உலகம் பிறந்தது எனக்காக, ஓடும் நதிகளும் எனக்காக என்பது நாகரீகப் போர்வைக்குள் நம் உள்ளுறையும் சுயநலத்தின் வெளிப்பாடு. பசு பால் தரும், நாய் காவல் காக்கும் என்று ஒன்றாம் வகுப்பு பாட புத்தகத்திலேயே படித்து வளர்ந்த நாம் கொள்ளும் விலங்கு நேசத்திற்கும் பழங்குடியினரின் இயற்கை மீதான ஆன்மீகம் கலந்த அன்பிற்கும் மலைக்கும் மடுவுக்கும் உள்ள தொலைவு உண்டு.
வேட்டைக்குப் போய் விலங்குகளைக் கொன்று வீரத்தை காட்டிக் கொள்ளும் நகர்ப்புறத்தவர் நாகரீகமானவர்கள் என்றும், உணவுத் தேவைக்கு மேல் எந்த விலங்கையும் கொல்லாதவர்கள் நாகரீகம் அற்ற காட்டுமிராண்டிகள் என்றும் எல்லைக் கோடுகளை உருவாக்கி வைத்திருக்கிறோம்.
மரங்களை வெட்ட வேண்டுமானால் முதலில் எங்களை வெட்டுங்கள் என்று அரசரையே எதிர்த்து நின்றவர்கள் பிஷ்னோய் சமூகப் பெண்கள். ஒருவரை வெட்டினால் நான்கு பேர் வந்து மரத்தைக் கட்டியணைத்து நின்று இயற்கையைக் காத்தவர்கள் நாகரீகம் தீண்டாத பழங்குடியினர்தான். தாய் மான் இறந்துவிட்டால் அந்த மான் குட்டிகளை எடுத்து வந்து, அவை வளரும் வரை தாய்ப்பால் புகட்டும் வழக்கமும் இந்த மக்களுக்கு உண்டு.
இப்படி இயற்கையோடு இணைந்து வாழும் மக்களை காட்டுமிராண்டிகள் என்றும், மான் கறி விருந்து வைக்கும் நாமெல்லாம் நாகரீகமானவர்கள் என்றும் நாமாகவே எண்ணிக் கொள்ளும் மடமையிலிருந்து வெளி வருவோம்.
ஆகஸ்ட் 9 சர்வதேச பழங்குடியினர் தினமாக ஐநாவால் அறிவிக்கப்பட்டுள்ளது. வனங்களையோ, ஆறுகளையோ வரைமுறையற்று சுரண்டிக் கொள்ள முதலாளிகளுக்கு வாய்ப்பளிக்கும், மத்திய அரசின் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு(EIA) வரைவு போன்ற அபாயங்கள் நம்மை நெருக்கித்தள்ளும் சூழலில் இப்பிரபஞ்சவெளியில் மனிதனும் இயற்கையின் ஒரு சிறு கண்ணி மட்டுமே, என்று வலியுறுத்தும் பழங்குடிச் சமூகங்களில் காலடியில் அமர்ந்து ஞானம் பெற வேண்டிய நிலையில் இருக்கிறோம்.
காட்டுமிராண்டிகளை மதிப்போம்; இயற்கையோடு இயைந்து வாழ அவர்களிடம் கற்போம்!
இன்னும் சில வருடங்களில் வளம் இழந்து கொண்டிருக்கும் தமிழகம், முழுவதுமாக வளம் இழந்து விடும்…