கொரானா உங்களை அண்டாமல் இருக்க வீட்டு மொட்டை மாடியில் யந்திரம் ஜெபித்து நிறுவித் தருகிறேன் என்கிற விளம்பரம் நமக்கு நகைச்சுவையாகப்படுகிறது. ஆனால் ஒரு சிலருக்கு அந்த விளம்பரத்தின் மீதும் கூட நம்பிக்கை வருகிறது – பணத்தைக் கரியாக்குகிறார்கள். அதைப் பற்றி நாம் சொல்வதற்கொன்றுமில்லை.
ஆனால் அதேநேரம் நான் சித்த மருத்துவத்தில் கொரானாவுக்கு மருந்து கண்டுபிடித்துவிட்டேன், சீனாவுக்கே நான்தான் மருந்து அனுப்பினேன் என்றெல்லாம் சொல்கிறவர்களைப் பார்க்ககையில் யாரும் சிரிப்பதில்லை. பெரும்பாலானோருக்கு அது உண்மையாக இருக்குமோ என்றும் மயக்கம் ஏற்படுகிறது.
இதில் மலையைத் தூக்கி என் கைகளில் வையுங்கள், அதைத் தூக்கிக் காட்டுகிறேன் என்ற நகைச்சுவைக் காட்சியைப் போல ஒரு வார்டு நோயாளிகளை அவர்களிடம் கொடுத்துவிட்டால் மருந்தை நிறுவிக் காட்டுவார்களாம். இப்படிப் பேசுபவர்களை குற்றம் சொன்னால் , நான் தமிழன், தமிழ்வழி மருத்துவத்தை முன்வைப்பதால்தான் என்னை ஒதுக்குகிறார்கள் என்று புலம்புகிறார்கள். இந்தப் புலம்பலில் சிலபல தமிழ் ஆர்வலர்கள் மயங்கி இது போன்ற டுபாக்கூர்களை ஆதரித்துத் தொலைக்கிறார்கள்.
இன்று கொரானாவுக்கு மருந்து கண்டுபிடித்துவிட்டதாக அறிவித்து நவரச நாயகனாக பரிணமிப்போர் ஏற்கனவே பல காலமாக ஆட்டிசம், டவுன் சிண்ட்ரோம் போன்ற பல்வேறு அறிவுசார் குறைபாடுகளை 100% குணப்படுத்துவதாக பல பத்திரிக்கைகளிலும் விளம்பரம் வெளியிட்டு கல்லா கட்டிக் கொண்டிருப்பவர்கள்தான்.
இப்படியானவர்களிடம் மாட்டிய பெற்றோர்களின் கண்ணீர்க் கதைகள் ஏராளம். அவர்களிடம் சிகிச்சைக்காக சென்றவுடன் குழந்தையின் சிக்கல் எதைப்பற்றியும் காதிலேயே வாங்கிக் கொள்ளாமல் ஏழாயிரம், எட்டாயிரம் என்று தொகையைச் சொல்லி ஒரு மாதத்துக்கான மருந்துகளைத் தலையில் கட்டுவர்.
காலையும் மாலையுமென வேளைக்கு 8-10 மாத்திரைகள், பல்வேறு வண்ணங்களில். ஆறு மாதம் வரை மருந்துகளை எடுத்தும் பிரயோஜனம் துளியும் இல்லை என்று அவரிடம் மீண்டும் சென்றால் இன்னும் ஒரு ஆறு மாதத்திற்கு மருந்து சாப்பிடுங்கள் என்று கூசாமல் சொல்வர்.
அதற்குப் பின்னரே பல பெற்றோர்கள் இவர்களிடமிருந்து தப்பி ஓடுவார்கள். முறையான சட்டபூர்வ நடவடிக்கை எடுக்குமளவு பெற்றோர்களுக்கு தெம்பும், நேரமும் இருப்பதில்லை என்பதால் அப்படியே இவர்களின் பிழைப்பு ஓடுகிறது. இப்போதெல்லாம் சிறப்புக் குழந்தைகளின் பெற்றோருக்கான குழுமங்கள் பெருகி விட்டதால், இது போன்ற ஏமாற்றங்களை அங்கு பகிர்ந்து கொள்ள முன்வருகின்றனர். இது கொஞ்சம் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது.
