நற்றுணை மற்றும் சிறகு கதைகளில் பெண் கல்விக்குத் தேவைப்படும் ஊன்று கோல்களைப் பற்றி பேசப்படுகிறது. அம்மணி தங்கச்சிக்கு கேசினி என்ற யட்சியின் இருப்பாகிய அகத்துணையும், ஆனந்தவல்லிக்கு சைக்கிள் எனும் வாகனத்தைக் கையாளும் திறன் தரும் புறத்துணையும் கல்வியில், பொருளாதாரத்தில் மேலே செல்ல உதவுகின்றன.
தமிழ்ச் சூழலில் யட்சி எனும் தொன்மம் குறித்து தொடர்ந்து எழுதி வருபவர் ஜெயமோகன். ஆனாலும் இதுவரையில் அநியாயமாகக் கொல்லப்பட்டு அதனால் யட்சி ஆனவர்களின் கதைகளைத்தான் அதிகமாக இதுவரை படித்திருப்போம். மாறாக பௌத்த, சமண மதங்களில் புனிதர்களைச் சூழந்திருக்கும் காவல் தேவதைகளாக வரும் யட்சிகளும் உண்டு.
மஹாயான பௌத்த மரபில் அவலோகிதரின் கண்ணீர்த் துளியாக அவதரித்த தாரா தேவியின் காவல் தேவதைகளில் ஒருத்தியின் பெயர் கேசினி. கேசம் என்றால் முடி. நீள் முடி அவளுக்கான அடையாளங்களுள் ஒன்று. நற்றுணைக் கதையில் கண்டன் நாயர் கண்டடையும் ஆய் வேளிர்களின் கோவிலும் பௌத்த அவலோகிதரின் கோவில்தான். அதன் சுற்று மதிலில் இருந்த பின்னப்பட்ட யட்சினி சிலையாகிய கேசினியைக் கொண்டு வந்து தங்கள் குடும்பக் கோவிலில் வைத்து வழிபடத் துவங்குகின்றார் கண்டன் நாயர். அந்த யட்சியின் உதவியுடன் அவர்கள் வீட்டுப் பெண்ணான அம்மிணி தங்கச்சி கல்வி கற்கத் துவங்குவதுதான் வரலாற்றின் திருப்புமுனை.
நாகர்கோவிலில் பெண்களுக்காக பள்ளி ஆரம்பித்து நடத்திய பியாட்ரீஸ் டதி, அலெக்சாண்டர் கிரைட்டன் மிச்செல் என வரலாற்று மனிதர்களும் வந்து செல்லும் இக்கதை பெண் கல்வியின் வரலாற்றின் ஒரு குறுக்குவெட்டுத் தோற்றம்.
கோட்டைகளை முற்றுகையிட்டு உடைக்க முயலும் போது யானைகளின் மத்தகம் கொண்டு முட்டியும், அவற்றின் கையில் இரும்பு உலக்கைகளைக் கொடுத்தும் கதவுகளை உடைக்கச் செய்வார்கள். அப்படி ஏவுமுன் யானைகளுக்கு சாராயத்தை குடிக்க வைத்து வெறியேற்றுவார்கள். சமூகத் தடைகளை உடைத்து கீழிருந்து மேலே வருபவர்களுக்கும் அதே போன்ற உன்மத்தம் தேவைப்படுகிறது. அது உடனிருக்கும் யட்சியாகவோ இஷ்ட தேவதை உபாசனையாகவோ இருக்கலாம்.
அது போலவே சிறகு கதையில் வரும் ஆனந்தவல்லிக்கும். ஒரு வாகனத்தை சொந்தமாகக் கையாள முடிவதுதான் அவள் வெளியுலகை நோக்கி எடுத்து வைக்கும் முதல் அடி. பீடி சுற்றும் தொழிலாளியின் குடும்பத்திலிருந்து வட்டார வளர்ச்சி அலுவலராக அவளது ஏறுமுகத்திற்கு அடிப்படை அவள் அடையும் தற்சார்புதான். தன்னை மிரட்டும் சங்குவை எதிர்கொள்ள அவனது தந்தையிடம் சென்று முறையிடத் துணிவதற்குப் பிறகு அந்த கிராமத்துப் பண்ணையாரை அவள் ஒரு பொருட்டெனவே நினைப்பதில்லை. குருவிக் குஞ்சுக்கு பூனையே சிறகடித்துப் பறக்கவும் சொல்லிக் கொடுக்கும் அக்கதையும் சிறப்பான ஒன்று.
