‘புத்தியுள்ள மனிதரெல்லாம் வெற்றி காண்பதில்லை’ என்ற பாடலைக் கேட்டிருப்பீர்கள். இவ்வரி பொதுவாக நல்லூழ், இறை ஆசி போன்றவற்றைக் குறிப்பதாக இருக்கலாம். ஆனால் மாணவப் பருவத்தில் இவ்வாறு நிகழ்வதற்கான முக்கியமான காரணியாக இருப்பது கற்றல் குறைபாடு.
கல்வியில் பின் தங்கியிருக்கும் அனைத்துக் குழந்தைகளும் கற்றல் குறைபாடு உடையவர்கள் அல்ல. நிஜமாகவே நுண்ணறிவுத் திறன்(IQ) குறைவால் கல்வி கற்பதில் சிரமப்படும் குழந்தைகளும் உண்டு. ஆனால் கற்றல் குறைபாடு உள்ள குழந்தைகளின் நுண்ணறிவுத் திறன் சராசரியாகவோ அல்லது சராசரிக்கு அதிகமாகவோ இருக்கும். அதே நேரம் வகுப்பறையின் வழக்கமான கற்றல் முறையில் பாடங்களை உள்வாங்கிக் கொள்வதில் சிரமம் இருக்கும்.
வெளிப்படையாகத் தெரியாத இந்தக் குறைபாடு அவர்களின் வாழ்நாள் முழுமைக்கும் தொடரக் கூடிய ஒன்றாகும். மூளையின் தொடர்புக் கண்ணிகளில் (Brain wiring) உள்ள சிக்கல்கள், மூளையின் வலது இடது பகுதிகளின் ஒத்திசைவில் ஏற்படும் சிக்கல்கள் போன்றவற்றால் ஏற்படும் இந்தக் கற்றல் குறைபாட்டை ஆசிரியர்களும், பெற்றோர்களும் பெரும்பாலும் புரிந்து கொள்வதில்லை.
இக்குறைபாடுகளுக்கு இரண்டு வகையான காரணங்கள் இருக்கக் கூடும். ஒன்று பரம்பரையாகத் தொடரும் குறைபாடுகள். இன்னொன்று கர்ப்ப காலத்திலோ, குழந்தை பிறப்பிலோ அல்லது அதற்கு பின்னான காலகட்டத்திலோ ஏற்படும் சிக்கல்கள் காரணமாக ஏற்படுவது (பிறந்த உடன் அழாமலிருப்பது, எடை குறைவு, வலிப்பு, சில தவறான மருந்துகள் உபயோகிப்பது, சிறுவயதில் கீழே விழுந்து தலையில் அடிபடுவது போன்றவை).
கற்றல் குறைபாடு உள்ள குழந்தைகளை பற்றி பொதுவாக சோம்பேறி, பிடிவாதக்காரன், ஊக்கமில்லாதவன் போன்ற முடிவுகளுக்கே நாம் சுலபமாக வந்துவிடுவோம். ஆனால் ஊன்றிக் கவனித்தால் அவர்களின் இயலாமை காரணமாகவே அவர்களின் கல்வி பாதிக்கப்படுவது தெரியும். பின்வரும் சிக்கல்கள் குழந்தைக்கு இருந்தால் அவர்களுக்கு கற்றல் குறைபாடு இருக்கலாமோ என்று நாம் யூகிக்க முடியும்.
- பேச்சு வர தாமதம்
- ஞாபக மறதியால் பொருட்களைத் தொலைத்தல், வீட்டுப்பாடங்களை செய்யாதிருப்பது
- ஒன்று போல இருக்கும் எண்களையோ எழுத்துக்களையோ குழப்பிக் கொள்வது(25 மாறாக 52, “b” பதில் “d,” or “on” என்பதை “no” என்று எழுதுவது), எண்களையோ எழுத்துக்களையோ இடவலமாகத் திருப்பி எழுதுவது
- மோசமான கையெழுத்து, அதிகப்படியான எழுத்துப் பிழைகள்
- ஷூ லேஸ், பட்டன் போன்றவற்றை போட முடியாதிருப்பது, அல்லது மிகவும் சிரமப்படுவது
- இடது, வலது, திசைகள் போன்றவற்றை புரிந்து கொள்ள திணறுவது
- காலம் சார்ந்த சொற்களை சரியாகப் புரிந்து கொள்ள முடியாமை (நேற்று/இன்று/நாளை, வாரநாட்கள் போன்றவற்றைக் குழப்பிக் கொள்வது)
- பள்ளிக்கு போக மறுப்பது
குழந்தைகளுக்கு இது போன்ற அறிகுறிகள் தெரிந்தால் உடனடியாக முறையான மதிப்பீடு செய்து கொள்வது அவசியம் ஆகும்.
