காற்றில் கரையும் கற்பூர வாழ்கை


மும்பை கொலாபா பகுதியில் நடந்த சம்பவம் இது. தன்வீட்டு வாசலில் அமர்ந்து, அங்கே விளையாடிக்கொண்டிருந்த சிறுவர்களை வேடிக்கை பார்த்தபடி அமர்ந்திருந்தான் தருண். அவனுக்கு வயது பதினாறு. அப்போது அந்த வழியாக மேளதாளங்கள் முழங்கியபடி சென்ற ஒரு ஊர்வலத்தைப் பார்த்ததும் உற்சாகமான தருண்,  தன்னையறியாமல் ஆடியபடியே அந்த ஊர்வலத்தில் ஐக்கியமானான். ஊர்வலம் சத்ரபதி சிவாஜி ரயில் நிலையத்தில் முடிந்ததும் அதிலிருந்தவர்கள் கலைந்து போனார்கள். வீட்டுக்குத் திரும்பி வர வழி தெரியாத தருண் குடும்பத்தினருடனான தொடர்பை முற்றிலும் இழந்தான். இச்சம்பவம் நடந்தது 2019ஆம் ஆண்டு அக்டோபர் ஒன்றாம் தேதி. இதோ, ஒன்னரை வருடம் கடந்த நிலையில் இன்று வரை அவனைத் தேடி அலைந்தபடி இருக்கிறது அந்தக் குடும்பம்.

அதெப்படி 16 வயது சிறுவனுக்கு தனது முகவரியைச் சொல்லி, உதவி கேட்டு வீடு வந்து சேர முடியாமல் போகும் என்ற எண்ணம் எழுகிறதா? அச்சிறுவன் ஆட்டிச குறைபாட்டால் பாதிக்கபப்ட்டவன். சரிவர பேசவோ தன் நிலையை பிறருக்கு உணர்த்தவோ முடியாதவனாக அவன் இருந்தால் வேறென்ன நடக்கும்?

தருணின் தந்தை கொஞ்சம் பொருளாதார செல்வாக்கு மிக்கவர் என்பதால் காவல்துறை, ரயில்வே பாதுகாப்பு படை, தனியார் துப்பறியும் நிபுணர்கள் என பல்வேறு தரப்புகளின் வழியையும் தேடி அலைந்தார். இன்று மெல்ல மெல்ல இவ்வனைத்து அமைப்புகளின் மீதும் நம்பிக்கை இழந்து இப்போது ஜோசியக்காரர்கள், குறி சொல்பவர்கள் சொல்லும் இடத்திலெல்லாம் சென்று தேடிப் பார்க்க ஆரம்பித்துள்ளார்.

ஜோசியக்காரர் ஒருவர் ”உன் மகன் உன் வீட்டிலிருந்து வெகுதூரத்தில் உள்ளான். சுமாராக மும்பையிலிருந்து 150 முதல் 200 கிமீ  தூரத்தில் பத்திரமாக உள்ளான். அது எந்த திசையில் வேண்டுமானாலும் இருக்கலாம். எனவே சுற்று வட்டாரம் முழுமையும் தேடு” என்று சொல்லியிருக்கிறார்.

எனவே வரைபடத்தை பரப்பி, மும்பையிலிருந்து ஒவ்வொரு திசையிலும் 150 கிமீ தாண்டியுள்ள இடங்களாகத் தேர்ந்தெடுத்து, அங்கெல்லாம் காரில் தன் நண்பர்களோடு சென்று தேடுதல் வேட்டையை நடத்தி வருகிறார். ஒவ்வொரு முறையும் கிட்டத்தட்ட 4000 கிமீ பயணித்துவிட்டு தோல்வியுடன் திரும்பி வந்தாலும் இப்போது ஓரளவு நம்பிக்கையோடிருக்கிறார். ”எங்கோ ஒரு இடத்தில் என் மகன் உயிரோடு இருக்கிறான் என்ற நம்பிக்கையே எனக்குப் போதும், இன்னமும் நான் தேடத் தயார்” என்று சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறி இருந்தார். அந்தத் தந்தையின் மூட நம்பிக்கையைக் கண்டு சிரிப்பதற்கு முன்னர் அந்நிலைக்கு அவரைத் தள்ளிய சூழல் எதுவென பார்க்கலாம்.

