வீட்டில் வயதான பெரியவர்கள் இருந்தால் பிறந்த குழந்தையின் உடல் முழுக்க எண்ணெய் தேய்த்துவிடுதல் தொடங்கி குளிக்க வைப்பது போன்ற செயல்களில் அவர்களின் ஈடுபாடும் ஒத்துழைப்பும் எப்போதும் இருக்கும். அப்படியான சமயங்களில் குழந்தையின் கை, கால்கள், கண்கள் போன்றவற்றை ஆராய்வது, அதன் செயல்பாடுகளை அடிக்கடி சோதித்துப் பார்ப்பது என்றெல்லாம் செய்வார்கள். எங்கள் ஊர் பக்கமெல்லாம் ஒரு பழக்கம் உண்டு. குழந்தை குப்புறப்படுத்து நீந்தத்தொடங்கி, ஒரு அறையில் இருந்து இன்னொரு அறைக்கு நீந்திக் கடந்துவிட்டால், அருகில் உள்ள பிள்ளையார் கோவிலுக்கு கொழுக்கட்டை வேண்டிக்கொண்டு படைக்கச் சொல்வார்கள். நிலைப்படியைத்தாண்டி அக்குழந்தை சென்றதால் இந்த வேண்டுதல். இதற்கு படிக் கொழுக்கட்டை என்றே பெயர். இப்படியான சடங்குகள் எல்லாமே குழந்தையின் வளர்ச்சிப் படிநிலைகளை (Developmental Milestones) உறுதிப்படுத்திக் கொள்வதற்கான அக்கால வழிமுறைகள்.
இன்றைய அறிவியல் யுகத்தில் குழந்தைகளின் வளர்ச்சிப் படிநிலைகளின் பட்டியல் தெளிவாக வரையறுக்கப்பட்டுவிட்டது. மாதாந்திரம் போட வேண்டிய தடுப்பூசிகளின் பட்டியல் போலவே குழந்தையின் எடை, உயரம் போன்றவற்றின் வளர்ச்சியும், அதன் நடவடிக்கைகளில் இருக்க வேண்டிய மாற்றங்களும் (குப்புரிப்பது, தவழ்வது, எழுந்து அமர்வது, பெயர் சொல்லி அழைத்தால் திரும்பிப் பார்ப்பது போன்றவை) குழந்தை நல மருத்துவர்களால் ஒரளவுக்கு கண்காணிக்கப்படுகிறது. இதில் ஏதேனும் தொய்வு ஏற்பட்டால் தகுந்த நடவடிக்கைகளை எடுக்க பெற்றோரை வழிநடத்தவும் செய்கின்றனர்.
ஆனால் இதெல்லாம் சராசரிக் குழந்தைகளுக்கு பெரும்பாலும் கச்சிதமாகப் பொருந்திவிடும். ஒரு சில வேறுபாடுகள் இருந்தாலும் தானே அடுத்த கட்டத்திற்கு நகர்ந்துவிடுவர். ஆனால் ஆட்டிசம் போன்ற வளர்ச்சிக் குறைபாடு (Developmental Delay) உள்ள குழந்தைகளுக்கு இதே முறையை அப்படியே கையாள முடியாதில்லையா? பொதுவான வழிகாட்டல்களை ஒரளவுக்கு எடுத்துக்கொள்ள முடியுமென்றாலும் ஒவ்வொரு படிநிலையையும் அப்படியே எதிர்பார்க்க முடியாது.
குறைகள் இருப்பதைப் போலவே ஆட்டிச நிலையாளர்களில் சிலருக்கு தனித்திறன்களும் (Splinter skills) இருக்கக்கூடும். சில குழந்தைகள் மிகப் பெரிய புதிர்களைக் (Puzzles) கூட அனாயசமாக இணைப்பார்கள். இன்னும் சிலருக்கு மொழியிலோ, இசையிலோ, கணிதத்திலோ அபாரமான மேதமை இருக்கக்கூடும். அவற்றையும் நாம் கணக்கில் கொண்டாக வேண்டும்.