அதே நேரம் ஆண்பெண் உறவுகளின் நுட்பங்களைப் பேசும் கதைகளில் வரும் பெண் கதாபாத்திரங்களின் வார்ப்புரு பெண் வெறுப்பை நியாயப்படுத்துவதாகவே உள்ளது. சீட்டு, லீலை போன்ற கதைகள் பெண்களை சாகசக்காரர்களாகக் காட்டுகின்றன.
ஆட்டக்கதை கணவன் மனைவி உறவு பற்றியது. மற்றெந்த உறவையும் விட நீண்டு தொடரும் திருமண பந்தத்தில் ஆணும் பெண்ணும் கொள்ளும் விலக்கமும், உறவும் அவர்களது ஆளுமையை வலுவாக பாதிக்கக் கூடியவை. உடலினால் உடலை அறிவது என்பது அந்த உடலினுள் இருக்கும் உயிரின் மீது நமக்கு ஒரு பிடிப்பை, அதிகாரத்தை அளிக்கத்தான் செய்கிறது. இரட்டைப் பிறவிகளாகப் பிறந்த லட்சுமியும் சரஸ்வதியும் ராஜசேகரனின் மீது செலுத்தும் பாதிப்புகளைப் போலவே சரஸ்வதியின் மீதான ராஜசேகரனின் பாதிப்புகளையும் நுட்பமாகப் பேசுகிறது.
இன்னொரு கதையான குமிழியில் குயவர்கள் மண்ணால் ஆன சிலைகளைச் செய்வது பற்றிப் பேசும் போது முதலில் குயவர்கள் சிலைகளை வனைந்து முடித்தபின் அவர்கள் வீட்டுப் பெண்கள் தட்டி எடுத்து அதற்கு உருவம் கொடுப்பதை விவரித்திருப்பார். ஆணோ பெண்ணோ அவர்களின் ஆளுமைகளை நாம் நமக்கான உறவில் தட்டி எடுத்து உருவாக்கிக் கொள்கிறோம். அந்த உருமாற்றங்களைப் பேசும் கதை என்ற வகையில் நன்றாக வந்திருக்கிறது.
தங்கப்புத்தகம் கதையில் திபெத்திய மடம் ஒன்றில் வைக்கப் பட்டிருக்கும் மூலப் புத்தகம் ஒன்றினைப் பிரதி செய்யச் செல்லும் இருவர் அடையும் அனுபவங்கள் விவரிக்கப் படுகின்றன. ஒரே மூல நூல் – அதைப் பிரதி செய்யும் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விளக்கத்தை அளிக்கிறது.
ஒரே மூலப்பிரதியான பகவத் கீதைக்கு சங்கரர், ராமானுஜர், மத்வர் ஆகிய மூவரும் முறையே அத்வைதம், விசிஷ்டாத்வைதம், துவைதம் ஆகிய கருதுகோள்களுக்குட்பட்டு பாஷ்யங்கள் எழுதியிருக்கின்றனர். இளமையில் எனக்கு இது எப்படி சாத்தியம் என்ற கேள்வி எழுந்ததுண்டு. ஆனால் ஆன்மீகம் சார்ந்த விஷயங்களில் ஞானம் என்பது ஐயந்திரிபற ஒரு தத்துவத்தை நம்புவது என்றே பொருள் படுகிறது என்று உணர்ந்தபின்னர் இது போன்ற மூல நூற்களை அவரவர் மனதிற்குகந்த வகையில் வார்த்தெடுப்பதை நன்றாகப் புரிந்து கொள்ள முடிகிறது. கலை, இலக்கியம், ஆன்மீகம் போன்ற உள்ளுணர்வுகளையே பெரிதும் சார்ந்து இயங்கும் தளங்களில் இது போன்ற தத்தளிப்புகளை தவிர்க்கவே முடிவதில்லை.