சத்ரபதி சிவாஜி ரயில் நிலையத்தில் திசையைத் தொலைத்து நின்ற தருண் முதலில் கண்ணில்பட்ட ரயிலில் ஏறி பன்வேல் எனும் மும்பையின் புறநகர் ரயில் நிலையத்தில் இறங்கினான். இரண்டு நாட்கள் வரை அந்த ரயில் நிலையத்துக்குள்ளேயே சுற்றி வந்துள்ளான். அங்கிருந்த ரயில்வே பாதுகாப்புப் படையினரிடம் உணவுக்கும், தண்ணீருக்குமாய் பலமுறை கையேந்தி உள்ளான் தருண்.

பார்வைக் குறைபாட்டுக்காக அணிந்த பெரிய கண்ணாடி, திக்கித் திணறி பேசும் விதம், போக்கிடம் தெரியாது அங்கேயே சுற்றி வருவது இவை அனைத்தையும் வைத்துப் பார்த்தாலே அச்சிறுவனின் குறைபாடு வெளிப்படையாகத் தெரிந்திருக்கும் அல்லவா? குறைந்த பட்சமாய அருகாமையிலுள்ள காவல் நிலையத்தில் ஒப்படைக்கும் பொறுப்பு கூட இல்லாமல் அந்த நிலையத்தின் பாதுகாப்புப் படையினர் அவனை இரண்டு நாட்கள் கண்டுகொள்ளக் கூட இல்லை.

மூன்றாவது நாளும் தருண் அழுதபடியே உணவு கேட்டுக் கையேந்த, தொல்லையாகிப்போச்சே என்று இவன் மீது கோபம் கொண்டு, கடுப்பான ஒரு இளம் ரயில்வே கான்ஸ்டபிள் தருணை கைப்பிடியாக இழுத்துக்கொண்டுப்போய்,  கோவா பக்கம் செல்லும் ஒரு ரயிலில், சரக்குகள் ஏற்றும் பகுதியில் கொண்டு போய் உட்கார வைத்திருக்கிறார். இதுதான் கடைசியாகக் கிடைத்துள்ள சிசிடிவி கேமிரா பதிவின் படியான தகவல்.

அதற்குப் பிறகு வினோத் குப்தாவின் தொலைபேசி எண்ணுக்கு எண்ணற்ற அழைப்புகள் – தருணை அங்கே பார்த்தேன், இங்கே பார்த்தேன் என்று. சொன்ன இடத்திற்கெல்லாம் ஓடினார் அவர். ஆனால் தருணின் தடம் இன்றுவரை தெரியவில்லை.

தருண் அப்பா கொடுத்த புகாரின் அடிப்படையில் தருணை ஏதோவொரு ரயிலில் ஏற்றியதற்காக அந்தக் காவலர் மீது ரயில்வே பாதுகாப்புப் படை விசாரணை மேற்கொண்டு வருகிறது. ஆனால் இதனால் எல்லாம் தருண் திரும்பக் கிடைப்பானா?

இங்கே தவறு அந்த ஒரு காவலரின் மீது மட்டும்தானா? இல்லை, விழிப்புணர்வும் புரிதலும் இல்லாத நம் ஒட்டுமொத்த சமூகமும் இத்தகைய அவலத்திற்கு காரணம்தான்.

எங்கோ வெகுதூரத்தில் மும்பை வரை போக வேண்டாம். நம் தமிழகத்தில் சென்னையிலும் இதுபோன்றதொரு சம்பவங்கள் அடிக்கடி நிகழ்கின்றன. அப்படி ஒரு சம்பவம் இது. விக்கி, பதினாறு வயது இளைஞன், சைக்கிள் ஓட்டத் தெரிந்தவன், கையில் தொடுதிரை கொண்ட கைபேசியும் உண்டு. ஒரளவுக்கு பேசக் கூடியவன். ஆனாலும் சிறப்புத் தேவைகள் உள்ள நபர்தான்.

