லைக் பண்ணுங்க, ஷேர் பண்ணுங்க


இந்த லாக்டவுனில் எனக்குப் புதிதாக ஆரம்பித்திருக்கும் வியாதி கன்னா பின்னாவென யூட்யூப் வீடியோக்களைப் பார்ப்பது. எந்தச் சேனலும் சீண்டாத பழைய படங்கள்,  புதிதாக செஃப் அவதாரம் எடுத்தவர்களின் சமையல் சேனல்கள், ஆன்மீகப் பேச்சாளர்கள் என்று கலந்து கட்டி பார்த்துத் தள்ளிக் கொண்டிருக்கிறேன்.

 

முதலில் கருத்தாளர்களின் செய்தி அப்டேட்டுகள். ஏற்கனவே பத்திரிக்கைகள், செய்திச் சேனல்கள், வாட்ஸ் ஆப்புகளில் வந்த அதே செய்திகளை அவரவர் குரலில் சொல்வதற்குள் நம் காதுகள் படும் பாடு இருக்கிறதே… தொலைக்காட்சிகளில் குறிப்பாக பாடல், காமெடிக்கான சேனல்களில் தொகுப்பாளராக வருபவர்கள்தான் இந்த கருத்தாளர்களின் ஆதர்சம் போல.

அவர்களைப் போல பேசுவதாக நினைத்துக் கொண்டு, அவர்களைவிடப் பன்மடங்கு அபத்தமான உடல் மொழியோடும், பேச்சு மொழியோடும் பேசுகிறார்கள். கடுகளவு கூட புதிதாக எந்தத் தகவலும், சிந்தனையும் இருப்பதில்லை. பெரும்பாலும் பிக்பாஸ் மாதிரியான நிகழ்வுகளை விமர்சித்து அந்த வெளிச்சத்தில் பிரபலமானவர்களாக இருக்கிறார்கள். அதிகமும் சினிமா செய்திகள்தான் இவர்களின் தூண்டில்.

 

இந்தக் கருத்தாளர்களின் வரிசையில் சேர கீழ்காணும் தகுதிகள் போதுமென எண்ணுகிறேன்.

  • ஹரி பட நாயகர்களைப் போல மூச்சுவிடக்கூட இடை நிற்காமல் பேச வேண்டும் – அப்போதுதான் நாம் உளறுவதையெல்லாம் யாரும் கண்டுபிடிக்க முடியாது.
  • எந்தவொரு துறை சார்ந்த அறிவும் இருக்கவே கூடாது – அப்படியானால் மட்டும்தான் முழுமுற்றான தன்னம்பிக்கையோடு வாட்சப் வதந்திகளையே ஆதாரமாகக் கொண்டு அடித்து விட முடியும்.
  • வீடியோ எடுக்கிற நேரம் போக மீதி நேரமெல்லாம் கமெண்ட் பகுதியிலேயே கூடாரமடித்து தங்கிவிட வேண்டும் – அப்போதுதான் வாசக ரசனையைப் புரிந்து கொண்டு அதற்கேற்ப அடுத்த நாளுக்கான மசாலாவை அரைக்க முடியும்.

இந்தக் கருத்தாளர்களின் ரசிகர்கள் எல்லாம் கொண்டுள்ள ஆதரவு வெறியைப் பார்த்தால் கூடிய சீக்கிரம் எம்ஜியார் X சிவாஜி, ரஜினி X கமல், அஜித் X விஜய் ரசிகர்கள் ரேஞ்சுக்கு சண்டை சச்சரவெல்லாம் களை கட்டும் போலத்தான் இருக்கிறது.

++

எங்கள் ஊரில் ஒரு ஜோசியர் இருந்தார். ஸ்கேன் எல்லாம் வந்திராத காலத்திலேயே கருவிலிருப்பது ஆணா பெண்ணா என்று அறிந்து சொல்வதில் அவர் கில்லாடி. அவர் சொல் பொய்த்ததே இல்லை. அவரின் தொழில் ரகசியத்தை என் அப்பாவிடம் ஒரு நாள் சொல்லிக் கொண்டிருந்தார்.

