நாவலில் இடம் பெற்றுள்ள முன்னுரை
*********************
நான் சென்னையில் பிறந்தவளாக இருந்தாலும் வளர்ந்ததெல்லாம் தஞ்சை மாவட்டத்தின் ஒரு சிற்றூரில்தான். அந்த ஒட்டுறவால்தானோ என்னவோ தஞ்சை குறித்த வரலாற்று நூல்களின் மீது தணியாத ஆர்வமுண்டு. அவை புனைவோ அபுனைவோ, எதுவாயினும் வாசித்து விடுவது வழக்கம். அந்த வகையிலேயே மராட்டிய அரசர்கள் குறித்த சில நூல்களை வாசித்தபோது தென்பட்ட ஒரு கடிதம் என்னை வியக்கவும், அதிரவும் வைத்தது.
பொதுவாக நம் நாட்டிலிருந்து மனிதர்களை மேற்கிந்தியத் தீவுகளுக்கு அடிமைகளாக விற்றதைப் பற்றி மட்டுமே நாம் அறிந்திருக்கிறோம். ஆனால் உள்ளூருக்குள்ளேயும் அடிமை முறை இருந்திருக்கிறது என்பது பெரிய அளவில் பேசப்படவே இல்லை. குறிப்பாக பெண்களை விற்பது என்பது பிரிட்டிஷ் ஆட்சியின் முதல் நூற்றாண்டிலும் மும்மரமாகவே நடந்து வந்திருக்கிறது.
அந்த வகையில் மராட்டியர்களின் தஞ்சை அரண்மனையில் விற்பனை செய்யப்பட்ட ஒரு பெண்ணைப் பற்றிய கதைதான் இது. சிறுவயதில் மணம் முடிக்கப்பட்ட மகளை கணவனுக்குத் தெரியாமல் சொந்த தகப்பனே, அவளை விற்றுவிட, மனைவியைத்தேடும் கணவன் அரண்மனையிலும், பிரிட்டிஷ் அலுவலர்களிடமும் தொடர்ந்து முறையிடுகிறான். உச்சபட்சமாக மதராஸ் மாகாணத்தின் கவர்னருக்கு அந்தக் கணவன் எழுதிய கடிதம் ஒன்றை நான் படிக்க நேர்ந்த கணம்தான் இந்த நாவல் என் மனதில் உதித்தது. ஒரு உண்மைச் சம்பவத்தின் மீது எழுந்து நிற்கும் புனைவுதான் இந்த நாவல்.
இரு நூற்றாண்டுகளுக்கு முன்னர் ஒரு ஆண் தன் மனைவியை, அவள் விற்கப்பட்ட பின்னும், அவள் சமூகத்தின் பார்வையில் கற்புடனிருக்க வாய்ப்பில்லை எனும் போதும்கூடத் தேடி அலைந்திருக்கிறான் என்பதே ஒரு வியப்பான செய்தி. அந்தக் கடிதத்தின் பின்னால் இருக்கும் அன்பும், நம்பிக்கையும் என்னை உருக வைத்தது. அபகரிக்கப்பட்ட மனைவியை தன் சொந்த வீரத்தைக் காட்டவே மீட்டேன் என்று சொல்லிவிட்டு, அவளை ஊரார் முன் தீக்குளிக்கச் சொன்ன ராமனை விடவும் அந்த எளிய மனிதனே ஒரு காவியத் தலைவனாகும் தகுதியுள்ளவன் என்றே எனக்குத் தோன்றுகிறது.
சதி எனும் உடன் கட்டை ஏறும் பழக்கத்திற்கான அகத்தூண்டல் பெண்களுக்கு இரு வகையில் அளிக்கப்பட்டு வந்தது. ஒரு புறம் நெருப்பில் இறங்கினால் கிடைக்கக் கூடிய தெய்வ நிலை பற்றிய விதந்தோதல். மாசத்திக் கல் எனும் நடுகல் நட்டு, சதி மாதாவை வழிபடும் பழக்கம் நமக்கு உண்டு. அத்தோடு அப்பெண்ணின் மைந்தருக்கு கிடைக்கும் குடிப்பெருமையும் சேர்ந்து கொண்டு தன்னிச்சையாகவே பெண்களை அம்முடிவை நோக்கி நகர்த்தவது..