இந்த வளர்ச்சிப் படிநிலைகள் வழியாகக் குழந்தைகளை அழைத்துச் செல்லும் பொறுப்பு பெரும்பாலும் பெற்றோரிடமே உள்ளது. வேறெந்த நோய் என்றாலும் மருத்துவர்கள் மருந்து, அதை உட்கொள்ளும் முறை, பத்தியம் போன்ற எல்லா விவரங்களையும் வழங்கிவிட முடியும். ஆனால் ஆட்டிசம் என்பது வாழ்நாள் முழுவதும் தொடரும் ஒரு குறைபாடு என்பதாலும், அதன் தன்மைகள், வீரியம் போன்றவை ஒவ்வொரு குழந்தைக்கும் மாறுபடும் என்பதாலும் இங்கே குழந்தையின் வளர்ச்சியை முன்னேற்றும் திட்டங்கள் ஒவ்வொன்றும் தனித்துவமானவை.
பொதுவாக ஆட்டிச நிலைக் குழந்தைகளுக்கான வளர்ச்சிப் படிநிலைகளை நான்கு வகையாகப் பிரித்துக் கொள்வது நமது புரிதலை எளிதாக்கும்.
- உடல் ரீதியான படிநிலைகள்(Movement/Physical Milestones)
- அறிவுசார் படிநிலைகள்(Cognitive Milestones)
- தகவல் தொடர்புக்கான படிநிலைகள்(communication milestones)
- சமூகப் புரிதல் மற்றும் உணர்வு ரீதியிலான படிநிலைகள்(Social/Emotional Milestones)
இவற்றை எப்படி பரிசோதிப்பது என்பதற்கு வகைமைக்கு ஒர் எடுத்துக்காட்டு வீதம் இங்கே சொல்லி இருக்கிறேன். இந்த செயல்கள் எல்லாம் 3 வயது வரையிலான குழந்தைகளுக்கானது. இதே போல் ஒவ்வொரு வயதுக்கும் உரிய செயல்களை நிபுணர்களிடமிருந்தோ அல்லது இணையத்தில் தேடியோ அறிந்து கொள்ள முடியும்.
- உடல் ரீதியான படிநிலைகள்(Movement/Physical Milestones) – தவழ்வது, நடப்பது, படியேறுவது, ஓடுவது போன்றவை
- அறிவுசார் படிநிலைகள்(Cognitive Milestones) – பொம்மைகளை வைத்து சரியான முறையில் விளையாடுவது, சின்னப் புதிர்களை இணைப்பது, ப்ளாக்குகளை இணைத்து டவர் உருவாக்குவது போன்றவை
- தகவல் தொடர்புக்கான படிநிலைகள்(communication milestones) – சின்னச் சின்ன செயல்களை சொன்னதும் புரிந்து கொண்டு செய்தல், தன் பெயரை கேட்கும் போது சொல்வது, சின்னச் சின்ன உரையாடல்களை மேற்கொள்ள முடிவது போன்றவை
- சமூகப் புரிதல் மற்றும் உணர்வு ரீதியிலான படிநிலைகள்(Social/Emotional Milestones) – குழு விளையாட்டுக்களில் தன் முறையை புரிந்து கொண்டு விளையாடுவது, பெரியவர்களைப் பின்பற்றி செயல்களைச் செய்ய முயற்சிப்பது, தன் உடைமைகளையும் பிறருடையது என்பதையும் புரிந்து கொள்ளுதல் போன்றவை.
எங்கள் பிள்ளைக்கு ஆட்டிசம் என கண்டுகொண்டதும், நாங்கள் குழந்தைகளுக்கான உளவியல் ஆலோசகர், ஆக்குபேஷனல் தெரப்பிஸ்ட், பேச்சுப் பயிற்சியாளர், சிறப்புக் கல்வி ஆசிரியர் என பல்வேறு நிபுணர்களின் ஆலோசனைகளைப் பெற்றோம். ஒவ்வொருவரும் அவரவர் துறைசார்ந்து வழிகாட்டல்களையும், தெரப்பிகளையும் வழங்கினார்கள் என்றாலும் அவற்றையெல்லாம் தொகுத்துப் புரிந்து கொண்டு குழந்தைக்கான அன்றாடப் பயிற்சிகளை திட்டமிடுவது பெற்றோரால் மட்டுமே இயலும் என்பதையும் கண்டுகொண்டோம்.
பொதுவாகவே குழந்தை வளர்ப்பில் பெற்றோர் முதலில் மனதில் நிறுத்திக்கொள்ளவேண்டிய முக்கியமான விஷயங்களில் ஒன்று – வேறெந்த குழந்தையோடும் நம் குழந்தையை ஒப்பிடவே கூடாது. இது சிறப்புக்குழந்தைகளின் பெற்றோருக்கும் பொருந்தும்.
