பழைய கதைகள், படங்களில் எல்லாம் மைனர் என்கிற பொதுப்பெயரில் சில கதாபாத்திரங்கள் உலவுவதை படித்திருப்போம் அல்லது பார்த்திருப்போம். அந்த மைனர்கள் எல்லோருமே மது, மாது ,சூது என சகலவித கெட்ட பழக்கங்களுக்கும் புகலிடமாக மோசமான நடத்தை உள்ளவர்களாக உலாவுவார்கள். உண்மையில் மைனர் என்றால் 18 வயதுக்கு உட்பட்டவர்கள் என்பது பொருள். அந்த வார்த்தை எங்கனம் துர்நடத்தைகளோடு சம்பந்தப்படுகிறது?
நிறைய சொத்துள்ள மனிதர்கள் அகால மரணமடையும் போது, அவர்களின் குழந்தைகள் குறிப்பாக ஆண் வாரிசு 18 வயதுக்குக் கீழ்ப்பட்ட வராக இருக்கும் பட்சத்தில் அந்த சொத்துக்கள் மைனர் சொத்துக்கள் என்று ஆகிவிடும். அக்குழந்தையின் நெருங்கிய உறவினர் ஒருவர் சொத்துக்களுக்கு கார்டியனாக இருப்பார்.இந்தக் கார்டியன் ஆகப்பட்டவர் பெரும்பாலும் சித்தப்பா பெரியப்பா என பங்காளி முறையாகத்தான் இருப்பார். எனவே இந்த மைனரின் சொத்துக்களை, தான் கபளீகரம் செய்வதற்கு இலகுவாக எல்லா கெட்ட பழக்கங்களையும் அறிமுகம் செய்வித்தோ , அல்லது தானாகவே பையன் அப்படியெல்லாம் திசைதிரும்புகையில் கண்டிக்காமலோ வளர்ப்பார்கள். அப்போதுதான் அவன் பண்ணையம் பார்ப்பதில் கவனம் செலுத்தாமல், நிலம் பணமாகக் காய்க்க வேண்டும் என்று எதிர்பார்ப்பான். கார்டியன் நீட்டும் இடத்திலெல்லாம் கையெழுத்துப் போடுவான். ஊரில் கெட்ட பெயரெடுத்து விடுவான் என்பதால் நல்லவர்கள் யாரும் அவனுக்கு அருகில் கூட வரமாட்டார்கள்.
இந்த நிலையில் உள்ள மைனர்களைத்தான் நாம் பழைய கதைகளின் வில்லனாகப் பார்ப்போம். ஆனால் உண்மையில் அவர்களின் வாழ்கை பரிதாபகரமான ஒன்றுதான். பெரும்பாலான மைனர்கள் சொத்துக்களை இழந்து, வாழ்ந்து கெட்டவன் என்ற புதிய நாமகரணத்தைத்தான் அடைவார்கள்.குழந்தைகளின் வளர்ச்சியில், நல்வாழ்கையில் பெற்றவர்களை விட அதிக அக்கறை உள்ளவர்கள் இருக்க முடியாது. பெற்றோரில் ஒருவர் இறந்தால் மற்றொருவர் அப்பொறுப்புகளை ஏற்றுக் கொள்வதுதானே நன்மை தரும் முறையாக இருக்க முடியும்? ஆனாலும் இப்படியான தலையைச் சுற்றி மூக்கைத் தொடும் அமைப்பு ஏன் நம் சமூகத்தில் புழக்கத்திலிருந்தது?
ஏனெனில் அப்போதெல்லாம் பெண்களுக்கு சொத்துரிமை கிடையாது. அது மட்டுமல்ல சொத்துக்களை நிர்வகிக்கும் உரிமையும் கூட பெண்களுக்கு கிடையாது. அதை யார் சொன்னது? இந்து தர்மம்தான் சொன்னது. பிரிட்டிஷ் அரசு மதமாற்றத்தை ஊக்குவித்தது என்றாலும் கூட மாற்று மதத்தவரின் உரிமைகளில் ஒரு போதும் சட்டபூர்வமாகத் தலையிட்டதும் இல்லை. எனவே இந்து சட்டமா, கூப்பிடு வைதீகர்களை, அவர்கள் சொல்லை அப்படியே சட்டமாக்கிவிடு என்பதுதான் அவர்களின் வழக்கம். சதி ஒழிப்பு, சாரதா சட்டம் என ஒவ்வொரு மாற்றத்திற்கும் அவர்களிடம் போராட வேண்டியிருந்ததே இந்த நடுநிலைத் தன்மையினால்தான்.
சரி, அன்னியர் ஆட்சியில்தான் இந்த நிலை. நாடு சுதந்திரம் பெற்ற பிறகாவது நிலை மாறியதா என்று பார்த்தால் ஏமாற்றம்தான். பெண்களுக்கே இதெல்லாம் தங்களுக்குத் தேவை என்ற எண்ணம் எழாமலும், எழுந்தாலும் போராட முடியாமலும் இருந்த நிலையில் பெண்களுக்கு சொத்துரிமை வேண்டும் என்கிற சட்டத் திருத்தத்தை முன் வைத்தவர் அம்பேத்கர். அந்த சட்டம் தோற்கடிக்கப் பட்டபோது அதை தனது சொந்தத் தோல்வியாகக் கருதி தனது அமைச்சர் பதவியை உதறி எறிந்தவர் அவர்.
பிறகு மெல்ல மெல்ல பல்வேறு காலகட்டங்களில் பெண்களின் சொத்துரிமை குறித்த சட்டத் தெளிவுகள் ஏற்பட்ட போதும் அதற்கான அடிப்படை விதையை இம்மண்ணில் ஊன்றியவர், அதற்கு தனது பதவியையே உரமாக இட்டவர் அண்ணல் அம்பேத்கர்தான்.
இன்று மட்டுமல்ல அன்றாடமுமே பெண்கள் அனைவரும் நன்றியோடு அவரை நினைத்துக் கொள்ள கடமைப்பட்டிருக்கிறோம்.
#அம்பேத்கர்#டிசம்பர்6