மரியா மாண்டிசோரி(August 31, 1870 – May 6, 1952)
உலகம் முழுவதிலும் மரபான கல்வி முறைகள் மனப்பாடத் திறனையும், அடி உதவுவது போல் அண்ணன் தம்பி கூட உதவ மாட்டார்கள் என்ற கொள்கையையும் மட்டுமே நம்பி செயல்பட்டுக் கொண்டிருந்த காலம் அது. அந்நிலையில் கண்டு கேட்டு உண்டுயிர்த்து உற்றறியும் ஐம்புலன்கள் வழியே குழந்தையின் அறிவுத் திறனை மேம்படுத்தும் கல்வி வழிமுறையை அறிமுகப்படுத்தியவர்தான் மரியா மாண்டிசோரி.
இத்தாலியைச் சேர்ந்த மருத்துவரான மரியா மாண்டிசோரி 1896இல் ரோம் பல்கலைக்கழகத்தில் மருத்துவப் பட்டம் பெற்றார். இத்தாலியின் முதல் பெண் மருத்துவர் இவர்தான். அப்பல்கலைக் கழகத்தின் உளவியல் துறையில் துணை மருத்துவராக வேலைக்குச் சேர்ந்த மரியா, சிறப்புக் குழந்தைகளின் கல்வி முறைகளைப் பற்றி ஆர்வம் கொண்டவரானார்.
பயிற்றுவித்தல் தொடர்பான உளவியலில் ஆய்வுகள் மேற்கொண்டு, அவற்றின் மூலம் புதியதொரு கல்விக் கொள்கையை உருவாக்கினார். அது அவரது பெயராலேயே மாண்டிசோரிக் கல்வி முறை என்று அழைக்கப்பட்டு வருகிறது.
ரோம் நகரின் புறநகர் சேரிப் பகுதிகளில் ஒன்றில் காசா தே பாம்பினி (Casa dei Bambini) எனும் மழலையர் பள்ளியைத் துவக்கி, அதில் தனது கல்விக் கொள்கையைப் பயன்படுத்தி குழந்தைகளுக்கு கற்பிக்கத் துவங்கினார். அங்கு கிடைத்த வெற்றியின் பயனாகத் தொடர்ந்து 40 ஆண்டுகளாக உலகெங்கும் பயணித்து அக்கல்வி முறையை பரவச் செய்தார்.
அப்படி மரியா செய்த மாயம்தான் என்ன?
கற்றல் என்பதை எளிதாக்கும் விதத்தில் பல்வேறு கருவிகளை வடிவமைத்தார். குழந்தைகள் அவற்றைப் பயன்படுத்தி தாங்களே கற்றுக் கொள்ளும் சூழலை வகுப்பறைகளில் உருவாக்கினார்.
ஐம்புலன்களின் வழியாகவும் உணர்ந்து கற்கும் முறையை (Multisensory teaching) முன்னிறுத்தினார்.
அன்றாட வாழ்வுக்கான செயல்களையும் வகுப்பறையில் (Essence Of Practical Life – EPL) கற்பிக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார்.
ஷூ லேஸ் கட்டுவது, பட்டன் போடுவது, வீட்டை சுத்தம் செய்வது, பாட்டில் / டம்ப்ளர் போன்றவற்றில் நீர் நிரப்பி விநியோகிப்பது, காய்கறி பழங்களை தோலுரித்து நறுக்குவது போன்ற வேலைகளுக்கு அந்தந்த வயதுக்கு தகுந்தபடி பயிற்சி அளிப்பது இக்கல்வி முறையின் EPL பகுதியில் வரும். அதே போல மொழியையும், கணிதத்தையும் கூட வாய்ப்பாடுகளாகவும், சூத்திரங்களாகவும் சொல்லித் தராமல், புலன்களால் உணரக் கூடிய வகையில் சொல்லித் தருவதே இம்முறையின் சிறப்பு.
கேட்பதற்கு எளிதானதாகத் தோன்றும் இவற்றை எல்லாம் சிறு குழந்தைகளுக்கு ஏற்ற விதத்தில் அறிமுகப்படுத்தி, கற்றுத் தருவது சாதாரண விஷயம் அல்ல.
பல்கலைக் கழகத்தில் படிக்கும் காலத்தை விடவும் முதல் ஆறு வருடங்களில் ஒரு குழந்தைக்கு கிடைக்கும் கல்வியே அதன் அறிவை வடிவமைக்கும் வல்லமை கொண்டது என்பது மாண்டிசோரி அம்மையாரின் திடமான நம்பிக்கை.
பட்டாம்பூச்சிகளை குண்டூசி கொண்டு ஒரு இடத்தில் குத்தி வைப்பதைப் போன்று வகுப்பறையில் ஒரு இருக்கையில் குழந்தைகளை கட்டிப் போடுவது அநீதி என்று எண்ணியவர் மாண்டிசோரி.
அவர் ஏழை எளிய மக்களின் குழந்தைகளுக்காக வடிவமைத்து உருவாக்கிய மாண்டிசோரி கல்வி முறை இன்று மிகவும் விலையேறிய விஷயமாக தனியார் பள்ளிகளால் முன்னெடுக்கப்படுவது ஒரு நகை முரண் என்றே சொல்லலாம்.
அரசின் ஆரம்பப் பள்ளிகள் அனைத்தும் இத்தகைய அருமையான கல்வி முறைக்கு மாறுவதே மரியா மாண்டிசோரிக்கு நாம் செலுத்தும் மரியாதையாக இருக்க முடியும். ஆனால் நம் அரசுகளோ கால இயந்திரத்தில் பின்னோக்கிப் பயணிக்கும்படியான மாறுதல்களையே கல்விக் களத்தில் செய்கின்றன.
கொடுமை… வேறு ஒன்றும் சொல்வதற்கில்லை…