ஜெயமோகனின் நூறு கதைகள் – 2


இந்தக் கதைகளின் வரிசையில் முதல் கதையும், கடைசிக் கதையும் தற்கொலை எண்ணத்தை மையப்படுத்தியவை.  கவிதை, கட்டுரை, மேடைப்பேச்சு, அரசியல் என பலதளங்களிலும் இயங்கிய எம்.கே எனும் மாமனிதரின் இறப்புக்குப் பின் அவர் கேரள அறிவியக்கத்தில் ஏற்படுத்திய புத்தெழுச்சியைப் பற்றியும், அவரது வாழ்வைப் பற்றியும் சில அறிவுஜீவிகள் கூடிப் பேசிக் கொள்ளும் உரையாடலாக ஆரம்பிக்கிறது அவரது முதல் கதை.  எண்ண எண்ணக் குறைவது எனும் இக்கதை பல்வேறு கலை இலக்கியத் துறைப் புள்ளிகளின் உரையாடலாக புனையப்பட்டுள்ளது. அவர்கள் அனைவருமே எம்.கேவின் சீடர்கள். மெல்ல மெல்ல எம்.கேவின் வரலாற்று இடம் என்னவென்று பேசத் தொடங்கி அவரது மரணம் தற்கொலையாக இருந்திருக்கக் கூடுமோ என்ற சந்தேகத்தை நோக்கி நகர்கிறது உரையாடல்.

 

வாழ்வில் தோல்வியடைந்தவர்களே தற்கொலை செய்து கொள்வார்கள் என்பது பொதுப்புரிதல். ஆனால் எம்.கேவின் வாழ்வு நிறைவான ஒன்று. அவரது உரையாடலின் தெரிப்புகளே அந்த அறையிலிருக்கும் அனைத்துக் கலைஞர்களின் மனதிலும் விதையாய் விழுந்து, அவர்களின் கலைப்படைப்புகளாய் வளர்ந்து செழித்திருக்கிறது. தன் இடமும், சாதனையும் என்னவென்பதை நன்குணர்ந்த எம்.கே ஏன் தற்கொலை முடிவெடுத்திருக்கக் கூடும் என்று அந்த நண்பர் குழாம் அலசுகிறது.

எம்.கே தனது பிறவி நோக்கம் என்று தான் நினைப்பதை சாதித்து முடிந்தபின் இனி செய்வதற்கு ஒன்றுமே இல்லை என்ற மனநிலையை அடைகிறார். இதற்கு மேல் இருந்தால் அது பெருமையடித்தலாக, செய்தவற்றையே திருப்பி நடிக்கும் முதுமையின் அசட்டுத்தனமாக முடிந்துவிடும் என்ற தனது எண்ணங்களை அவர்களில் ஒருவரான பாபுவிடம் பகிர்ந்து கொண்டிருக்கிறார்.

 

இந்த உரையாடலையும், பிரேதப் பரிசோதனை அறிக்கையை வைத்து முதல்வர் எழுப்பிய கேள்விகளையும் கொண்டு எம்.கேவின் மரணம் தற்கொலைதான் என்றே முடிவுக்கு வருகிறார்கள். அதை அவர்கள் ஒவ்வொருவரும் ஏற்பதும், மறுப்பதுமாக விவாதித்துப் பிரிகிறார்கள்.

 

இந்தக் கதையில் பார்வையாளனாக நுழைந்து வெளியேறும் மலையாளம் தெரிந்த தமிழ்நாட்டுக் கதாசிரியனாகிய இளைஞன் வளர்ந்து இன்று தனது செயல் நிறைவுக்குப் பின்னர் கொள்ளும் மனக்குழப்பமாகவே இக்கதை விரிகிறது.

நூறு கதைகளையும் எழுதிய பின்னர் ஜெயமோகன் எழுதியிருக்கும் பதிவொன்றிலும் வெண்முரசென்னும் மாபெரும் பணியை முடித்த பின்னர் தன்னுள் எஞ்சும் வெறுமையைப் பதிவு செய்கிறார். அதிலிருந்து தன்னை திசைதிருப்பிக் கொள்ளவே இக்கதை வரிசையை எழுதத் தொடங்கியதாகச் சொல்கிறார். அந்த தத்தளிப்பை அப்படியே பிரதிபலிக்கிறது இக்கதை.

 

நூறாவது கதை வரம்.  இதில் கதையின் நாயகி தற்கொலையிலிருந்து தப்பி லௌகீக வாழ்வில் வெற்றி காண்பதான கதை. தற்கொலை முயற்சியில் வெற்றியடையும் கதையில் ஆரம்பித்து அம்முயற்சியில் தோல்வியடையும் கதையொன்றோடு, ஜெமோவின் இக்கதைகளின் வரிசை முடிகிறது.  ஆனால் இவ்விரண்டில் எது தோல்வி, எது வெற்றி என்பதை எப்படி நிர்ணயிப்பது என்பதுதான் முக்கியமான கேள்வி.

ஒருவிதத்தில் அறிவுஜீவியான, நிறைவாழ்வு வாழ்ந்து முடித்த எம்.கே தனது களப்பணிகள் குறித்து சிந்தித்துப் பார்த்து நிறைவுடன் வாழ்வை முடித்துக் கொள்ளும் விதமும், ஸ்ரீதேவி அம்பிகையின் தரிசனம் பெற்று தன்னம்பிக்கையோடும், தெளிவோடும் வாழ்வை எதிர்கொள்வதும் இரண்டுமே வெற்றிகள்தான்.