கற்றல் குறைபாடு ஒரு நோயல்ல, குறைபாடே. இதற்கான சிகிச்சை என்பது மருந்து மாத்திரைகள் சாப்பிடுவது அல்ல. ஒவ்வொரு குழந்தைக்கும் இக்குறைபாட்டின் தன்மை வேறுபடும். எனவே அவர்களது தனித்திறன்கள், ஆர்வம் போன்றவற்றைப் புரிந்து கொள்வதுதான் சிகிச்சையின் முதல்படி. இவற்றை அடிப்படையாகக் கொண்டு பாடங்களை சொல்லிக் கொடுக்கும் வழி முறையில் ஏற்படுத்திக் கொள்ளும் மாற்றங்களே இக்குறைபாட்டிற்கான தீர்வாகும். இப்படியான கற்பித்தல் முறைகளை சிறப்புக் கல்வி(Special Education) என்கிறோம்.
சிறப்புக் கல்வி ஆசிரியர்கள் என்னவெல்லாம் செய்வார்கள்?
- கற்றல் குறைபாட்டைக் கண்டறிதல்(Screening)
- குறைபாட்டை நிர்ணயித்தல்(Diagnosis)
- குழந்தையைப் பற்றிய தகவல்களைத் திரட்டுதல் (Case History)
- தனி நபர் பாடத்திட்டத்தை வரையரை (Individualized Education Plan) – ஒவ்வொரு பாடத்திலும் குழந்தையின் தற்போதைய அறிதல்களை அறிந்து கொண்டு, அடுத்து என்னென்ன விஷயங்களை, எப்படிக் கற்பிக்க வேண்டும் என்பதைத் தீர்மானிப்பதே முக்கியமான விஷயம். பெற்றோருடன் கலந்தாலோசித்தும், குழந்தையோடு நெருங்கிப் பழகியுமே இத்திட்டத்தை தீர்மானிக்க முடியும்.
- கற்பித்தல் அணுகுமுறை(Learning approaches) குழந்தையின் கற்றல் பண்புகள், கற்றல் குறைகள், ஆர்வம் முதலியவற்றை கணக்கில் கொண்டு எவ்வகையில் ஒவ்வொரு பாடத்தையும் சொல்லித்தரலாம் என்று தீர்மானிப்பது.
- மறுமதிப்பீடு செய்து குழந்தையின் முன்னேற்றத்தை உறுதிப் படுத்திக் கொள்வது
கற்றல் குறைபாடுள்ள குழந்தைகளின் கல்வியில் முன்னேற்றம் கொண்டுவர சில பயனுள்ள முறைகளைப் பற்றிய அறிமுகம் பெற்றோருக்கு இருக்குமானால் குழந்தைகள் தங்கள் சவாலைக் கடக்க மிகவும் உதவியாக இருக்கும். அவற்றில் சிலவற்றை இங்கு பார்க்கலாம்.
முழுச் சொல்லாக படிக்கப் பழக்குதல்(Sight words): வார்த்தைகளை சம்பந்தப்பட்ட பொருளின் படத்தோடு அட்டைகளில்(Flash cards) எழுதி அதைக் காட்டி சொல்லித்தருதல். இம்முறையில் முழு வார்த்தையும் குழந்தையின் மனதில் பதியும். இதன் மூலம் குழந்தையின் சொல்லறிவு(Vocabulary) மேம்படும். இது வாசித்தலில் ஏற்படும் தவறுகளைக் குறைக்கும். எண்களையும் இவ்வாறே அட்டையில் எழுதிப் பயிற்றுவிக்கலாம்.