ஒரு நாள் வீட்டில் ஏதோ கோபம், எரிச்சலில் தனக்கு பரிச்சயம் இல்லாத ஏரியாவிலெல்லாம் சைக்கிளில் திரிய ஆரம்பித்தான். அடிக்கடி இப்படி அவன் வெளியே போய்விட்டு வந்துவிடுவான் என்பதால் வீட்டினரும் காத்திருக்கின்றனர். ஆனால் நேரம் அதிகமாக அதிகமாக குடும்பத்தினர் பையன் தொலைந்ததை உணர்ந்து விட்டனர். அவனது தொலைபேசிக்கு அழைக்க, தொடர்பு எல்லைக்கு வெளியே இருக்கிறார் என்ற பதிலே கிடைக்கிறது. பரபரப்பாக சுற்று வட்டாரப் பகுதிகளைத் தேடவும், சமூக வலைத்தளங்களில் விக்கியின் புகைப்படத்தோடு செய்தியைப் பரப்பவும் ஆரம்பித்தனர்.

விக்கியின் வீட்டிலிருந்து 15 கிமீ தொலைவில் அந்த ஐஸ்கிரீம் பார்லர் உள்ளது. சைக்கிளில் சுற்றிக்கொண்டிருந்த விக்கிக்கு, அக்கடை கண்ணில்படுகிறது. கையில் காசிருக்கிறதா, அது தனக்கு வேண்டிய ஐஸ்கிரீமை வாங்கப் போதுமா என்றெல்லாம் கணக்கிடும் அளவுக்கு அவன் விவரமனவன் அல்ல. கேட்பதை வாங்கித் தரும் பெற்றோர் உற்றோர் துணையுடனே சென்று பழகியவன். வழக்கம் போல வேண்டியதை ஆர்டர் செய்து வாங்கி உண்கிறான். பில் கைக்கு வந்ததும் தான் அடுத்து என்ன செய்வதென்று தெரியவில்லை. கடை உரிமையாளர் அவனிடம் பேசிப் பார்க்கிறார். பில்லுக்கு பணம் தரத் தெரியாதவனுக்கு செல் ஒரு கேடா என்றபடி அவனது செல்லைப் பிடுங்கி வைத்துக் கொண்டு அவனை அடித்து விரட்டி விட்டார். உச்சபட்சமாக அந்த செல்லை அணைத்து கல்லாப் பெட்டியிலும் போட்டுவிட்டார்.

வேறென்ன, அதே கதைதான். பையன் தெருத்தெருவாக வெய்யிலில் நடக்கிறான். யாரிடமும் உதவி கேட்கத் தெரியாது. பெற்றோரைத் தொடர்பு கொள்ள கையில் தொலைபேசியும் இல்லை. இரவு பத்து மணிவாக்கில், சென்னை நந்தனம் பகுதியில் இருந்த ஒரு பெட்ரோல் பங்கின் அருகில் பேந்தப் பேந்த நின்றிருந்த காவலர் ஒருவர் கண்டுபிடித்துவிட்டார். ஏற்கனவே சென்னை காவல்துறையினர் அனைவருக்கும் பையனின் படம் வாட்சப்பில் அனுப்பப்பட்டிருந்ததால் நம் காவலரால் எளிதில் அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டு குடும்பத்தைச் சென்றடைந்தன் அந்த சிறுவன்.