அதே ஆட்கள்தான் இப்போது கொரானாவைக் குறிவைத்து நம் முன் துண்டை விரித்திருக்கிறார்கள். மூட்டுவலியோ, தலைவலியோ போல சில நாட்கள் சிகிச்சை எடுத்துப் பார்த்துவிட்டு ஒத்துவரவில்லை என்று ஓட, கொரானா ஒன்றும் மெல்லக் கொல்லும் வியாதியல்ல. உடனடியாக, முறையாக நிரூபணம் உள்ள அலோபதி சிகிச்சையை எடுத்துக் கொண்டாலே கூட உயிரிழப்புக்கான வாய்ப்புகள் உள்ள நிலையில் இது போன்ற போலிகளிடம் ஏமாறாதீர்கள்.
அடுத்து தமிழ் வழி மருத்துவம் ஊருக்கு இளைத்ததா என்று வரிந்து கட்டிக்கொண்டு வருபவர்கள் முதலில் செய்ய வேண்டியது சித்த மருத்துவத்தில் ஒரு புது மருந்தை அறிமுகம் செய்வதற்கான முறையான வழிமுறைகளை உருவாக்குவதுதான். புதிய ஆராய்ச்சிகள், கண்டுபிடிப்புகளுக்கான நிரூபண முறைகள் போன்றவை வெளிப்படையாக கட்டமைக்கப்பட வேண்டும்.
ஐந்து வருடம் அரசின் சித்தா, ஆயுர்வேதா போன்றவற்றை படித்துவிட்டு வருபவரும் மருத்துவர், நான் பரம்பரை மருத்துவர் என்று சொல்லிக் கொள்பவரும் மருத்துவர் என்றால் யாரைத்தான் நம்பித் தொலைப்பது?
வர்ணாசிரமத்தை வேரோடும் வேரடி மண்ணோடும் களைந்துவிட கச்சை கட்டிக்கொண்டவர்கள் கூட இந்த துறையில் பரம்பரை மருத்துவர் என்பதற்காக சிலரை ஆதரிப்பது எப்படி சரியாகும்? போலி மருத்துவர்களின் விளம்பரங்களை முதலில் அரசு தடை செய்ய வேண்டும்.
இன்னமும் நுட்பமான மோசடிகளும் இங்கே உண்டு. இந்த மருத்துவர்கள் தங்களது மருத்துவமனையின் பெயரிலோ அல்லது மருத்துவரின் சொந்தப் பெயரிலோ தளங்களை ஆரம்பித்து நடத்தித் தொலைக்க வேண்டியதுதானே?
ஆட்டிசம் க்யூர், டோண்ட் ஒர்ரி ஆட்டிசம் போன்ற பெயர்களில் இவர்களின் தளங்கள் இயங்கும். எனவே ஆட்டிசம் என்று இணையத்தில் தேடினாலே இவர்களின் மோசடி வலையில் விழும் வாய்ப்புகள் அதிகம். ஆட்டிசத்தை குணப்படுத்த முடியுமா என்று இணையத்தை துழாவும் அப்பாவிப் பெற்றோர் எல்லோரையும் வலையில் அரித்தெடுத்துவிட வேண்டும் என்ற பேராசையில், குறுக்கு வழிகளை பயன்படுத்திக் கொள்ளும் இது போன்ற களவானித்தனங்களை என்னவென்று சொல்வது?
இன்று மரபு மருத்துவத்தை தூக்கிப் பிடிக்கும், முறையான பட்டப்படிப்பை முடித்த மருத்துவர்களும் தங்களின் சிண்டிகேட்டை வலுவானதாக்கி, மோசடிகளைக் களையும் வழிமுறைகளை உருவாக்க வேண்டும். அதற்குப் பின்னர் வந்து மக்களை குறை சொல்லுங்கள்.