ஒவ்வொரு ஆறாவது இந்தியனுக்கும் மனநலம் சார்ந்த உதவிகள் தேவைப்படும் நிலையில் இன்று இருக்கிறோம். நகர்ப்புறங்களில் மன நலச் சிக்கல்கள் கூடுதலாகக் காணப்படுகிறது. பொருளாதாரப் படிகளில் கீழிறங்க, இறங்க பாதிப்புகள் அதிகமாகிறது என்றெல்லாம் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
மனநலச் சிக்கல் எனும் பதத்திற்குள் பல நூறு வகைமைகள் உண்டு. அதில் முக்கியமானதுதான், மனச்சிதைவு. மனச்சிதைவு (Schizophrenia) நோய் என்பது மனக் குழப்பம், மாயக் காட்சிகளைக் காண்பது, மற்றவர் கேளாத குரல்களைக் கேட்பது, கற்பனையான பயங்கள், புனைவான குற்றச்சாட்டுகளை பிறர் மீது வைப்பது என பலவிதக் கூறுகளைக் கொண்டது.
முன்பெல்லாம் மன நல பிரச்சனைகளுக்கு ஆட்படுபவர்களை சங்கிலிகொண்டு, கட்டி வைக்கும் வழக்கம் உலகெங்கும் பரவலாக இருந்தது. (இன்றும் சில இடங்களில் அப்படியான வழக்கம் தொடருவது வேதனையான விஷயம்)
பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ‘பிலிப் பினைல்’ எனும் மருத்துவர், 1792, மே 24ஆம் தேதி, கொட்டடிகளுக்குள் சங்கிலிகளால் கட்டி வைக்கப்பட்டிருந்த மனநலம் குன்றிய நோயாளிகளை கட்டவிழ்த்து விட்டார். அதை நினைவுகூறும் விதமாக, 1986ஆம் ஆண்டில் மே 24ஆம் தேதி உலக மனச்சிதைவு விழிப்புணர்வு நாளாக அறிவிக்கப்பட்டது. இன்றும் அனுசரிக்கப்படுகிறது.
மனச்சிதைவு கொண்டோரை பேய் பிடித்திருப்பதாகவோ அல்லது புனிதர்களாகவோ சாமியார்களாகவோ நினைப்பது என்று பல்வேறு பொய்யான கற்பிதங்களோடு அணுகுவதே இங்கு அதிகம். அத்தகைய தவறான கற்பிதங்களை போக்குவதே இந்த விழிப்புணர்வு தினத்தின் நோக்கம்.
மனச்சிதைவு நோய்க்கு ஆளாகிறவர்களுக்கு முறையான மருத்துவ சிகிச்சையும், சுற்றியுள்ளோரின் அரவணைப்பும் மிக மிக அவசியம். நம்மைச் சுற்றி வாழ்ந்து வருபவர்கள், குடும்பத்தினரின் மனநலன் பாதிப்படைவதாகத் தெரிந்தால், அவர்களின் நடவடிக்கைகளில் மாற்றமிருந்தால் தகுந்த மனநல ஆலோசனைகளைப் பெற்றுத் தர முயல்வோம்.
செய்தியை பகிர்வோம்! மனச்சிதைவு நோய்க்கு ஆளானவர்களிடமும் அன்போடும் அனுசரணையோடும் நடந்துகொள்வோம்.!!
இன்றைய சூழலில் மனச்சிதைவு அடையாமல் வாழ்வதே பெரிய தவம்…