உடன்கட்டையேறும் பெண்கள் அணிமணிகள் பூண்டு, மாமங்கலையாக நெருப்பில் நுழைய வேண்டும். அவர்கள் அணிந்திருக்கும் நகைகளை மறுநாள் சிதைச் சாம்பலில் இருந்து எடுத்துக் கொள்ளும் உரிமை ஈமக்கடனை நடப்பித்த புரோகிதருக்கு உரியது. இந்தப் பழக்கத்தை மனதில் கொண்டு பார்க்கும் போது, வைதீக மதம் சதியெனும் பழக்கத்தை எத்தனை உயர்வு நவிற்சிக்குட்படுத்தியிருக்கும் என்பதை உணர்ந்து கொள்ள முடியும்.
இன்னொரு புறம் அப்படி உடன் கட்டையேறாமல் கைம்பெண் வாழ்வைத் தேர்ந்தெடுத்தால் அவர்கள் மேற்கொள்ள வேண்டிய கைம்மை நோன்பு கொடூரமானது.
ஒல்லையூர் தந்த பூதப்பாண்டியனின் மனைவியான பெருங்கோப் பெண்டு இயற்றிய சங்கப்பாடல் இந்தக் கைம்மை நோன்பின் விதிமுறைகளை மேலோட்டமாகச் சொல்கிறது.
வெள்ளரி விதை போன்ற நெய்யற்ற நீர்ச்சோறு, எள்ளுத் துவையல், புளி விட்டு சமைத்த கீரை ஆகியவற்றை மட்டும் உண்டு, பரல் கற்கள் குத்தும் படுக்கையில் படுத்து உறங்கி விதவையாக வாழும் வாழ்கையை விட, என் கணவனின் சிதை நெருப்பில் பாய்வது தாமரைக் குளத்தில் பாய்வது போன்றது என்கிறார் அப்பெண்மணி.
ஆக இப்படி இரு முனைகளில் இருந்தும் உயர்குடிப் பெண்களின் மீது திணிக்கப்பட்ட உடன் கட்டையேறுதல் எனும் கொடும் பழக்கத்தைப் பற்றியும் இந்த நாவல் பேசுகிறது.
அதே நேரம் ஜாதி, பொருளாதார படிநிலைகளில் கீழ்ப்படிகளில் இருக்கும் பெண்களிடம் உனக்கு அத்தகைய நோக்கங்கள் தேவையில்லை, யாருக்கு அடிமையாக இருக்கிறாயோ அவர்களுக்கு விஸ்வாசத்தோடு இருப்பது மட்டுமே உனக்குப் போதும் என்றும் இதே சமூகம் சொல்வதில் உள்ள முரணை எடுத்துக்காட்டவும் இந்நாவலில் முயன்றிருக்கிறேன்.
மானுடம் வெல்லும் நாவலின் முன்னுரையில் சக்ரவர்த்தி பீட்டர் மற்றும் சிக்கவீர ராஜேந்திரன் ஆகிய இரு அந்நிய மொழி நாவல்களும்தான் தனக்கு வழிகாட்டிகள் என்று சொல்லுவார் பிரபஞ்சன். எனக்கு அவரது மானுடம் வெல்லும், வானம் வசப்படும் ஆகிய இரண்டு நூல்களையும் சேர்த்து நான்கு வழிகாட்டிகள் என்றே சொல்வேன்.
