அகண்ட பாரதம் என்று சொல்லிக் கொள்ளப்படும் புராண காலத்து பாரத வர்ஷமே ஒரு ஒன்றியம்தான். அதில் 56 தேசங்கள் உண்டு. புராணங்களில் எந்த அரசன் திக்விஜயம் செய்ய ஆரம்பித்தாலும் அவன் 56 தேசங்களையும் வென்ற பிறகுதான் ஓய முடியும். எந்த இளவரசிக்கு சுயம்வரம் வைத்தாலும் 56 தேசத்து அரசர்களும் வந்து வரிசையில் நின்றார்கள் என்பார்கள். நமது மொழிவாரி மாநிலங்களுக்கு முன்னோடியாக இருந்த இந்த 56 தேசங்களின் பட்டியல் கொண்ட விக்கி பக்கத்தின் சுட்டியைக் கட்டுரையின் கடைசியில் கொடுத்திருக்கிறேன்.
56 தேசங்களுக்கும் ஒற்றை அரசன் எப்போதுமே இருந்ததில்லை – புராண காலகட்டங்களிலும் கூட. அப்போதும் அஸ்வமேதமோ ராஜசூயமோ செய்த சக்ரவர்த்தி அவன் நாட்டை மட்டுமே ஆளுவான். பிற அரசர்கள் அவருக்கு கப்பம் கட்டுவதாக ஒப்புக் கொண்டு, தத்தம் நிலப்பரப்பை தாமே ஆளுவதுதான் வழக்கம். பாரதம் ஒரு பண்பாட்டுத் தேசியமாக, பல்வேறு கலாச்சார பரிவர்த்தனைகளோடு வாழ்ந்து வந்த ஒரு நிலப்பரப்பு – அவ்வளவுதான்.
இந்த 56 தேசங்களுக்குள்ளும் அங்கங்கே கொத்துக் கொத்தாக சில கூட்டமைப்புகள் உண்டு. அங்கம், வங்கம், கலிங்கம் எல்லாம் ஒரு குழு. அது போலவே திராவிட தேசம்(ஆந்திராவின் ஒரு பகுதியும், வட தமிழகமும் சேர்ந்த பகுதி), சோழ நாடு, பாண்டிய நாடு, கேரள நாடு ஆகியவை இணைந்த நாடுதான் நமது இன்றைய தமிழ்நாடு. அதாவது தொல்காப்பியத்தின் சிறப்புப் பாயிரத்தில் ‘வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ்கூறு நல்லுலகம்’ என்று குறிப்பிடப்படும், சிலம்பில் ‘நெடியோன் குன்றமும் தொடியோள் பௌவமும் தமிழ் வரம்பறுத்த தண்புனல் நல்நாட்டு’ என்று குறிப்பிடப்படும் பகுதியே தமிழ்நாடு.
மேலை நாடுகளிலிருந்து தரைவழியாக நம் நாட்டிற்கு வருவதானால் சிந்து நதியைக் கடந்தே வர வேண்டியிருந்தது. சிந்து நதியை இந்து நதி என்று அழைத்த ஐரோப்பியர்களே அதையொட்டிய நமது ஒன்றியத்திற்கும் இந்தியா என்ற பெயரை நல்கினார்கள். கிழக்கிந்திய கம்பெனியின் மூலம் இந்த இந்திய அரசுகள் அனைத்தையும் வென்றெடுத்த ஆங்கிலேயர்கள் உருவாக்கிய தேசம்தான் இந்தியா. அதற்கு முன் எந்த இந்திய அரசரும் முழுமையாக இப்படி இந்தியாவைக் கைப்பற்றியதோ, அப்படியே வென்றிருந்தாலும் கூட மொத்த நிலப்பரப்பையும் நேரடியாக ஆண்டதோ கிடையாது.
ஆங்கிலேயர்கள் கல்கத்தா, சென்னை, மும்பை ஆகிய கடற்கரை நகரங்களைத்தான் முதன்மையாகக் கருதினர் என்பதால் அவர்களின் ஆரம்ப கால ஆட்சியில் மதராஸ் மாகாணம், வங்காள மாகாணம் மற்றும் மும்பை மாகாணம் என்று மூன்றே மூன்று மாகாணங்கள்தான் இருந்தன.
உண்மையில் ஆங்கிலேய ஆட்சிக்காலத்திலேயே இங்கே மொழிவாரி மாநிலங்களுக்கான குரல் எழுந்துவிட்டிருந்தது. அதுவும் வடக்கிலேயே அக்குரல் ஆரம்பித்தது. கல்கத்தா என்ற பெரிய மாநிலத்திலிருந்து ஒரிய மொழி பேசும் ஒடிசா மாநிலமும், பீஹாரி மொழிகளை(போஜ்புரி, மைத்திலி போன்றவை) பேசும் பீஹார் மாநிலமும் தனியாகப் பிரியப் போராடின.
அப்போராட்டங்களின் வலிமையை உணர்ந்து ஆங்கிலேய அரசு ஒரிசா, பீஹார், பஞ்சாப் என மேலும் சில மாநிலங்களைப் பிரித்தது. இப்படியாக, விடுதலையின் போது நேரடியாக பிரிட்டீஷ் கட்டுப்பாட்டில் இருந்த 17 மாகாணங்களும், சில நூறு சுதேச சமஸ்தானங்களுமாக கந்தர கோலமாக வந்து சேர்ந்த இந்தியாவை மீளுருவாக்கம் செய்தது நேருவின் தலைமையிலான அரசு.
ஆனால் பல்வேறு இனங்களின், கலாச்சாரங்களின் தொகுப்புதான் இந்த ஒன்றியம் என்பதில் நமது அரசியலமைப்புச் சட்டத்தை வடிவமைத்த மாமேதைகளுக்கு சந்தேகம் எதுவும் இல்லை. எனவே அரசியலமைப்புச் சட்டத்தில் யூனியன் ஆஃப் ஸ்டேட்ஸ்(Union of States) என்றே இந்திய அரசு குறிப்பிடப்படுகிறது.
ஆக நமது தொன்மையான மரபின்படியும், நமது அரசியலமைப்புச் சட்டத்தின்படியும் ஒன்றிய அரசு என்ற பிரயோகம் சரியான ஒன்றுதான்.
அருமை… உண்மை…