கொரோனா காரணமாக எழுந்த ஊரடங்கு உத்தரவும், நோய் குறித்த அச்சமும் ஒரு சாராரை வீட்டுக்குள் முடக்கவும், இன்னொரு பக்கம் மக்களை பசியும் பட்டினியுமாக சாலைகளில் சாரை சாரையாக நடக்கவும் வைத்திருக்கிறது. இதில் வீதியில் விடப்பட்டோரின் வாழ்கை அவர்களின் கையில் இல்லை – அவர்களை நகர்த்திக் கொண்டு போகும் விதியின் வலிய கரங்களே அவர்களை என்ன செய்வதென்பதை முடிவு செய்கிறது. காக்க வேண்டிய அரசுகள் மௌனித்திருக்க, ஆங்காங்கு சில உதிரி மனிதர்கள் சோளப்பொறி கொண்டு யானைப் பசியை ஆற்றும் தளராத முயற்சிகளில் இறங்குகின்றனர்.
அதே நேரம் வீடுகளுக்குள் முடங்கியிருக்கும் மக்களின் நிலை பல விதமாக இருக்கிறது. அதில் பெரும்பான்மையினர் மனதில் எதிர்காலம் குறித்த அச்சமும், நிகழ்காலம் குறித்த தெளிவின்மையுமாக உழன்று நாட்களை நகர்த்தி வருகின்றனர். வெகு சிலரே தங்கள் எல்லைகளுக்குள்ளாக ஆக்கபூர்வமாக என்ன செய்ய முடியுமோ அதை செய்து கொண்டிருக்கின்றனர்.
ஒரு வணிகர் தனது கடைசிக் காலத்தில் தன் மகன்கள் மூவருக்கும் ஒரு தேர்வு வைத்தார். அதில் வெற்றி பெறுபவனுக்கே தனது சொத்துக்கள் முழுமையும் சேரும் என்றார். மகன்களும் ஒப்புக் கொண்டனர்.
மூன்று மகன்களிடமும் ஆளுக்கு ஒரு பொற்காசு மட்டும் தந்து, அக்காசைக் கொண்டு, மாலைக்குள் அவரவர் வசிக்கும் அறையை நிரப்ப வேண்டும் என்பதே போட்டி என்றார். மூவரும் உற்சாகமாக காசை வாங்கிக் கொண்டு சந்தைக்குச் சென்று அவரவர்க்கு வேண்டிய பொருட்களை வாங்கி வந்தனர். மூத்த மகன் வண்டி வண்டியாக விறகு வாங்கி அறை முழுவதும் அடுக்கினான் – அவனது வேலை மதியமே முடிந்து விட்டது. இரண்டாவது மகனோ வைக்கோலை வாங்கி தனது அறை முழுவதும் திணித்து வைத்தான். அவனது வேலையும் மாலைக்குள் முடிந்தது. சந்தையிலிருந்து வந்த மூன்றாவது மகனோ தனது அறைக்கு வெளியே வெறுமனே உட்கார்ந்திருந்தான்.
மாலை தந்தை வரும் நேரத்தில் தன் அறைக்குள் சென்ற மூன்றாவது மகன் வாங்கி வந்திருந்த அகல் விளக்குகளைக் ஏற்றி வைக்க, அவனது குடில் முழுமையும் ஒளியால் நிறைந்தது. அத்தந்தை தனது சொத்துக்களை யாரிடம் ஒப்படைத்திருப்பார் என்று சொல்லத் தேவையில்லைதானே?
அதைப் போலவே வீட்டுக்குள் அடைபட்டிருக்கும் இக்கொடுங் காலகட்டத்தையும் மிகவும் பயனுள்ளதாக மாற்றிக் கொள்ளும் திறனும், வாய்ப்பும் வெகு சிலருக்கே வாய்க்கிறது. அப்படியான ஒருவரே எழுத்தாளர் ஜெயமோகன். இந்த சோதனையான காலகட்டத்தில் மார்ச் 17ல் தொடங்கி ஜூலை 10ந்தேதிக்குள் 100 சிறுகதைகளை எழுதித் தள்ளியிருக்கிறார் அவர்.
இக்கட்டுரையில் அந்தக் கதைவரிசையில் உள்ள சில கதைகளைப் பற்றிய என்னுடைய பார்வைகளைப் பகிர எண்ணுகிறேன். ஒவ்வொரு கதையையும் பற்றி பேச ஆசைதான் என்றாலும் கட்டுரையின் நீளம் கருதி மிக முக்கியமானவை என்று நான் கருதும் சில கதைகளைப் பற்றி மட்டும் பேசுவதாக இருக்கிறேன்.
***********
ஜெயமோகன் எழுதிய நூறு கதைகளின் தொகுப்புக்கான சுட்டி இங்கே
Pingback: ஜெயமோகனின் நூறு கதைகள் – 3 | மலர்வனம்
Pingback: ஜெயமோகனின் நூறு கதைகள் – 2 | மலர்வனம்
Pingback: ஜெயமோகனின் 100 கதைகள் – 4 | மலர்வனம்