குரலொலி முறை(Phonetic method) – இது எழுத்திற்கும், அதற்கான உச்சரிப்பு ஒலிக்குமான தொடர்பை வைத்து கற்பிக்கும் முறை. தமிழைப் பொறுத்தவரை எழுத்துக்களின் ஒலி எந்த நிலையிலும் வேறுபடுவதில்லை. மாறாக ஆங்கிலத்திலோ எழுத்துக்களைப் படிக்கையில் ஒரு விதமாகவும், அதை வார்த்தைகளாக்கிப் படிக்கையில் வேறு விதமாகவும் உச்சரிக்க வேண்டியிருக்கும். எனவே எழுத்துக்களை மட்டுமல்லாமல், வார்த்தைகளில் வரும்போது அதை எப்படி உச்சரிக்க வேண்டும் என்பதையும் சேர்த்து சொல்லித் தருவதே போனிக்ஸ் முறை ஆகும். இம்முறையில் கற்றுக் கொள்ளும் போது வாசித்தல் எளிதாகும்.
புலன் உணர்வு சார்ந்த பயிற்சிகள்(Multisensory Learning):
கற்றல் குறைபாடு உள்ள குழந்தைகளுக்கு வழக்கமான கரும்பலகையில் எழுதிப் போட்டு, அதைப் பார்த்து நோட்டுப் புத்தகத்தில் எழுதிப் படிக்கும் கல்வி முறை ஒத்துவருவதில்லை. மாறாக புலன் உணர்வு சார்ந்த பயிற்சி முறை என்பதே பயனுள்ள வழிமுறையாகக் கண்டறியப்பட்டுள்ளது. கண்டு, கேட்டு, உற்றறியும் முறைகளில் அவர்களுக்குச் சொல்லித் தருவதன் மூலம் அவர்களின் குறைபாடுகளைத் தாண்டியும் ஆர்வமுடன் கற்றலில் ஈடுபடச் செய்யலாம்.
பார்ப்பதின் மூலம் கற்கும் திறன் உள்ளவர்களுக்கு(Visual Learners) வண்ணமயமான வரைபடங்கள்(charts) , படங்கள் நிறைந்த புத்தகங்கள் போன்றவற்றின் மூலம் கற்பிக்கலாம். பாடத்தின் முக்கிய கருத்துக்களை தாளில் அச்சிட்டு வழங்கலாம்.
கேட்பதன் மூலம் கற்றல் திறன்(Auditory Learners) உடையோருக்கு ஒலிப்பதிவுக் கருவிகளை உபயோகிக்க அனுமதிக்கலாம். கதைகள், பாடல்களின் மூலம் பாடத்தை கற்பித்தால் இவர்களால் எளிதில் கற்றுக் கொள்ள முடியும்.
தொடுதல் முறையில் கற்றல் திறன்(Tactile Learners) உடையோருக்கு மணலிலோ அல்லது உப்புத்தாள் போன்ற சொரசொரப்பான தளங்களிலோ விரலால் எழுதப் பழக்கலாம். அபாகஸ் மணிச்சட்டங்களைக் கொண்டு கணிதப் பயிற்சி அளிக்கலாம்.
இயக்கத்தின் மூலம் கற்றல் திறன்(Kinesthetic Learners) உடையோருக்கு எதையும் செயல் முறையில் கற்பித்தலே சிறந்த வழி. விளையாட்டுக்கான களிமண்(Clay)கொண்டு உருவங்களை உருவாக்கி கற்பிக்கலாம். நீரை குவளைகளால் மொண்டு வேறு பாத்திரத்தில் நிரப்பச் செய்து எத்தனை குவளைகள் தேவைப்பட்டன என்று கணக்கிட வைக்கலாம். இவர்களை நெடுநேரம் ஒரே இடத்தில் உட்கார்ந்திருக்க வற்புறுத்தக் கூடாது.
மூளை ஒருங்கிணைவுக்கான உடற்பயிற்சிகள் (Brain Gym): மூளையின் செயல்பாட்டைத் தூண்டி, கற்றல் திறனை மேம்படுத்துவதற்கான பிரத்யேக உடற்பயிற்சிகள் கண்டறியப்பட்டுள்ளன. இணையத்தில் இத்தகையப் பயிற்சிகளைத் தேடி, குழந்தைகளைச் செய்ய வைக்கலாம். இதன் மூலம் நீண்ட கால நோக்கில் கற்றலில் முன்னேற்றம் விளையும்.