யார் வந்து கேட்டாலும் அந்த நேரத்தில் ஆணோ பெண்ணோ வாய்க்கு வருவதை சொல்லி விடுவாராம். ஆனால் அந்தத் தேதியில், கேட்டவர் பெயரை எழுதி அருகில் சொன்னதற்கு நேர் மாறாக எழுதியும் வைத்துக் கொள்வாராம். அதாவது ராமுவுக்கு ஆண் குழந்தை என்று சொன்னால், டைரியில் ராமு – பெண் குழந்தை என்று எழுதிக் கொள்வார். இவர் சொன்னபடி ஆண் குழந்தை பிறந்துவிட்டால் சிக்கலில்லை. பெண் குழந்தை பிறந்து, ராமு வந்து சண்டை பிடித்தால் இவர் தன் டைரியை எடுத்துக் காட்டி, நான் சரியாகத்தான் சொன்னேன், நீதான் எதோ தவறாகப் புரிந்து கொண்டுவிட்டாய் என்று சாதித்துவிடுவாராம்.

 

இப்போது எதற்கு இந்தக் கதையெல்லாம் என்கிறீர்களா? ஒரு சிறுவனைப் பிடித்து ஜோசியம், ஆயுர்வேதம், ஆர்கானிக் விவசாயம் என்று எல்லாவற்றுக்குமாய் தயார் செய்து வருகிறார்கள். அந்தப் பையனும் எப்போது ஜோசியம் சொன்னாலும் அதில் ஒரு ஓரமாக ஒரு வியாதி வரும், ஒரு போர் வரும், ஒரு பொருளாதர பின்னடைவு வரும் என்றெல்லாம் சொல்லி வைக்கிறான். நிஜமாகவே ஏதேனும் விபரீதமானால் எங்க பால ஜோசியர் அப்பவே சொல்லிருக்கார் பாத்தீங்களா என்று அவரது அடிப்பொடிகள் கிளம்பி விடுகிறார்கள். ஒவ்வொரு மாதமும் இந்த மாதத்தோடு கொரோனோ காணாமல் போகுமென்று அந்தப் பையனும் தளராமல் சொல்லிக் கொண்டே இருக்கிறான். என்றேனும் ஒரு நாள் நிஜமாகவே வைரஸுக்கு மருந்து கண்டுபிடிக்கப்பட்டு, அது குறையும் போதோ, அல்லது காணாமல் போகும் போதே அச்சிறுவனின் முந்தைய ஏதாவது ஒரு விடியோவைச் சுட்டிக்காடி, நாங்கள்தான் சரியாகக் கணித்தோம் என்று சொல்லிக் கொள்வார்கள் போலும்.

 

இன்னொரு ஜோசியரோ, தினசரி ராசி பலனில் இன்று  மேஷ ராசிக்காரர்கள் மனுஷ்யபுத்திரனையும், விருச்சிக ராசிக்காரர்கள் விமலாதித்த மாமல்லனையும், ரிஷப ராசிக்கார்கள் ராஜேஷ் குமாரையும் பாராயணம் செய்தால் வாழ்வு வளம் பெறும் என புதுமையான பரிகாரம் சொல்லி பகீரிட வைக்கிறார். இணையத்தில் எழுதும் பலரையும் அவர் அறிந்து வைத்திருக்கிறார். அவருக்கு என்றாவது எழுத்தாளர் பஞ்சம் வரும்போது பேஸ்புக் பிரபலங்கள் பெயர்களை சொல்லுவார் என நினைக்கிறேன். அப்படி ஏதாவது  நடந்துவிட்டால்.. ஐயகோ..

 

இருப்பதிலேயே மிக மோசமான நிலையிலிருப்பது சமையல் குறிப்பு நிகழ்ச்சிகள்தான். திருமதி. ரேவதி ஷண்முகம் அவர்களின் கவிஞர் வீட்டு சமையல் போல எளிமையான, அதே நேரம் பயனுள்ள சேனல்களும் சில இருக்கின்றனதான். ஆனால் பெரும்பான்மையான சமையல் சானல்கள்  அபத்தக் களஞ்சியம்தான்.