முக்தாவும், ’பாட்’டும் மேற்கொள்ளும் பயணம், அந்த மடம் குறித்தான விவரிப்புகள் எல்லாம் பிரமிக்க வைக்கின்றன. ஷம்பாலா பற்றிய கனவுகளைப் போலவே பேச்ச கொம்பா எனும் அந்த அற்புதமான மடாலயமும், அதற்குள் காத்திருக்கும் தங்கப்புத்தகம் எனும் உருவகமும் அபாரமான ஈர்ப்பை அளிக்கிறது.
அங்கி கதையும் ஏதேன் கதையும் ஆத்ம தூய்மையின் உச்சம் என்னவாக இருக்க முடியும் என்று பேசுபவை. அவற்றைப் புரிந்து கொள்ள மதம் சார்ந்த குறியீடுகள் ஒரு தடையே இல்லை. குறிப்பாக ஏதேன் கதையில் சாம் ஜெபத்துரையும் சேர்ந்து எட்டு நாட்களாக வாழைக்காயை உண்ணும் சித்திரம் குழந்தைகளுக்கு மட்டுமே அடையச் சாத்தியமான உச்சம் என்றே சொல்லலாம்.
குறைகள்:
- மொழி கதையில் “நீரு வளந்துபோட்டேரு… சொன்னா புரியாது” என்று போற்றி சொல்லும் இடத்தோடு அக்கதை முடிந்து விடுகிறது. அதற்குப் பின்னர் அது சாமிக்க பாசை, தேவன்மாருக்க பாசை என்பது போன்ற புளங்காகிதங்கள் எல்லாம் தேவையற்ற சுயபெருமிதங்கள் மட்டுமே.
- பொலிவதும் கலைவதும் கதையில் அதிக அறிமுகமில்லாத புள்ளுவர்களின் களமெழுத்துப் பாட்டு பற்றிய விவரணைகள் தவிர்த்து உள்ளீடு என எதுவுமில்லை. சாதாரணமாக கைதவறிப் போன காதலைப் பற்றிய ஒரு இளைஞனின் வழக்கமான மனப்பதிவுகள் மட்டுமே. ஜெயமோகனின் பாஷையில் சொல்வதானால் தரிசனங்கள் எதுவுமற்ற, சராசரித்தனமான கதை.
- நிறையக் கதைகள் குடி மேஜையில் ஒரு கதைசொல்லி ஆதௌ கீர்த்தனாரம்பத்திலே என்று ஆரம்பித்து விஸ்தாரமாகக் கதை சொல்லும் பாணியில் பயணிப்பது சலிப்பேற்படுத்துகிறது. குடிமேஜைக்கே உரிய சலம்பல்களுக்கும், அபத்தங்களுக்கும் நடுவில் கதையைத் பிரித்தெடுக்க வேண்டியுள்ளது. (ஒருவேளை இப்பாணி ஆண்களுக்கு உவப்பான ஒன்றாக இருக்குமோ என்னவோ)
- இசைக்கும் இட ஒதுக்கீடு செய்ததாக இருக்க வேண்டுமே என்று சேர்த்தது போல பிடியும், தேனீயும் ஒட்டாமல் நிற்கின்றன. இரண்டிலுமே நம்பகத்தன்மை குறைவு. வலிந்து செய்யப்பட்டவைகளாக தனித்துத் தெரிகின்றன.
