நேற்று ‘ஆனந்தவல்லி’யின் நூல்வெளியீடு மிகச்சிறப்பாக நடந்தேறியது. நிகழ்வில் பேசிய ஒவ்வொருவருமே மிகச்சிறப்பாக உரையாற்றினார்கள். அனைவருமே நாவலை முழுமையாகப் படித்துவிட்டுப்பேசினார்கள் என்பது இன்னும் மகிழ்ச்சியானதாக இருந்தது. நாவலின் உள்ளே விரிவாகப் பேசவேண்டிய முக்கியப் புள்ளிகளைத் தொட்டெடுத்துப் பேசினார்கள்.
இளங்கோ கிருஷ்ணன், அ. மார்க்ஸ் ஆகிய இருவரின் பேச்சுக்கள் நாவலின் காலகட்டம், அதன் முன்னும் பின்னுமிருந்த வரலாற்று, அரசியல் சூழல்களைக் குறித்த மேலதிகத் தகவல்கள் செறிந்ததாக அமைந்திருந்தது.
தமயந்தியின் பேச்சில் அவர் பிரபஞ்சனின் மானுடம் வெல்லும், வானம் வசப்படும் நாவல்களைக் குறிப்பிட்டு இது அவ்வகைமையின் கீழ் வரக் கூடிய படைப்பு என்று சொன்னதே எனக்கான மிகப் பெரிய அங்கீகாரமாக உணர்ந்தேன்.
ஒரே நாளில் தேர்வுக்குத் தயாராவது போல நாவலைப் படித்துவிட்டு வந்து அலசி ஆராய்ந்த கவினின் பேச்சில் பெண்ணியம் சார்ந்த விமர்சனங்களும் பொதிந்திருந்தது.
அண்ணன் ஆறுமுகத் தமிழனின் பேச்சோ நாவலின் சாராம்சப் புள்ளி தொடங்கி அதன் முதல் வடிவுக்கு நான் வைத்திருந்த பெயரான ‘தெய்வமும் உண்டு கொல்’ எனும் ஆவேச விளியின் விவரணை வழி போய், கண்ணகிக்கும் ஆனந்தவல்லிக்குமான வேறுபாட்டுகளைப் பட்டியலிட்டு, நாவலின் களத்தில் இன்னமும் ஆழ உழுதிருக்க வேண்டிய கண்ணிகளையும் சுட்டிக் காட்டுவதாக இருந்தது.
உண்மையில் இவர்கள் அனைவரின் உரைகளையும் கேட்ட பின்னர் நானே மீண்டுமொரு முறை நாவலை வாசித்தாகவேண்டும் – என் ஆழ்மனதிலிருந்து பிரதிக்குள் ஊடுருவியிருக்கக்கூடிய பல்வேறு இழைகளை இவ்வைவரின் பேச்சுக்கள் வெளிச்சமிட்டுக் காட்டின என்றால் மிகையாகாது. அனைவருக்கும் என் நன்றியும் அன்பும்.
நாவலை சிறப்புற வடிவமைத்து, வெளியிட்டுள்ள பாரதி புத்தகாலய தோழர்களுக்கு என் நன்றி. பின்னட்டைக்கான புகைப்படம் எடுத்துத் தந்த தம்பி வின்செண்ட் பால், முன்னட்டையை வடிவமைத்துத் தந்த கார்த்திக் ஆகியோருக்கும் என் நன்றி.
====
ஒரு வேலை நாளின் மாலைப் பொழுதில், உழைத்துக் களைத்த அலுப்பையும் பொருட்படுத்தாமல் நிகழ்விற்கு நட்பின் பொருட்டு வந்திருந்து சிறப்பித்த தோழிகள் கவிஞர் பரமு, தீபா, மஞ்சுளா, பிரியா, கலைச்செல்வி, கிருஷ்ணார்ஜுன், ஸ்ரீதேவி செல்வராஜன், விழாவிற்கென தருமபுரியில் இருந்து வந்திருந்த என் பிரியத்துக்குரிய ஹேமா டீச்சர், கார்த்திகா, பண்புடன் குடும்ப உறுப்பினர்கள் சாபத்தா, ஆஸாத்ஜி, நந்தா, உதயன், அருண், அரும்பு செயலியின் வடிவமைப்பாளர் தம்பி தமிழ்ச்செல்வன், பாரதி தம்பி, சுதர்சன் மகாலிங்கம், சிறில் அலெக்ஸ், அண்ணன்கள் ரமேஷ் வைத்யா, கே.என்.சிவராமன், துரையரசு, மகேஸ்வரி, பட்டம் ஆர். கார்த்திகேயன், ஆத்திக்குமார், சுபாஷ், தம்பி மனோ, ஒளி ஓவியர் தம்பி வின்சன்ட் பால், பாரதி புத்தகாலயத் தோழர்கள் நாகராஜன், பி.கே.ராஜன், ரவி, பாலாஜி, காளத்தி, சிறுவர் எழுத்தாளர் நீதிமணி ஆகிய அனைவருக்கும் என் அன்பும், நெஞ்சார்ந்த நன்றியும். அரங்கின் உள்ளும் வெளியும் தன் பிஞ்சுப் பாதங்களால் ஓடித் திரிந்து, விழாவுக்கே தனி சோபையளித்த எங்கள் செல்லக் குட்டி வெண்பாவுக்கு ஸ்பெஷல் முத்தா.
பி.கு: நினைவுப் பிழையால் நண்பர்கள் யார் பெயரேனும் விடுபட்டிருக்கலாம். அவர்கள் மன்னிக்கவும்.
#ஆனந்தவல்லி_நாவல்
#ஆனந்தவல்லி