 

ஒரு அம்மா சொல்றாங்க, ரவைய நல்லா வறுத்துக்கணும். அப்பத்தான் கட்டி பிடிக்காம இருக்கும்னு.  ரவைக்கெல்லாம் கட்டிபிடி வைத்தியம் தெரிந்திருக்கும் என்று நான் அன்னைக்குத்தான் தெரிஞ்சுகிட்டேன்.

 

 

இன்னொரு அம்மிணி “ நான் வேறொரு யூட்யூப் சேனலில் பார்த்த ரெசிப்பிய இப்ப இங்க செஞ்சு காட்டப் போறேன்னு.” சொன்னதைக் கேட்டதும் அதிர்ச்சியாகிட்டேன்.  வீடியோவுக்கும் கலர் ஜெராக்ஸ்  போடுறாங்கன்னு அப்பத்தான் தெரிஞ்சுகிட்டேன்.

 

 

அதிலும் இந்த சமையல் வல்லுநர்களுக்கென்று தனியாக பிரத்யேக ’பண்ணி’த் தமிழ் ஒன்று இருக்கிறது. ஆஹா.. என்னவொரு அபாரமான மொழி.

“முதல்ல ஸ்டவ் ஆன் பண்ணிக்கணும். ரைஸ் ஃப்ளாரை எடுத்து,  ஒரு பான்ல போட்டு,  கொஞ்சம் ஹீட் பண்ணிக்கணும். அப்புறம் அதுல கொஞ்சம் சால்ட் ஆட் பண்ணிட்டு, அப்பறம் ஹாட் வாட்டர் சேத்து மிக்ஸ் பண்ணிக்கணும். அப்புறம் அதை ரவுண்ட் ஷேப்ல மோல்ட் பண்ணிக்கணும். ஒரு இட்லி பிளேட்ல ஆயில் கிரீஸ் பன்ணிட்டு, அதுல இந்த ரைஸ் ஃப்ளார் பால்ஸ ஃபில் பண்ணிட்டு, இட்லி பாட்ல வச்சு ஹீட் பண்ணணும். ஸ்டீம்ல 10 மினிட்ஸ் குக் பண்ணிட்டு எடுத்தீங்கன்னா, டேஸ்டியான, ஹெல்தியான மணி கொளுகட்டை ரெடி ஆகிடும்.” என்று அவர்கள் அசராமல் பேசுவதைக் கேட்டால் உங்களுக்கு கண்டிப்பாக உங்கள் மொழி மறந்துவிடும்.

இதெல்லாம் போதாதென்று , உலக யூட்யூபர்களின் ஆப்த வாக்கியங்களான, “பிடிச்சிருந்தா லைக் பண்ணுங்க, சப்ஸ்கிரைப் பண்ணுங்க, பெல் பட்டனை பிரெஸ் பண்ணுங்க”ன்னு வேற ஐந்து நிமிடத்திற்கொருமுறை சொல்லுகிறார்கள்.

 

சமையல் குறிப்புகள் ஒரு புறம் என்றால் உடல் நலக் குறிப்புகளும், அழகுக் குறிப்புகளும் இன்னொரு புறம்.  சில ஆன்மீகப் பேச்சாளர்கள் உடல் நலக் குறிப்புகளையும், மருத்துவர்கள் அழகுக் குறிப்புகளையும் சொல்லும் வீடியோக்கள் எல்லாம் கூட உண்டு அதிலும் ஒரு மகப்பேறு மருத்துவர் முடி கொட்டும் சிக்கலுக்கு தீர்வு சொல்லும் வீடியோக்கள் மட்டும் நான்கு செய்திருந்தார். அபிநய சரஸ்வதியான அந்தம்மா ஒவ்வொரு வீடியோவிலும் வெவ்வேறு உடையலங்காரத்தோடு வீற்றிருக்கிறார்.

