழந்தைகளுக்கு பரதநாட்டியம் கற்றுக் கொடுத்து, பெருமை பொங்க ஆடம்பரமாக அரங்கேற்றம் செய்வார்களா என்று தெரியாது.
வாழ்கையில் நன்றாக இருப்பது என்பதன் பொருள் ஒவ்வொருவருக்கு ஒவ்வொன்றாக இருக்கும். குசலத்திற்கும், அமிர்தத்திற்கும் அவ்வார்த்தையின் பொருள் இருவேறு துருவங்களில் நிற்க, அதற்கு நடுவிலான ஊசலாக கதை பயணிக்கிறது.
நிலபிரபுத்துவ யுகம் முடிந்து, தொழிற்புரட்சிக்குப் பின்னான நவீன யுகம் புலர்ந்து கொண்டிருந்த காலகட்டம் அது. ஜேகே சொல்வது போல் ஒரு யுக சந்தி. படித்து முன்னேறுவதே இனி நம் வாழ்கைக்கு பொருள் கொடுக்கும் என்று ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையில் உணர்ந்து கொண்டிருந்த நேரம் அது. அமிர்தம் தன் அந்தரங்க வாழ்வில் ஏற்பட்டுவிடும் ஒரு அவலத்தால் அந்த அலையில் ஏறி படிப்பை நோக்கி நகர்வதோடு கதை முடிகிறது.
தி.ஜாவை படிக்க ஆரம்பிக்க நினைப்பவர்கள் அமிர்தத்தில் இருந்து ஆரம்பிக்கலாம் என்பதே என்றும் என் சிபாரிசு.
ஆனால் பெரும்பான்மை இலக்கிய வாசகர்கள் மோகமுள்ளையும், அம்மா வந்தாளையும், மரப்பசு அம்மணியையும் கொண்டாடும் அளவுக்கு அமிர்தத்தைக் கண்டு கொள்வதில்லை. இதுவரை படித்திராதவர்கள் அமிர்தத்தைப் படித்துப் பாருங்கள்.