தொடரும் சேவை


பாம்பு தீண்டி இறந்த பூம்பாவை எனும் மங்கையை உயிர்ப்பிக்க பாடிய பதிகத்தில் மயிலாப்பூரில் அக்காலத்தில் நிகழ்ந்த விழாக்களைப் பட்டியலிடுகிறார் திருஞானசம்பந்தர். ஒவ்வொரு பாடலிலும் ஒவ்வொரு விழாவாகக் கூறி, அதைக் காணாது போய்விடுவாயோ பூம்பாவை என்று கேட்கும் அந்தப் பத்துப் பாடல்களையும், நூற்பயனாக பாடப் பெற்ற 11வது பாடலையும் பாடியவுடன் பூம்பாவை உயிர்பெற்றாள் என்கிறது மயிலையின் தலபுராணம்.

 

ஐப்பசி ஓணம், கார்த்திகை விளக்கீடு, திருவாதிரை, தைப்பூசம், பங்குனி உத்திரம், சித்திரை அட்டமி, ஊஞ்சல், பெருஞ்சாந்தி என  விழாக்களைப் பட்டியலிடும் பதிகம் அவ்விழாக்கள் அனைத்துக்கும் பொதுவான அம்சமாக ஒரு விஷயத்தை முன்வைக்கிறது.

 

மட்டிட்ட புன்னையங் கானன் மடமயிலைக்

கட்டிட்டங் கொண்டான் கபாலீச் சரமமர்ந்தான்

ஒட்டிட்ட பண்பி னுருத்திர பல்கணத்தார்க்

கட்டிட்டல் காணாதே போதியோ பூம்பாவாய்.

 

இங்கு நடக்கும் ஒவ்வொரு விழாவிலும் சிவனின் அடியவர்களுக்கு அன்பர்கள் அமுது செய்விக்கும் காட்சியைக் காணாது செல்வது முறையா என்று கேட்பதே இப்பாடலின் பொருள்.  ஆக, ஞானசம்பந்தரின் காலத்திலிருந்தே கபாலீச்வரத்தின் விழாக்கள் அன்னதானத்திற்குப் பெயர் பெற்றவைதான். இதை இன்றும் அறுபத்தி மூவர் விழாவின் போது காண முடியும்.

 

எங்கள் குடும்ப நண்பர்கள் சிலர் ஒன்றாகச் சேர்ந்து  அறுபத்தி மூவர் விழாவின் போது சிறப்பான முறையில் அன்னதானத்துக்கு ஏற்பாடு செய்வது வழக்கம். வருடா வருடம் நடக்கும் அவ்விழா இம்முறை கொரோனாவினால் நடக்கவில்லை என்றாலும் அந்த நண்பர்களின் சேவை மட்டும் தடைபடவே இல்லை. சொல்லப் போனால் அன்று ஒரு நாளோடு நின்று போவதற்கு பதில் தொடர்ச்சியாக மூன்று மாதங்களாக தங்களால் முடிந்த அளவுக்கு உணவு சமைத்து விநியோகித்து வருகின்றனர். 97வது நாளாக இன்றும் தொடரும் சேவையில் தக்காளி பிரிஞ்சி சாதம் & மெதுவடை , தண்ணீர் பாட்டில் ஆகியவற்றை விநியோகிக்கும் காணொளி இதோ.

 

 

எவ்விதப் பின்புலமும் இல்லாத சில நல்லுள்ளங்கள், பிரதிபலன்களை எதிர்பாராமல் செய்யும் இது போன்ற செயல்களே எல்லாப் பேரிடர் காலங்களிலும் மனிதத்தின் மீதான நம்பிக்கையைக் காப்பாற்றுகின்றன.

About லக்ஷ்மி பாலகிருஷ்ணன்

சொல்லிக்கொள்ளுமளவு பெரிதாக ஏதுமில்லை. :)
This entry was posted in அனுபவம், சமூகம் and tagged , . Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s