‘எழுதாப் பயணம்’ என்ற புத்தகத்தின் மூலம் எழுத்துலகிற்குள் நுழைந்த லஷ்மி பாலகிருஷ்ணன், ‘ஆனந்தவல்லி’ என்ற தனது முதல் நாவலின் வழியாக புனைவு இலக்கியத்திற்குள் களமிறங்கியிருக்கிறார்.பாரதி புத்தகாலயத்தின் வெளியீடாக வந்துள்ள நாவலின் கதைக்களம் பற்றி அவரிடம் கேட்டோம்.
“தஞ்சையை ஆண்ட மராட்டிய மன்னர்களுடைய ஆட்சிக்காலத்தின் இறுதிப் பகுதியில் நடக்கக்கூடிய கதைதான் ஆனந்தவல்லி.பிரிட்டிஷாரின் ஆதிக்கமும், சுதேசி மன்னர்களும் ஒத்திசைந்திருந்த பதினெட்டாம் நூற்றாண்டின் கடைசி காலகட்டத்தை பிரதிபலிக்கக்கூடிய நாவல் இது.வெளிநாடுகளுக்கு அடிமைகள் விற்கப்பட்டது தான் இதுவரை அதிகமாகப் பேசப்பட்டிருக்கிறது. ஆனால் உள்ளூரிலேயே அடிமை முறை இருந்திருக்கிறது. அதில் பெண்களையும் விற்றிருக்கின்றனர். அப்படி விற்கப்பட்ட பெண் ஒருவரை மையப்படுத்தியே முழு நாவலையும் எழுதியிருக்கிறேன்.
ஆனந்தவல்லி என்ற பெண்ணுக்கு சிறிய வயதிலேயே திருமணம் நடக்கிறது. அது ஒரு பால்ய விவாகம். திருமணத்திற்கு பிறகு கணவன் வேலைத் தேடி வெளியூருக்கு சென்று விட, ஆனந்தவல்லிக்கு திருமணம் ஆனதை மறைத்து அரண்மனையில் விற்றுவிடுகிறார் அவருடைய தந்தை. ஊருக்குத் திரும்பி வரும் கணவன், மனைவி ஆனந்தவல்லியை மீட்பதற்காக தொடர்ந்து முயற்சி செய்கிறார். பதினெட்டாம் நூற்றாண்டில் நடந்த உண்மை சம்பவம் இது. இதை வைத்துத்தான் ஆனந்தவல்லியை எழுதினேன்.தமிழகத்தில் கடைசியாக நடந்த உடன்கட்டை ஏறுதல் நிகழ்வையும் எழுதியிருக்கிறேன்.
உயர்குடி பெண்களுக்கும், அடிமையாக இருந்த பெண்களுக்கும் என்ன பிரச்சனை இருந்தது என்பதை நாவல் பேசுகிறது. உண்மை வரலாற்றைப் பேசக் கூடிய நாவல் என்பதால், வழக்கமான வரலாற்றுப் புனைவில் இருப்பது போன்ற பரபரப்பு, விறுவிறுப்பு எல்லாம் அதிகம் இருக்காது.பிரபஞ்சனின் ‘மானுடம் வெல்லும்’, ‘வானம் வசப்படும்’ போன்றவற்றை முன்மாதிரியாக வைத்து எழுதப்பட்ட நாவல் இது.இந்த நாவல் வாசகர்களுக்கு நல்லதொரு வரலாற்று உணர்வைக் கொடுக்கும் என்று நினைக்கிறேன்.” என்றார் லஷ்மி பாலகிருஷ்ணன்.
நாவல்: ஆனந்தவல்லி
ஆசிரியர்: லஷ்மி பாலகிருஷ்ணன்
பதிப்பகம்: பாரதி புத்தகாலயம்
விலை: ரூ.230
+++++
நூலினை ஆன் லைனில் வாங்க: https://thamizhbooks.com/product/anandhavalli/
++++++++++
கட்டுரைச்சுட்டி: https://andhimazhai.com/…/-new-novel-series-12…