ஸ்ரீதேவியின் வாழ்வு திசை திரும்புவது ஸ்ரீமங்கலையான பகவதியின் வரத்தினால் அல்ல, பெயரில்லாத அந்தத் திருடனின் வரத்தினால்தான். சொல்லப் போனால் அத்திருடனின் வரத்தில் பகவதியின் கோவிலும் கூட வளம் கொழிக்கத் துவங்குகிறது. அத்திருடனுக்குப் பெயரில்லை, முகவரியில்லை, அன்பு ஒன்றைத் தவிர அவனுக்கு எவ்வித அடையாளங்களும் இல்லை.

இந்த நூறு கதைகளின் எல்லைப் புள்ளியாக நின்றிருக்கும் இவ்விரு கதைகளும் இக்கதை வரிசைக்கு வேறொரு அர்த்தத்தை அளிக்கின்றன. இக்கதை வரிசையை மேலும் நன்றாகப் புரிந்து கொள்வதற்காக சில வகை மாதிரிகளாகப் பிரித்துக் கொள்ளலாம்.

இந்தப் பிரிவுகள் ஒன்றும் மிகக் கறாரானவை அல்ல. சில கதைகள் ஒன்றுக்கும் மேற்பட்ட வகைமைக்குள் வைத்துப் பார்க்கத் தக்கவை. எனவே ஒரு பொதுப் புரிதலுக்காக இப்படி எடுத்துக் கொள்ளலாம்.

 • கிளி சொன்ன கதை, தீ அறியும் போன்ற கதைகளில் அறிமுகமான அனந்தன் எனும் சிறுவனின் பால்ய கால கிராமத்தைக் களமாகக் கொண்ட கதைகள். அனந்தன், அவனது அப்பா கரடி நாயர், அம்மா விசாலம், அம்மாவின் தோழியும் வேலைக்காரியுமான தங்கம்மை, அப்பு அண்ணன், தங்கைய்யா பெருவட்டர் என ஜெயமோகனின் வாசகர்களுக்கு நன்கு அறிமுகமான கதாபாத்திரங்களினால் கொண்டு செல்லப்படும் கதைகள்.
 • தொலை தொடர்புத் துறைப் பணி அனுபவம் சார்ந்த, காசர்கோடு வட்டாரக் கதைகள் – வான் கீழ், வான் நெசவு, மலைகளின் உரையாடல், உலகெலாம்
 • திருடர்களை மையப்படுத்திய கதைகள் – வருக்கை, முத்தங்கள், பிறசண்டு, எழுகதிர், வரம்.
 • கிறிஸ்துவ ஆன்மீகத் தளத்தில் உள்ள – லூப், ஏதேன், அங்கி, ஏழாவது போன்ற கதைகள்.
 • பௌத்த ஆன்மீகத் தளத்தில் பயணிக்கும் கரு, தங்கப்புத்தகம், சிந்தே போன்ற கதைகள்.
 • திருவிதாங்கூர் அரச குடும்ப வரலாற்றை மையப்படுத்திய கதைகள் – ஆயிரம் ஊற்றுகள் , போழ்வு, இணைவு, லட்சுமியும் பார்வதியும், மலையரசி
 • இந்து மத ஆன்மீகத் தளத்தில், தொன்மங்களைப் பேசும் கதைகள் – யாதேவி, சர்வபூதேஷு, சக்தி ரூபேண, பீடம், கழுமாடன், ஆபகந்தி, மூத்தோள், சிவம்
 • ஓய்வு பெற்ற காவல் துறை அதிகாரியான ஔசேப்பச்சன் துப்பறியும் கதைகளான ஓநாய் மூக்கு, பத்து லட்சம் காலடிகள், வேரில் திகழ்வது, கைமுக்கு
 • குழந்தைகளை மையப் படுத்திய கதைகள் – பாப்பாவின் சொந்த யானை, கிரீட்டிங்க்ஸ்
 • விலங்குகளை மையப்படுத்திய சிறுகதைகள் – ஆனையில்லா, பூனை, ராஜன், இடம், அமுதம்
 • ஆண் பெண் உறவுச் சிக்கல்களைப் பேசும் கதைகள் – லீலை, செய்தி, ஆட்டக்கதை, முதல் ஆறு, தவளையும் இளவரசனும், வேட்டு, சீட்டு
 • பெண் கல்வி, முன்னேற்றம் தொடர்பான கதைகள் – நற்றுணை, சிறகு, வரம்.

**********

ஜெயமோகனின் நூறு கதைகள் – 1

ஜெயமோகனின் நூறு கதைகள் – 3

ஜெயமோகனின் நூறு கதைகள் – 4

ஜெயமோகன் எழுதிய நூறு கதைகளின் தொகுப்புக்கான சுட்டி இங்கே.

நூறு கதைகள்

About லக்ஷ்மி பாலகிருஷ்ணன்

சொல்லிக்கொள்ளுமளவு பெரிதாக ஏதுமில்லை. :)
This entry was posted in இலக்கியம், கட்டுரை, சிறுகதை, ஜெயமோகன், விமர்சனம் and tagged , , , . Bookmark the permalink.

3 Responses to ஜெயமோகனின் நூறு கதைகள் – 2

 1. Pingback: ஜெயமோகனின் நூறு கதைகள் – 3 | மலர்வனம்

 2. Pingback: ஜெயமோகனின் நூறு கதைகள் – 1 | மலர்வனம்

 3. Pingback: ஜெயமோகனின் 100 கதைகள் – 4 | மலர்வனம்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s