பொதுவான வளர்ச்சிப் படிநிலைப் பட்டியலோடு கூட நம் குழந்தையை ஒப்பிட்டுக் கொண்டே இருத்தல் கூடாது. சிறப்புக்குழந்தையின் பெற்றோர் நம் குழந்தையின் நேற்றையும், இன்றையையும் மட்டுமே ஒப்பிட்டுக் கொண்டு நமது குறிக்கோள்களை அமைத்துக் கொள்ள வேண்டும்.
கண்காணிப்பு தேவை
எங்களுக்கு பரிந்துரைக்கப்பட்ட தெரபி வகுப்புகளுக்கு தொடர்ந்து செல்லத்தொடங்கினோம். தொடக்க நிலையில் பெரிய மாற்றங்கள் ஏதும் நிகழவில்லை என்றாலும் மூன்று மாதங்களுக்குப் பின் பையனின் செயல்களில் சின்னச் சின்ன முன்னேற்றத்தை காணமுடிந்தது.
கொஞ்ச நாட்கள் சென்றதும் எங்கள் தெரபிஸ்ட், மகனைப் பற்றி விரிவான மதிப்பீடு (Assessment) ஒன்று எடுக்கலாம் என ஆலோசனை தெரிவித்தார். நான் சிறப்புக்கல்வி பயிலும்போதுதான் ஏன் இப்படியான கண்காணிப்பு தேவை என்பதை உணர்ந்துகொண்டேன்.
ஆறு மாதங்களுக்கு / ஆண்டிற்கு ஒருமுறை விரிவான மதிப்பீடு எடுக்கவேண்டும். அப்போதுதான் குழந்தையின் வளர்ச்சி சரியான பாதையில் இருக்கிறதா என்பதை அறிந்துகொள்ள இலகுவாக இருக்கும்.
பொதுவாக பெரிய மருத்துவமனைகள் அனைத்திலுமே இன்று தேவையான எல்லாத் துறைகளும் இருப்பதால் இத்தகைய மதிப்பீடுகளைச் செய்து கொள்ளமுடியும் என நினைக்கிறேன்.
தமிழகத்தைப் பொறுத்தவரை, மத்திய அரசின் நிறுவனமான நிப்மெட்(National Institute for Empowerment of Persons with Multiple Disabilities – NIEPMD), இது போன்ற சேவைகளுக்கு நம்பகமான நிறுவனம். மதிப்பீட்டுக் குறிப்புடன், பெற்றோர் கவனம் செலுத்தவேண்டிய விஷயங்கள் என்னென்னவெல்லாம் என்ற வழிகாட்டலையும் தருவார்கள். குடும்ப உறுப்பினர்களுக்கான கவுன்சிலிங்கையும் தேவையைப் பொறுத்து அளிப்பார்கள்.
பெரும்பாலான சிறப்புப் பள்ளிகளும் இத்தகைய மதிப்பீடுகளைச் செய்து தருகின்றன. அவற்றையும் பயன்படுத்திக் கொள்ளலாம்.
இலக்கு தீர்மானித்தல்
இலக்கு (Goal setting) அவசியம். எங்கள் பிள்ளைக்கு சட்டை பட்டன் போடுவதில் தொடங்கி, தானே உணவு எடுத்து உண்பதுவரையிலான ஒவ்வொரு செயலையும் இன்று அவன் செய்ய, இந்த இலக்கு நோக்கிய திட்டமிடல் உதவியது.
மூன்று மாதத்தில் சட்டை பட்டன் போடவேண்டும், 3 மாதத்தில் உணவு உண்ணவேண்டும் என இலக்கு தீர்மானித்து, தெரப்பிஸ்டுகளின் வழிகாட்டுதல்களோடு வேலை பார்த்தோம். காரியம் கைகூடியது. ஒவ்வொரு பெற்றோரும் தங்கள் குழந்தையிடம் கொண்டுவரவேண்டிய ஒவ்வொரு மாற்றத்திற்கும் இப்படி இலக்கு தீர்மானித்து, அதை நோக்கி உழைத்தால் நல்ல பலனைப் பெற முடியும்.