- தஞ்சைப் பெரியகோவில் கல்வெட்டொன்றில் குந்தவையின் கணவர் என்று வந்தியத்தேவனின் பெயர் இடம் பெற்றிருந்தாலும் வேறெந்த மேலதிக தகவலும் அவரைப் பற்றி ஆதாரபூர்வமாக இல்லை. ஆனாலும் பொன்னியின் செல்வனில் கல்கி அவரை ஒரு இணை கதாநாயகனாகவே உயர்த்தி இருப்பார். அதே நேரம் வந்தியத்தேவன் நந்தினியைப் போலவோ ஆழ்வார்க்கடியானைப் போலவோ ஒரு முழுமுற்றான கற்பனை கதாபாத்திரமும் இல்லைதான். இந்த வித்தியாசத்தை வாசகர்கள் மனதில் நிறுத்துவதை கல்கியே நாவலின் பின்னுரையில் தெளிவாகச் செய்திருப்பார். பொதுவாகவே ஜெயமோகனின் அதிதீவிர வாசகர்களுக்கு ஒரு சுபாவம் உண்டு – அவரின் எழுத்துக்கள் எல்லாமே வேத சத்தியம் என்று தீவிரமாக நம்பும் விசுவாசிகள் அவர்கள். வரலாற்று ஊகங்கள், அதன் அடிப்படையிலான புனைவு என்றெல்லாம் இல்லாமல் திருவிதாங்கூர் அரச வம்சமே பத்மநாபனின் செல்வத்திற்கு அறங்காவலர்களாக இருந்து வந்த தியாகத் திரு உருவங்கள்தான் என்றே இனி அவர்களில் பலரும் நம்பக் கூடும். எட்டு வீட்டுப் பிள்ளைமாரைக் கொன்ற பாவம் நீக்கவே திருப்படித்தானம் செய்தார் மார்த்தாண்ட வர்மா என்ற கதைகளை விட இந்த ஊகத்திற்கு வலு அதிகம். ஏற்கனவே ஒரு பேட்டியில் திருவிதாங்கூர் அரச வம்சத்து வாரிசு ஒருவர் திருப்படித்தானம் என்பதை அசோகர் போர்க்களத்தில் அடைந்த மனநிலையோடு ஒப்பிட்டுச் சொல்லியிருந்தார். இப்புனைவுகள் அவ்வம்ச வரலாறாகவே மாறக் கூடும்.
- பல கதைகளில் கதை சொல்லல் முறை மிகவும் பலவீனமானதாக இருக்கிறது. உதாரணமாக ஆயிரம் ஊற்றுக்கள் கதையில் திவான் ஆலெட்டி ரங்கய்யா திருவனந்தபுர அரச வரலாற்றை மொத்தத்தையும் உமையம்மை ராணியின் வேலைக்காரிக்கு விளக்கோ விளக்கு என்று விளக்குகிறார். ஔசேப்பச்சன் கதைகள் முழுக்க கொசுவர்த்தி பாணி கதைகள் என்பதோடு குடி மேஜை சலம்பல்கள் வேறு. ஆட்டக்கதை போன்ற பேட்டியெடுக்கும் பாணிக் கதைகளும் ஒப்பிப்பது போல் உள்ளன.
பிரஹத்காயரின் மடியை அடையும் வரை ஜெயத்ரதனின் தலையை கீழே விழாது அம்புகளால் தூக்கி நிறுத்திய அர்ஜுனனைப் போல லாக்டவுன் பொழுதின் வெறுமையைத் தன்னிடமிருந்தும், இக்கதைகளைப் படிப்போரிடமிருந்தும் தூர நிறுத்த தினமும் ஒரு கதையாக அள்ளி இறைத்திருக்கிறார் ஜெயமோகன் என்றே சொல்லத் தோன்றுகிறது. இந்தத் தொடர் வாசிப்பனுபவத்திற்காக அவருக்கு நன்றிகள்.
(முற்றும்)
ஜெயமோகனின் நூறு கதைகள் – https://www.jeyamohan.in/134072/
Pingback: ஜெயமோகனின் நூறு கதைகள் – 1 | மலர்வனம்
Pingback: ஜெயமோகனின் நூறு கதைகள் – 2 | மலர்வனம்
Pingback: ஜெயமோகனின் நூறு கதைகள் – 3 | மலர்வனம்