வல்லுநர் வார்த்தை: திருமதி. பிரியா கணேஷ் – சிறப்பாசிரியை
பெரும்பாலும் கற்றல் குறைபாட்டை ஆரம்பக் கல்வி அளவில் யாரும் பெருசா பொருட்படுத்தறதே இல்ல. அந்தக் குழந்தையையே குறை சொல்லி, வேற வேற டியூஷன் மாத்தின்னு ரொம்ப காலத்தை வீணடிச்சுட்டு, இந்தப் பள்ளியில் இனி நான் தொடர மாட்டேன்னு அந்தக் குழந்தைகள் விரக்தியடைஞ்ச பின்னாடிதான் சிறப்புக் கல்வியாளர்களைத் தேடி வராங்க. இந்த நிலை மாறி உடனடியாக சிறுவயதிலேயே இதற்கான சிகிச்சையை ஆரம்பிக்க வேண்டியது அவசியம். கற்றல் குறைபாட்டைக் கண்டறிவதிலும் , தேவையான சிறப்புக் கல்வியை அளிப்பதிலும் நாம் காட்டும் அலட்சியமும், தாமதமும் குழந்தைகளிடம் நிறைய மாற்றங்களை ஏற்படுத்தக் கூடும். நம் புரிதலின்மை குழந்தைகளை விரக்தி, தன்னம்பிக்கை குறைவு, தாழ்வு மனப்பான்மை,கல்வியை குறித்த ஆர்வத்தை இழப்பது இப்படியான சூழலை நோக்கி தள்ளிடும்.
குழந்தைகளை உற்சாகப்படுத்திக் கொண்டே இருப்பது ரொம்ப முக்கியம். அவர்களின் சின்ன சின்ன வெற்றிகளுக்கும் உற்சாகப்படுத்தும் போது அவங்க இன்னும் அதிகமா உழைத்துப் படிப்பார்கள். மேலும் பெரும்பாலான கற்றல் குறைபாடு உள்ளவர்கள் கலைகளிலோ அல்லது விளையாட்டிலோ மிகுந்த ஆர்வத்தோடு இருப்பார்கள். அப்படியான குழந்தைகளின் தனித்துவமான திறமையைக் கண்டறிந்து அந்தத் துறையில் அவர்களை வளர்த்தெடுப்பதே அவர்களின் எதிர்காலத்திற்கு நல்லது.
கற்றல் குறைபாடு என்று பொதுவாகச் சொல்லிவிட்டாலும் அதிலும் பல்வேறு வகையான சிக்கல்கள் உண்டு.
- டிஸ்லெக்சியா – மொழித்திறன் குறைபாடு(Dyslexia)
மொழி சார்ந்த கற்றல் குறைபாடான இதில் எழுதுவது, படிப்பது, படித்ததை புரிந்து கொள்வது, மனதில் பதித்துக் கொண்டு பின் தேவைப்படுகையில் நினைவு கூர்வது போன்ற திறன்கள் பாதிக்கப் படலாம்.
- டிஸ்கால்குலியா – கணிதத் திறன் குறைபாடு (Dyscalculia)
எண்களையும், கணிதக் குறியீடுகளையும் புரிந்து கொள்வதில் இருக்கும் சிக்கல். இவர்களுக்கு கடிகாரத்தில் மணி பார்ப்பது போன்ற எண்கள் சம்பந்தப்பட்ட சிறு செயல்களில் கூட சிரமம் இருக்கும்.
- டிஸ்கிராபியா – வரைகலைத் திறன் குறைபாடு (Dysgraphia)
எழுதும் திறனில் ஏற்படும் சிக்கல். எழுத்துப் பிழைகள், போதுமான இடைவெளி விட்டு எழுத முடியாமை, மிகவும் பெரிதாகவோ அல்லது மிகவும் சிறியதாகவோ எழுதுவது, காகிதத்தில் இருக்கும் இடத்தை சரியாக திட்டமிடாது எழுதுவது என இதிலும் பலவகைகள் உண்டு.