இங்கே அப்பெற்றோரின் நல்லூழ், நம் காவலர்களின் விழிப்புணர்வு எல்லாம் சேர்ந்து, சுமார் 18 மணி நேர அலைக்கழிப்பிற்கு பின்னர் ஒருவழியாகப் விக்கியை, அவனது பெற்றோரிடம் சேர்த்துவிட்டன. ஆனால் மதியமே எளிதாக அவன் வீடு சென்றிருக்க முடியும். அந்த ஐஸ்கிரீம் கடை உரிமையாளர் அவனிடமே பெற்றோருக்கு போன் பேசி, வரவழை என்று சொல்லியிருக்கலாம். அல்லது தானே கூட தொலைபேசியை வாங்கி, பெற்றோரின் எண்ணைப் பார்த்து பேசியிருக்கலாம். ஓடி வந்து உரிய பணத்தைக் கொடுத்துவிட்டு, நன்றியும் சொல்லியபடி பையனைக் கூட்டிப் போயிருப்பார்கள். ஆனால் அந்தப் பையன் சாப்பிட்ட ஐஸ்கிரீமுக்கு பணம் தராதது பஞ்சமகா பாவங்களில் ஒன்றெனவும், 100 ரூபாய் ஐஸ்கிரீமுக்கு பதிலாக 10000 ரூபாய் தொலைபேசியை தான் வாங்கி வைத்துக் கொள்வது சரி என்றும் எண்ணும்படியான ஒரு சிந்தனைப் போக்குத்தான் இங்கே சிக்கல்.

இதைப் போன்றே காணாமல் போய், இன்றும் வீடு திரும்பாதவர்களின் பட்டியலும் சாலை விபத்துகளில் மரணமடைந்து சடலமாக மீட்கப்பட்டவர்களின் பட்டியலும் நீண்டது.

திக்கற்றவர்களுக்கு தெய்வம் மட்டுமல்ல சற்றே நல்ல உள்ளம் இருந்தாலே போதும் நாமும் உதவ முடியும் என்ற எண்ணம் எல்லாத் தரப்பினருக்கும் வர வேண்டும். பெற்றோர்கள் ஒரு புறம் ஜிபிஎஸ் பொருத்திய சாதனங்களை எப்போதும் அணிவிப்பது போன்ற முயற்சிகளில் ஈடுபட்டிருக்கிறார்கள். சமூக ஊடகங்களில் உள்ளோரும் இது போன்ற செய்திகளை, புகைப்படங்களை தெளிவாக தேதியுடன் வெளியிட்டு பரப்ப வழிவகை செய்கின்றனர். ஆனால் இதெல்லாவற்றையும் ஒருங்கிணைக்க அரசின் முன்னெடுப்புகள்தான் இன்றைய அவசரத் தேவை.

நமது சுற்றுப்புறத்தில் ஒரு விலங்கிற்கோ பறவைக்கோ ஆபத்து ஏற்பட்டால் அழைத்துச்சொல்ல புளுகிராஸ் என்ற அமைப்பு இருப்பதையும் அதற்கு தனி எண் இருப்பதையும் நம்மில் பலரும் அறிந்து வைத்துள்ளோம். குறைபாடுள்ள, தன்னைத் தானே பார்த்துக் கொள்ள முடியாத மனிதர்களைக் கண்டாலும் அழைத்துச் சொல்வதற்கு ஒரு அமைப்பு நமக்குத் தேவை அல்லவா?

சமூக நலத்துறை இதற்கான ஒரு தொடர்பு எண்ணை, அமைப்பை உருவாக்குதல் அவசியம் என்பதைத்தான் காற்றில் கரைந்த கற்பூரமாய் காணாமல் போகும் சிறப்புக் குழந்தைகளின் துயர் நம்மிடம் சொல்லிக் கொண்டே இருக்கிறது.

தருணைப் போல கூடிழந்த பறவையாய், காற்றில் கரையும் கற்பூரமாய் வேறெந்த சிறப்புக் குழந்தையின் வாழ்வும் சிதறிவிடாமலிருக்க அனைவரும் நம்மாலான முயற்சிகளைச் செய்வோம். அரசும் சில நல்ல முன்னெடுப்புகளைச் செய்யவேண்டும்.

About லக்ஷ்மி பாலகிருஷ்ணன்

சொல்லிக்கொள்ளுமளவு பெரிதாக ஏதுமில்லை. :)
This entry was posted in Uncategorized. Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s