மனநலம் மன்னுயிர்க்கு ஆக்கம்


மனநலம் என்றால் என்ன? ஒரு மனிதன் தன் உணர்வுகளை சரியாகக் கையாள்வதும், சராசரியான அறிவாற்றலுடன் இருப்பதுமே அம்மனிதனின் மனநலத்துக்கான அடிப்படையான அளவு கோல்கள். வாழ்வை மகிழ்வோடு எதிர்கொள்வது, வாழ்வின் பல்வேறு செயல்பாடுகளுக்கு இடையே சமநிலையைப் பேணுவது, உடல் நலம் பேணுவது போன்றவையெல்லாம் ஒருவர் சரியான மனநலத்துடன் வாழ்வதன் அறிகுறிகள்.

உலக மனநல கூட்டமைப்பு(World Federation for Mental Health)1992-ஆம் ஆண்டு முதல் அக்டோபர் 10-ஆம் தேதியை உலக மனநல நாள் ஆகக் கொண்டாடி வருகிறது. மனநலம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதும், மக்கள் தங்களின் மனநலத்தை பேணத் தேவையான முயற்சிகளை முன்னெடுப்பதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்துவதுமே இந்நாளுக்கான நோக்கங்களாகும்.

மன நலம் என்பதை மன நலச் சிக்கல்கள் ஏதுமில்லாத நிலை என்றும் வரையரை செய்யலாம். போதைப் பழக்கம், மனச்சோர்வு, அதீத பதற்றம், கற்பனையான பயங்கள், .  தற்கொலைச் சிந்தனைகள், அடிப்படையற்ற சந்தேகங்கள், உருவெளித் தோற்றங்கள் போன்றவையெல்லாமே மனநலச் சிக்கலின் வெளிப்பாடுகள்தான்.

ஒவ்வொரு வருடமும் இந்த நாளுக்கு மனநலம் சார்ந்த ஏதேனும் ஒரு குறிக்கோள் கருப்பொருளாக அறிவிக்கப்படுவது வழக்கம். தற்கொலை தடுப்பு, இளையோர் மனநலம், பணியிடங்களில் மனநலம், உளவியல் முதலுதவி போன்ற கருத்தாக்கங்களை கடந்த வருடங்களில் கருப்பொருளாக அறிவித்து வந்தனர்.

கொரோனா பெருந்தொற்றினால் உலகம் முழுவதும் பாதிக்கப்பட்டுள்ள  நிலையில் உலக சுகாதார நிறுவனமும் மனநலத்துக்கான கூட்டமைப்புகளும் இணைந்து உலகெங்கும் மனநலன் மேம்பாட்டுக்கென அதிக நிதி ஒதுக்கீடு செய்வதை ஊக்குவிக்க உள்ளன.

ஏழை என்பதாலோ, தொலைதூரத்தில் வசிக்கிறார் என்பதாலோ யார் ஒருவருக்கும் மனநலம் பேணுவதற்கான உதவிகள் கிடைக்காமல் போய்விடக் கூடாது என்பதுதான் தங்கள் குறிக்கோள் என இக்கூட்டமைப்புகள் தெளிவுபடுத்தியுள்ளன. ”மனநலத் திட்டங்களில் அதிக முதலீடு கோருவது’ என்பதே இவ்வருட மனநல நாளுக்கான முக்கிய கருப்பொருளாகும்.

வீடடங்கு(Lock down), தனி நபர் இடைவெளி (Personal distancing) போன்ற புதிய விஷயங்கள் உலகத்தையே அச்சுறுத்திவரும் இக்காலகட்டத்தில் எல்லோருக்கும் மனநலத்திற்கான உதவிகள் கிடைக்குமாறு செய்வது இன்றியமையாதது.

முறையான மருத்துவ சிகிச்சையும், கவுன்சிலிங்கும் தேவையுள்ள அனைவருக்கும் வழங்கப்பட வேண்டும். மனநலச் சிக்கல்களுக்கான சிகிச்சை அவமானத்துக்குரிய ஒன்றல்ல. அவ்வாறு சிகிச்சை பெறுவோருக்கு அன்பும் ஆதரவும் தர வேண்டியது நம் அனைவரின் கடமை.

(அக்டோபர் 10-ஆம் தேதி உலக மனநல நாள்)

About லக்ஷ்மி பாலகிருஷ்ணன்

சொல்லிக்கொள்ளுமளவு பெரிதாக ஏதுமில்லை. :)
This entry was posted in Uncategorized and tagged , , , . Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s