விடாமுயற்சி தேவை
ஓர் இலக்கை இப்போது அடைய முடியவில்லை என்றால் எப்போதுமே அது முடியாத விஷயம் என்று பொருளில்லை. குழந்தைக்கு ஒரு விஷயத்தை இப்போது கற்றுக்கொடுக்க முடியவில்லை என்றால் அதையே மீண்டும் மீண்டும் செய்து குழந்தைக்கும் நமக்கும் மன அழுத்தத்தை ஏற்றிக்கொள்ள வேண்டியதில்லை. அதை ஒதுக்கிவிட்டு வேறு ஏதேனும் புதிதாகக் கற்றுக்கொடுக்க முயற்சிக்கலாம். சிறிது காலம் சென்றபின் (பொதுவாக ஆறு மாதம் கழித்து) மீண்டும் முன்னர் கைவிட்ட, அதே செயலை வேறு முறையில் சொல்லித்தர முயற்சிக்கும் போது பலன் கிடைப்பதை கண்கூடாகக் கண்டிருக்கிறோம்.
ஆர்வத்தைக் கண்டறியுங்கள்
முன்னர் சொன்னது போல ஆட்டிச நிலையாளர்களில் சிலருக்கு அதீதமான தனித்திறன்கள் (Splinter skills) இருக்கக்கூடும். அவற்றைக் கண்டறிவதன் மூலம் அவர்களின் வளர்ச்சியை துரிதப்படுத்துவதோடு அவர்களின் நல்வாழ்வுக்கான எதிர்காலத் திட்டங்களுக்கும் பயனுண்டு. அப்படி தனித்திறன் எதுவும் இல்லாவிடினும் கூட அவர்களின் ஆர்வம் செல்லும் திசையைத் தெரிந்து கொண்டால் அவர்களை உற்சாகப்படுத்தவும், நடத்தை சிக்கல்களில் இருந்து வெளிக் கொணரவும் அந்த ஆர்வங்களைப் பயன்படுத்தலாம்.
எங்கள் மகனைப் பொறுத்தவரை அவனுக்கு மொழிகளிலும், இசையிலும் அதீதமான நாட்டமும், திறமையும் இருந்தது. எனவே இசையையே அவனுக்கான எல்லா பயிற்சிகளிலும் ஊக்கப்பரிசாக(Reinforcement) பயன்படுத்தத் துவங்கினோம். இசை கேட்பது, வாகனங்களில் பயணிப்பது, ஊஞ்சல் ஆடுவது என அவர்களின் விருப்பங்களைக் கண்டுகொள்வது அவர்களின் வளர்ச்சிப் பாதையை வடிவமைக்க மிகவும் உதவியாக இருக்கும்.
படங்களைப் பயன்படுத்துங்கள்:
பெரும்பான்மை ஆட்டிச நிலையாளர்கள் பார்ப்பதன் மூலம் கற்பவர்கள் (Visual Learners). எனவே எந்தவொரு கட்டளையையும் வாயால் மட்டும் சொல்லாமல் படமாகக் காட்டி அவர்களுக்கு விளக்குங்கள். அது இன்னமும் விரைவாகப் புரியவைக்கும்.
ஆட்டிச நிலைக் குழந்தைகளின் வளர்ச்சி தாமதம் மட்டுமே ஆகும். தடைபடக் கூடிய ஒன்றல்ல. பெற்றோரின் தொடர் முயற்சியும், சீரான பயிற்சிகளும் அவர்களையும் வளர்ச்சி என்னும் ஏணியில் ஏற வைத்தே தீரும்.
எல்லா முயற்சிகளுக்கும் அடிநாதமாக இருக்க வேண்டியது – நம் குழந்தையால் எதையும் கற்றுக்கொள்ள முடியும் என்ற நம்பிக்கை மட்டுமே. நாம் பேசுவதை, கற்றுத்தருவதை குழந்தைகள் கவனிக்காதது போலத் தெரிந்தாலும் கூட நம்பிக்கை இழக்காமல் ஒவ்வொரு செயலையும் தொடர்ந்து பயிற்றுவித்துக்கொண்டே இருங்கள்.
எதிர்பாரா ஒரு கணத்தில் அவர்கள் அதைக் கற்றுக் கொண்டிருப்பதை உணர முடியும். அத்தகைய சின்னச் சின்ன சந்தோஷங்களே நம் வாழ்வை வசந்தமாக்கும்.
ஏப்ரல் 2020 , செல்லமே இதழில் வெளியான கட்டுரை
கட்டுரையின் தகவல்கள் அனைத்தும் அருமை…
சிறப்பான விளக்கங்கள்… நன்றி…