ஆரம்பம் எல்லாம் நாலு வீடியோவிலும் ஒன்று போலவேதான் இருக்கிறது. முடி உதிர்வைத் தடுக்க ஒரு எண்ணெய் தயாரிப்பதைப் பற்றி பேசுகிறார். ஒரு வீடியோவில் நாட்டு பொன்னாங்கணி, கரிசலாங்கண்ணி, கறிவேப்பிலை ஆகியவற்றை அரைத்துக் கொள்ள வேண்டும் என்கிறார். அடுத்த வீடியோவில் கரிசலாங்கன்னி, வெந்தயக் கீரை, கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்க்க வேண்டுமென்கிறார். இன்னொன்றிலோ பொன்னாங்கண்ணி, மருதாணி, புதினா, கீழநெல்லி எல்லாம் போட்டு அரைக்க வேண்டும் என்றார்.

ஒவ்வொரு முறையும் அவர் எண்ணெய் காய்ச்ச, சமையலறைக்குள் நுழைந்தும் கண்ணில் படும் முதல் மூன்று பச்சை வஸ்துக்களை எடுத்து, அரைத்து,  எண்ணெய் காய்ச்சுவது அவரது வழக்கம் போலிருக்கிறது. என்றேனும் அவர் கண்ணில் பச்சை மிளகாய் முதலில் பட்டுத் தொலைக்காமலிருக்க வேண்டும்.

 

அடுத்து அந்த ஆன்மீக சொற்பொழிவாளர். இவர்  கொய்யாவின் மகிமைகளைப் பற்றி மட்டும் அரைமணி நேரம் பேசுகிறார். நெல்லிக்காயைப் பற்றி மூச்சுவிடாமல் ஒரு மணி நேரம் பேசுகிறார். நோய் எதிர்ப்பு சக்தி, தூக்கப் பிரச்சினை எல்லாவற்றுக்கும் கைவைத்தியங்களை அள்ளி விடுகிறார். அப்படியே உளவியல் பக்கம் திரும்பி குடும்ப ஒற்றுமை, பிள்ளை வளர்ப்பு இவற்றுக்கெல்லாம் டிப்ஸ். அப்படியே லெஃப்ட் இண்டிகேட்டர் போட்டு ரைட்டில் கை காட்டி விட்டு நேராக வியாபர வளர்ச்சி, வாஸ்து பரிகாரம் என்று வேறு லெவலில் தாக்குகிறார்.

நடு நடுவே மறக்காமல் ஆன்மீக விஷயங்களையும் அவ்வப்போது சொல்கிறார் என்பதுதான் ஒரே ஆறுதல். அதிலும் கூட பூஜைகள் பரிகாரங்கள் என்று போவதா, பக்தி இலக்கியங்களை விளக்குவதா, தத்துவார்த்தமான விளக்கங்களைக் கொடுப்பதா எது அதிக லைக்குகளைத் தரும் என்று புரியாததால் வகைக்கு ஒன்று என்று வாரத்திற்கு நான்கைந்து ஆன்மீகப் பதிவுகளையும் போட்டு வைக்கிறார். பார்க்கும் நமக்குத்தான் தலை சுற்றுகிறது.

ஊர்நாட்டுப் பக்கம்  சீசனுக்கேற்ற காயை எடுத்து ஊறுகாய் ஜாடியில் உப்பும், மிளகாய்ப் பொடியும் போட்டு குலுக்கி ஊற வைப்பார்கள். அதுபோல பொதுவெளியில் கிடைக்கும் எல்லா விஷயங்களையும் குலுக்கிப் போட்டு வைத்திருக்கும் ஒரு இடம்தான் இந்த யூட்யூப். மன அழுத்தங்களை ஏற்படுத்தும் அரசியல் செய்திகள், ஆட்சி செய்யும் அரசின் அலட்சியம். மக்களின் அறியாமை என்றெல்லாம் டென்ஷன் ஆகாமல், யூட்டியூப்பின் உள்ளே போய் ஏதேனும் மேற்குறிப்பிட்ட வகைமை வீடியோக்களைப் பார்க்கலாம், நன்றாக பொழுது போகும்.

 

பி ஹாப்பி!!

About லக்ஷ்மி பாலகிருஷ்ணன்

சொல்லிக்கொள்ளுமளவு பெரிதாக ஏதுமில்லை. :)
This entry was posted in அனுபவம், உதிரிப்பூக்கள், எண்ணம், கட்டுரை, சமூகம், விமர்சனம். Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s