ஆய்வு நூல்களின் துணைகொண்டு, கதைக்களத்தை முடிவு செய்துவிட்டு, தஞ்சைக்குப் பயணம் மேற்கொண்டேன். வளர்ந்து படித்த பகுதிதான் என்றாலும் இம்முறை பயணத்தில் எனது பார்வையே வேறு விதமாக இருந்தது. தஞ்சாவூர், திருவிடைமருதூர், திருவையாறு என்று சென்று திரும்பிய ஊர்களில் எல்லாம் நான் பழமையைத் தேடினேன். புராதன கட்டிடங்களில் சில மட்டுமே தொல்லியல் துறைகளில் கட்டுப்பாட்டில் உள்ளன. ஆனால் அவையும் புதுப்பிக்கப்பட்டு, பழைய அடையாளங்களை தொலைத்துவிட்டு நிற்கின்றன. சில கட்டிடங்கள் தனியார் சொத்துக்களாகி இருந்தன. அங்கெல்லாம் உள்ளே செல்ல அனுமதி கேட்கவே நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியதிருந்தது. சில இடங்களில் உள்ளே செல்லவே அனுமதிக்கப்படவில்லை. ஏமாற்றமுடனே திரும்பினேன்.
இந்த நாவலை எழுத துணை நின்ற நூல்களின் பட்டியல் பெரிது என்றாலும் குறிப்பாக கா.ம.வேங்கடராமையாவின் மராட்டிய வரலாறு குறித்த நூல்கள் முக்கியமானவை. அந்த நூல்களைத் தேடும் பயணத்தில் வழிகாட்டி உதவிய தஞ்சை சரஸ்வதி மகால் நூலகத்தின் தமிழறிஞர் திரு. மணி. மாறனுக்கு சிறப்பு நன்றிகளைச் சொல்லவேண்டும். நூலில் மட்டுமே படித்திருந்த மோடி ஆவணங்களை நேரடியாகக் காட்டி, உதவினார். பண்டைய எழுத்து ஆவணங்கள் எப்படி எல்லாம் பாதுகாக்கப்படுகின்றன என்பதை விவரித்துக் கூறினார், அதுபோலவே, தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகப் பேராசிரியர் திரு. இரா.காமராசு, தமிழ்ப் பல்கலைக்கழக தலைமை நூலகர் திரு. சி.வேல்முருகன் ஆகியோருக்கும் எனது மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
நாவலின் முதல் வடிவைப் படித்து அவசியமான திருத்தங்கள் சொன்ன அண்ணன்கள் திரு. யூமாவாசுகிக்கும் திரு. கரு.ஆறுமுகத்தமிழன் அவர்களுக்கும் அன்பும் நன்றியும். உண்மையில் இவ்விருவரின் தலையசைப்பிற்கு பின்னரே நூலை அச்சுக்குத் தரும் தைரியம் எனக்கு வந்தது எனலாம்.
நூலின் அட்டையையும் எழுத்துருவையும் சிறப்புற வடிவமைத்துக்கொடுத்த திரு. ஆர்.கார்த்திகேயன் அவர்களுக்கும், பின்னட்டைக்கான புகைப்படம் எடுத்துக்கொடுத்த தம்பி திரு. வின்சன்ட்பால் அவர்களுக்கும் மிகுந்த நன்றி.
கிட்டத்தட்ட எட்டு மாதங்களாக இந்த நாவலுக்கான உழைப்பில் என்னை மூழ்க அனுமதித்து, அதன் மூலம் ஏற்படும் சில்லரை அசௌகரியங்களைப் பொருட்படுத்தாது என்னை ஊக்குவித்த என் மகன் கனிவமுதனுக்கும், துணைவர் பாலாவுக்கும் என் அன்பும், நன்றியும்.
என்னை வளர்த்தெடுத்த தாயும் தந்தையுமான திருமதி. சுலோசனா அம்மாள் & திரு. முத்துசாமி ஆகியோரின் திருவடிகளுக்கு இந்த நூலை சமர்ப்பிக்கிறேன்.
- லக்ஷ்மி பாலகிருஷ்ணன்
