நேற்றிலிருந்து பத்தாம் வகுப்பு ஆல் பாஸ் தொடர்பான பதிவுகளை கவனித்ததில் ஒரு விஷயம் புரிபட்டது. 90% மனிதர்கள் அப்பாடா என்று நிம்மதியும், மகிழ்ச்சியும் அடைகையில் 10% பேர் விதவிதமாக வயற்றெரிச்சலைக் காட்டிக் கொண்டே இருக்கின்றனர்.
கொரோனா புண்ணியத்தில் பாசானவர்கள் என்று சர்டிஃபிகேட்டில் கரும்புள்ளி செம்புள்ளி குத்தச் சொல்வது முதல் ஸ்டேட் ஃபர்ஸ்ட் வரக் கூடிய மாணவர்களின் கனவுகளில் மண்ணள்ளிப் போட்டுட்டாங்களே எனும் வகைப் பிலாக்கணங்கள் வரை விதவிதமான வெளிப்பாடுகள். ஆனால் வழக்கம்போல அவையெல்லாமே தரமே எங்கள் தாரக மந்திரம் எனும் ஒரே குரூப் ஆசாமிகளுடையதுதான்.
உங்களுக்கு கல்பனா குமாரியை நினைவிருக்கிறதா? நீட் தேர்வில் தேர்ச்சி பெறாததால் தற்கொலை செய்து கொண்ட பிரதீபா எழுதிய அதே வருடத்தில் அதே தேர்வில் இந்திய அளவில் முதலிடம் பெற்ற பத்தரை மாற்றுத் தங்கம். அவர் பீகாரில் உள்ள பள்ளியில் +1, +2 படிக்கும் போதே டெல்லியில் உள்ள கோச்சிங்க் செண்டர் ஒன்றிலும் நீட் தேர்வுக்காக படித்து வந்த சாதனையாளர். இரண்டு தேர்விலும் முதலிடம் பெற்ற திறமையாளர்.
இவராவது பத்தாம் வகுப்பிற்குப் பிறகுதான், அதுவும் தனியான பயிற்சி நிறுவனத்தில்தான் நீட் பயிற்சி பெற்றார். ஆனால் இப்போதெல்லாம் பல பள்ளிகளில் 6ஆம் வகுப்பிலிருந்தே ஏ, பி, சி, டி என்று வகுப்புகளைப் பிரிப்பதில்லை. ஐஐடி நுழைவுத் தேர்வுக்குப் படிப்பவர்கள், நீட் தேர்வுக்குப் படிப்பவர்கள், மற்ற மக்குகள் என்கிற வகையில்தான் பிரிவினையே நடக்கிறது.
மாணவர்களின் மூளைகளைத் துளைத்து, நுழைவுத் தேர்வுக்கான சூத்திரங்களை புகட்டிக், குறுகத் தரித்தவர்களாக அவர்களைத் தயாரிக்கும் இந்தத் தொழிற்சாலைகளில் சாதாரணப் பாடங்களை நடத்தவும், காலாண்டு, அரையாண்டுத் தேர்வுகளை நடத்தவும் நேரமிருக்குமா என்ன?
நடுத்தர, உயர் நடுத்தர வர்க்கப் பெற்றோர்களில் பலரும் இத்தகைய தொழிற்சாலைப் பள்ளிகளையே தேர்ந்தெடுக்கவும் செய்கின்றனர். சாத்தியப்படும் எல்லா வழிகளிலும் பணம் சம்பாதித்து, அதை வருங்காலத் தலைமுறைக்கு சேர்த்து வைப்பதோடு குறுக்கு வழியிலேனும் ப்ரொபஷனல் டிகிரிகளையும் பிள்ளைகளுக்கு ஏற்பாடு செய்துவிட வேண்டும் என்ற வெறியே இவர்களை ஆட்டி வைக்கும் விசை.
இந்தப் போக்கை உணர்ந்து கொண்டதால்தான் அரசு +1க்கே பொதுத் தேர்வு முறையெல்லாம் கொண்டுவர வேண்டியிருந்தது.
இந்நிலையில் வருகைப் பதிவேடு, காலாண்டு மற்றும் அரையாண்டுத் தேர்வு மதிப்பெண்களையெல்லாம் வைத்து பொதுத் தேர்வு முடிவுகளை வெளியிட்டால் இவர்களின் கணக்கு வழக்குகள் என்னாவது?
திருடனுக்குத் தேள் கொட்டியது போல இதை அப்படியே வெளியே சொல்ல முடியாதல்லவா? அதனால்தான் ததாம(தரமே எங்கள் தாரக மந்திரம்) குரூப்புக்கு அரசின் இந்த முடிவு மிளகாய் அரைத்துப் பூசியது போல எரிகிறது.
குளிர்சாதனப் பெட்டியில் தண்ணீர் இருந்தால் எடுத்து தலையிலும் ஊற்றிக் கொண்டு, உள்ளுக்கும் பருகவும். வெந்தயம், இளநீர், கற்றாழை போன்ற பதார்த்தங்களைத் தொடர்ந்து நான்கைந்து நாட்களுக்கு சாப்பிடவும். வேறென்ன சொல்ல?

பணம் எனும் பிணம்…