கணிதத்தில் ஆரம்பப் பள்ளி அளவிலேயே கற்றுத் தரப்படும் ஒரு விஷயம் – இட மதிப்பு. ஒன்று, பத்து, நூறு என இலக்கங்களின் இடமதிப்பு புரிந்தால்தான் கூட்டல், கழித்தல் என அடிப்படைக் கணிதத்தையே கூட கற்க முடியும்.
அது போலவே வரலாற்றைப் புரிந்து கொள்ளுதல் என்பதும், வரலாற்று மனிதர்களை அவர்களின் காலகட்டத்திற்கேற்ப எடைபோட்டுப் புரிந்து கொள்ள வேண்டும். அத்தகைய சிந்தனைப் போக்கு இல்லாதவர்கள் வரலாற்றுப் புனைவுகளை உருவாக்கும் போது அந்தப் படைப்புகள் பிள்ளையார் பிடிக்க குரங்காய் முடிவது போல் வந்து நிற்கின்றன.
என் அம்மாவுக்கு உடன் பிறந்தவர்கள் 7 பேர். மூத்த அக்காவான என் பெரியம்மாவிற்கு 17 வயதில் திருமணமாகும் போது என் அம்மாவிற்கு 3 வயது. என் கடைசி மாமாவோ பாட்டியின் வயிற்றில் இருந்தார். கடைசிப் பிரசவத்தின் பின் பாட்டிக்கு உடல் மிகவும் தளர்ந்துவிட, அம்மா, மாமா இருவரையுமே வளர்த்தது அடுத்தடுத்த பெரியம்மாக்கள்தான்.
என் அப்பாவின் வீட்டிலும் கிட்டத்தட்ட இதே கதைதான். அதிலும் விசேஷமாக அவர்கள் வீட்டில் பெரியப்பாக்கள், அத்தைகள் என எல்லோரும் தங்கள் அப்பா- அம்மாவை அண்ணா – மன்னி என்றுதான் அழைப்பார்கள். ஏனென்றால் விவரம் தெரியாத வயதில் கூடவே வளரும் சித்தப்பாக்கள், அத்தைகளைப் பார்த்து அவர்களைப் போலவே அழைக்கத் தொடங்கிவிட்டதாக சொல்வார்கள்.
ஒவ்வொரு வீட்டிலும் இப்படி அக்காக்களும், அண்ணன்களும் கடைசி வரிசை வாரிசுகளை வளர்த்தெடுப்பது என்பது 50 வருடங்களுக்கு முன் சகஜமான ஒரு நிகழ்வாகவே இருந்திருக்கிறது.
நமக்கு முந்தைய தலைமுறையினரின் வாழ்கையை சற்று ஊன்றிக் கவனித்தாலே இது போன்ற அவதானிப்புகளை அடைந்துவிட முடியும்.
படிப்பு, வேலை என இன்று நாம் திருமண வயது என்று நிர்ணயித்திருக்கும் காலக் கோடுகள், அதன் பின்னும் இரட்டைப் பிள்ளைகளோடு நிறுத்திக் கொள்ளும் குடும்ப அமைப்பு போன்றவற்றை மனதில் வைத்துக் கொண்டு வரலாற்றைக் கணிப்பது போன்ற மூடத்தனம் வேறில்லை.
பொதுவாகவே காலத்தில் முன்னே செல்லச் செல்ல பெண்ணுக்கும், ஆணுக்குமான திருமண வயது என்பது குறைந்து கொண்டே போவதைக் காணலாம். வால்மீகி ராமாயணத்தின் படி ராமனுக்குத் திருமணத்தின் போது வயது 13, சீதைக்கோ 6. வனவாசத்திற்குத் தான் மட்டும் கிளம்புவதாக ராமன் சொல்லும்போது, சீதை பல்வேறு வாதங்களை முன்வைக்கிறாள். அதில் முக்கியமான ஒன்று – நீயும் நானும் சேர்ந்து விளையாடி வளர்ந்தவர்கள் அல்லவா, என்னை நீ பிரிய நினைக்கலாமா என்பதும். வனவாசம் செல்லும் போது ராமனுக்கு வயது 25, சீதைக்கு 18. அதற்குப் பின்னர் வனம் போய், திரும்பி வந்து பட்டாபிஷேகம் நடக்கும் போது ராமனுக்கு 39, சீதைக்கு 32 வயது. அவ்வயதில்தான் சீதை கருவுறுகிறாள்.
16 வயதிலிருந்து 40 வயது வரை பெண்கள் பிள்ளைப் பேறு அடைய வாய்ப்புள்ளவர்கள் என்பதையும், வயதான பின்னர் குழந்தை பெற்றுக் கொள்வதையெல்லாம் அவமானமாகக் கருதியவர்கள் அல்ல என்பதையும் புராண இதிகாசங்களில் இருந்து ஆரம்பித்து வயதான பெரியவர்களின் அனுபவ மொழி வரை பல்வேறு தரப்புகளில் இருந்தும் புரிந்து கொள்ள முடியும்.
இது போன்ற புரிதல்கள் இருந்தால் குந்தவை ராஜராஜனை வளர்த்தாள் என்ற விஷயத்தை ரொம்ப எளிதாகவும், சரியாகவும் புரிந்து கொள்ள நம்மால் முடியும். ஆனால் இன்றைக்கு இருக்கும் நமது குடும்ப அமைப்பை மனதில் வைத்துக் கொண்டு, அதெப்படி குந்தவை ராஜராஜனை வளர்த்திருக்க முடியும்? அப்படி வளர்த்தாள் என்றால் அவள் குந்தியைப் போல கானீகனாக அவனைப் பெற்றெடுத்திருக்கக் கூடும் என்று முடிவு கட்டிக் கொண்டு திருகலாக புனைவுகள் எழுதத் துவங்கினால் அவர்களின் சிந்தனைப் போக்கை என்னவென்று சொல்வது?
இப்படியான தட்டையான புரிதலுடன்தான் காலச்சக்ரா நரசிம்மா – சங்கதாரா என்றொரு வரலாற்றுப் புனைவை எழுதியிருந்தார். அதன் பின்னர் அவரது நாவல்களைப் படிக்கும் ஆர்வமே எனக்கு சுத்தமாகப் போய்விட்டது.
இப்போது மீண்டும் ஆதித்த கரிகாலனின் கொலை வழக்கைப் பற்றியொரு தொடர் எழுத ஆரம்பித்திருப்பதாகக் கேள்வி. என்னென்ன குளறுபடியான அவதானிப்புகளை முன்வைக்கப் போகிறாரோ தெரியவில்லை. ஆனால் ஒன்று, முன்னைப் போலில்லாமல் எத்தனை அபத்தமாக இருந்தாலும் பொறுமையாக படிக்குமளவு இப்போது எனக்கு பொறுமை கூடியிருக்கிறது. எனவே மொத்தமாக புத்தகமாக வருகையில் படித்துப் பார்க்கலாம் என்றிருக்கிறேன். 🙂
Appreciate ur passion of reading lakshmi. Nice critic