பிறர் வலியை உணர்வது என்பதே இன்று கொஞ்சங் கொஞ்சமாகக் குறைந்து வருகிறது. குடும்ப உறவுகளுக்குள் கூட மற்றவரின் தேவைகளை, சிரமங்களைப் புரிந்து கொண்டு அனுசரித்துப் போக முடியாத ஒரு தலைமுறையை உருவாக்கி வைத்திருக்கிறோம்.
அடுத்தவர்களின் வலியைப் பற்றித் தெரிந்து கொள்வதே கூட நமக்குத் தேவையற்ற சுமை என்று நினைக்கிறோம். நெருங்கிய தோழி ஒருத்தியிடம் பேசிக் கொண்டிருக்கும்போது ஆட்டிசம் குறித்த என்னுடைய பதிவொன்றைப் பற்றி குறிப்பிட்டு பேசினேன். அப்படியா என்று கேட்டாள் அவள். இத்தனைக்கும் அதில் விருப்பக்குறி(லைக்) இட்டிருந்தாள். அதைப் பற்றிக் கேட்டதற்கு, நீ எழுதற இந்த மாதிரி விஷயங்களை ஸ்கிப் பண்ணிடுவேன், படிச்சா மனசுக்கு கஷ்டமா இருக்கும்ல என்று ஒரு விளக்கம் வேறு.
அடுத்தவர்களின் குடும்ப உறவுச் சிக்கல்களை, அவர்களின் உணர்ச்சிக் குழப்பங்களை ரியாலிட்டி ஷோக்கள் வழியாக மாய்ந்து மாய்ந்து பார்க்கும் இதே சமூகம்தான் சொல்கிறது – உன் சமூக விழிப்புணர்வு பிரச்சாரம் ரொம்ப உணர்ச்சிகரமாக இருக்குமோ, அதைப் படித்தாலே என் அனிச்ச மலர் இதயம் குழைந்துவிடுமோ என்று நான் படிப்பதில்லை என்று.
கடந்த சில வருடங்களாகவே நானும் சரி பாலாவும் சரி ஆட்டிசம் குறித்து மட்டுமே பெரும்பாலும் எழுதிக் கொண்டிருக்கிறோம். ஆயினும் நெருங்கிய நண்பர்களில் கூட பெரும்பான்மையினர் அவ்வகை பதிவுகளை முழுவதாக படிப்பதும் இல்லை, உள்வாங்கிக் கொள்வதுமில்லை. லைக்குகளுக்கும், கமெண்டுகளுக்கும் குறைவில்லைதான். ஆனால் சொல்லும் விஷயங்கள் அவர்களின் மனதை தைப்பதில்லை என்பதை பல்வேறு சம்பவங்களில் புரிந்து கொண்டிருக்கிறோம். ஆயினும் என்கடன் பணி செய்து கிடப்பதே எனும் கொள்கையின்படி தொடர்ந்து இப்பாதையில் பயணிக்க வேண்டியிருக்கிறது.
இன்று சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் – International Day of Persons with Disabilities(IDPD).நம்மில் குறைகள் இல்லாத மாமனிதர் என்று எவருமே இல்லை. படங்களிலும் கதைகளிலும் செதுக்கி உருவாக்கப்படும் அப்பழுக்கற்ற குறைகளே இல்லாத, தோல்வியே காணாத கதாபாத்திரங்கள் யாரும் நிஜத்தில் உயிர் வாழ்வதில்லை. எனவே எவ்வகைக் குறையையும் எள்ளி நகையாடவோ இடக்கையால் ஒதுக்கவோ செய்யாதீர்கள்.
நெருநல் உளனொருவன் இன்றில்லையெனும் பெருமை கொண்டதிவ்வுலகு என்கிறார் வள்ளுவர். ஆனால் நேற்று நன்றாக இருந்த ஒருவர் இன்றும், என்றும் அவ்வண்ணமே இருப்பார் என்று கூட உறுதியில்லாத சூழலில் வாழ்கிறோம் நாம். முதுமையில் அல்சைமரோ பார்கின்சனோ வராது என்பதற்கு எந்தவித உறுதியும் கிடையாது. அவ்வளவு ஏன், அமைதியாக உங்கள் இருசக்கர வாகனத்தை ஓட்டிக் கொண்டிருக்கையில் முறிந்து விழும் ஒரு கொடிக்கம்பம் உங்களை மாற்றுத்திறனாளியாக்கி ஓரத்தில் உட்கார வைத்துவிட முடியும் எனுமளவுக்கு நிலையாமை நிறைந்த உலகில் வாழ்கிறோம் இன்று.
எனவே அடுத்தவரின் குறைகளை – அது வெளித்தெரியும் படியான உடற்குறையோ, அல்லது அறிவுசார் குறைபாடோ, உடற் பருமனோ, திக்குவாயோ, தலைமுடி கொட்டி வழுக்கையாவதோ எதுவாக இருப்பினும் அக்குறைகளை தவிர்த்து அந்த மனிதரின் மற்ற பக்கங்களைப் பாருங்கள். குறைகளை வைத்து செய்யும் கேலிகளை நகைச்சுவை என்று எண்ணி சிரிக்காதீர்கள். கருப்பாக இருப்பதோ, குண்டாக இருப்பதோ, பார்வைக் குறைவோ நகைச்சுவையான விஷயம் அல்ல.
முக்கியமாக இப்படியான உருவக் கேலிகளை, இயலாமையை கிண்டல் செய்வதை நகைச்சுவை என்று குழந்தைகளுக்குச் சொல்லித் தராதீர்கள். அப்படி யாரேனும் சொல்வதை நம்பி அவர்கள் சிரித்தாலும் அவர்களிடம் பக்குவமாகப் பேசி குறைகள் குற்றங்கள் அல்ல என்று புரிய வையுங்கள். குறைபாடுகள் இயற்கையின் ஒரு அங்கம். அதை அப்படியே ஏற்றுக் கொண்டு வாழ்வதே நம் மனமுதிர்ச்சியைக் காட்டும் செயல்.
எல்லோருக்குமான உலகு இது. அதை நாம் உணர்வது போலவே மற்றவரையும் உணரச் செய்ய வேண்டும். தனியொருவனுக்கு உணவில்லை என்பது மட்டுமல்ல நாம் இச்சமூகத்திற்கு பாரமாக இருக்கிறோமோ என்று சிலர் மனம் வாடும் சூழல் இருந்தாலும் கூட ஒரு சமூகமாக நாம் தோற்றுவிட்டோம் என்றே பொருள். எல்லோரும் எல்லாமும் பெற்று வாழ்வது நம் கருணையால் அல்ல அவர்களின் உரிமையால் என்ற எண்ணம் கொண்டு எல்லோருடனும் ஒன்றுபட்டு வாழ இந்நாளில் உறுதி கொள்வோம்.
*************
2020ஆம் ஆண்டிற்கான ஐநாவின் மாற்றுத் திறனாளிகள் தினக் கருப்பொருள் ”கோவிட் 19ற்குப் பிறகான புதிய உலகில் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள் உறுதி செய்யப்பட வேண்டும்(Building Back Better: toward a disability-inclusive, accessible and sustainable post COVID-19 World)” என்பதாகும்.

Reblogged this on Autism Candles Blog.
அன்பான பெற்றோர்கள். முயற்சியில் தளராது
அணைத்து வேலியாகவும்,
வாய்க்கால் வடிகாலாகவும் வாழும்
அவர்களுக்கு அணைப்பு.
இந்தத் தளிர்கள் மேலும் வளரும்.
வளர்ந்து பெற்றோரை அணைப்பான்.