- டிஸ்ப்ராக்சியா – தொலைவு உணரும் திறன் குறைபாடு(Dyspraxia)
இது தசைகளை ஒருங்கிணைப்பதில் வரும் ஒருவகைச் சிக்கலாகும். இதன் காரணமாக நடமாட்டம், ஒத்திசைவு, சமநிலை பேணுவது, உட்காரும் விதம் போன்றவற்றில் இவர்களுக்குத் தடுமாற்றம் இருக்கும்.
- கேட்பதை உள்வாங்கும் திறன் குறைபாடு (Auditory processing disorder – APD)
காதில் கேட்கும் ஒலிகளை சரியாக உள்வாங்கிப் புரிந்து கொள்வதில் இருக்கும் இயலாமை. ஒலி அளவு அதிகமாக இருந்தாலும், உச்சரிப்புத் தெளிவாக இருந்தாலுமே இவர்களால் கேட்கும் வார்த்தைகளை சரியாக உள்வாங்க முடியாது. இது காது கேளாமை(செவிட்டுத் தன்மை) அல்ல. காதில் விழும் ஒலியை பிரித்தறியும் மூளையின் திறனில் உள்ள குறைபாடு இது.
- பார்வைப் புலனுணர்வு சார்ந்த கற்றல் குறைபாடு (Visual perceptual/visual motor deficit)
பார்ப்பது, வரைவது, படியெடுப்பது போன்றவற்றில் ஏற்படும் இவ்வகை சிக்கல்கள் கண்கள் மூலம் கிடைக்கும் தகவல்களை மூளை புரிந்து கொள்வதில் ஏற்படும் சிக்கலால் உருவாகிறது. ஒரே மாதிரி தோன்றக்கூடிய எழுத்துக்கள், வடிவங்கள் போன்றவற்றைக் குழப்பிக் கொள்வது, கண்ணுக்கும் கைக்குமான ஒத்திசைவில் சிக்கல்கள், பேனாவையோ பென்சிலையோ மிக அதிக அழுத்தத்துடன் பற்றிக்கொள்வது, பொருட்களை பிடிப்பது, வெட்டுவது போன்றவற்றில் சிரமம் என இவ்வகைக் குறைபாடுடடையோர் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் அதிகம்.
இக்குறைபாடுகள் ஒரு குழந்தைகளுக்கு தனியாகவோ, ஒன்றுக்கு மேற்பட்ட குறைபாடுகள் கலந்தோகூட இருக்கக் கூடும்.
கற்றல் குறைபாடுள்ள மாணவர்களுக்குத் தேர்வுகளில் தமிழ்நாடு அரசு அளிக்கும் சலுகைகள்
- கூடுதல் நேரம்
- எழுத்துப் பிழைகளுக்கும், இலக்கணப் பிழைகளுக்கும் மதிப்பெண் குறைக்காமல் இருப்பது
- கணிதத் தேர்வில் கேல்குலேட்டர் பயன்படுத்த அனுமதி
- மாணவர் சொல்வதைக் கேட்டு எழுதும் உதவியாளர்
- ஐந்து பாடங்களில் இரண்டாம் மொழித் தேர்வுக்கு விலக்கு(4 பாடங்களின் மதிப்பெண்களே போதுமானது)
செல்லமே ஜூன் 2020 இதழில் வெளியான கட்டுரை
அன்பு லக்ஷ்மி,
இந்த எண்ணங்கள் தெரிந்திருந்தால் எத்தனையோ
விதங்களில் சிறு பிஞ்சுகளை அன்புடன் , அருமையாக அணுகலாம்.
எத்தனை சிறுவர்களும் சிறுமிகளும்
இந்தக் குறைபாடுகளை அறியாமலேயே வளர்கிறார்களோ.
சிறப்பு ஆசிரியைகளும் பள்ளிகளும் அதிகரித்து
குழந்தைகள் நலம் காக்கப் படவேண்டும்.
மிக மிக நன்றி மா.
சிறப்பான கட்டுரை. தற்போதைய புதிய மாற்றுத்திறனாளிகள் நலச் சட்டத்தின் படி கற்றல் குறைபாடுடைய மாணாக்கர்களுக்கும் கல்வி வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு உண்டு. ஆனால் மருநத்துவச் சான்று பெறுவது குதிரைகள் கொம்பாய் உள்ளது.
ஆம். மருத்துவச் சான்று பெருவதற்கான வழிமுறைகள் இலகுவாக்கப்பட வேண்டும்.