இதுவரை கோபம், வருத்தம், இயலாமை, விருப்பின்மை என எல்லா எதிர்மறை உணர்வுகளுக்கும் அழுகை ஒன்றையே வடிகாலாகப் பயன்படுத்தி வந்தான் கனி. சில வாரங்களாக, குறிப்பாக இந்த லாக்டவுன் காலகட்டத்தில் உணர்வுகளை சற்றே நிறம் பிரித்து அறியத் தொடங்கியிருக்கிறான் என்று தோன்றுகிறது.
கோபம் வந்தால் உடனடியாக அழுதுவிட்டாலும், நீண்ட நேரத்திற்கு சம்பந்தப்பட்டவரிடம் பேசாமல் இருப்பது, அவரைக் கண்டு கொள்ளாதது போல நடிப்பது போன்ற உபாயங்களைக் கைக்கொள்ளத் தொடங்கியிருக்கிறான்.
தானாக பல் தேய்க்கத் துவங்கியபோது ஒரளவு ஒழுங்காகத் தேய்த்துக் கொண்டிருந்தவன், நடுவில் பெயருக்கு பல் தேய்ப்பது என்று ஒப்பேற்ற ஆரம்பித்தான். விளைவாக பல்லில் அழுக்குப் படிந்து, சமீபத்தில் பல் மருத்துவரிடம் சென்று சுத்தம் செய்து வர வேண்டியிருந்தது. எனவே இந்த விடுமுறைக் காலத்தில் மீண்டும் அவனது பல்தேய்ப்பை சரியாக்க வேண்டும் என்று திட்டமிட்டு பொறுப்பை பாலாவிடம் ஒப்படைத்தேன்.
அப்பா, பிள்ளை இருவருக்குமே பொறுமை மிகவும் குறைவு என்பதால் காலை நேரம் ஒரே களேபரமாகத்தான் இருக்கிறது. இதில் அவ்வப்போது பொறுக்க முடியாமல் பாலா பிரஷ்ஷைப் பிடுங்கி அழுத்தி தேய்த்துவிடுவதில் கனிக்கு சில சமயம் ரொம்பவே ரோஷமாகி விடுகிறது. அப்போதைக்கு அழுதாலும் பிறகு நெடு நேரம் வரை பாலாவிடம் பேசாமலிருப்பது என்று ஆரம்பித்திருக்கிறான். பாலா ஹாலில் இருந்தால் கிச்சனுக்கு வந்து என் பக்கத்தில் உட்கார்ந்து கொள்வது, அவர் கிச்சனுகு வந்தால் இவன் ஹாலுக்கு வந்துவிடுவது என்று அலட்டிக் கொள்கிறான். அதே நேரம் வேண்டுமென்றே என்னிடம் ஏதேனும் பேச்சுக் கொடுக்கிறான் – ஒருத்தரை மட்டும் உதாசீனம் செய்கிறாராம். பாலா போய் சாரி சொன்னாலும் கண்ணைப் பார்க்காமலே இட்ஸ் ஒகே என்கிறான். சிலமணி நேரங்களாவது ஆகிறது, அவன் கோபம் மலையிறங்க.
நினைத்துப் பார்க்கையில் சிரிப்புதான் வருகிறது.
இன்றும் கோபத்தோடு எனக்கென்று ஒரு நாடு, என் நாடு, என் மக்கள் என்று இருந்து கொள்கிறேன் என்று ஹாலுக்குப் போனவனைப் பற்றி பேசி சிரித்துக் கொண்டிருந்தோம். சிரிப்புக்கு நடுவே “இப்பவே இவ்ளோ கோபம் வருதே, 20 வயசுக்கெல்லாம் கோபம் வந்தா என்னை வீட்டை விட்டு அனுப்பிருவானோ” என்று தன் பீதியையும் சொல்லிக் கொண்டிருந்தார் பாலா. “அப்படி ஒருவேளை அவ்ளோ இண்டிபெண்டண்டா ஆகி, நம்மளை வெளிய போன்னு சொல்லிட்டான்னா, அதைவிட நம்ம வாழ்கைக்கு பெரிய வெற்றி வேறென்ன இருக்கு?” என்றேன். ஆமாம் என்று பாலாவும் ஆமோதித்தார்.
குழந்தைகளிடமிருந்து நிறைய கற்றுக் கொள்ளலாம்…!
பழனிமலை முருகன்! கோபம் வந்தாலும் கண்ணன் அழகு தான் அவனுக்கும் சுதந்திரம் வரட்டும்.