ஒருவரோடு நம்மை இணக்கமாக உணர ஏதேனும் ஒரு பொதுப் புள்ளி தேவையாகிறது. பள்ளி அளவிலான போட்டிகளில் நம் வகுப்புத் தோழர்களை ஆதரிக்கும் மனது, மாவட்ட அளவு போட்டிகளுக்குப் போகும்போது நம்மூர் என்கிற சரடுக்கே மயங்கிவிடும். தேசியப் போட்டிகளில் மொத்த தமிழ்நாட்டு வீரர்களும் நம்மாளாகி விட, சர்வதேசப் போட்டிகளிலோ வடக்கெல்லை குக்கிராமத்து வீரருக்கு கூட நாம் துள்ளிக் குதிப்போம். இதுதான் மனித இயல்பு.
எழுத்தாளர் ஜெயமோகனின் வலைத்தள கட்டுரைகளை, தொடக்க காலகட்டத்திலிருந்து தொடர்ந்து வருகிறேன். அவரது அபுனைவு கட்டுரைகளில் பத்தில் எட்டு கட்டுரைகளிலேனும் ஏதேனும் ஒரு இடத்தில் அவரது மனைவி அருண்மொழி நங்கை பற்றிய குறிப்புகள் இருக்கும். வாழ்கைத் துணைவி எனும் வகையில் மட்டுமல்ல மிகச் சிறந்த வாசகி எனும் முறையிலும் அவரது கருத்துக்களை மேற்கோளிட்டுக் கொண்டே இருப்பார் ஜெயமோகன்.
அப்படியாக அறிமுகமான அருண்மொழி அக்கா, சென்ற வருடம் தனக்கென ஒரு வலைப்பதிவை தொடங்கியிருப்பது தெரிந்ததும் ஆர்வமாகப் பின் தொடர்ந்தேன். அவரும் தஞ்சை மாவட்டத்தில் பிறந்து வளர்ந்தவர் என்கிற காரணம் ஒரு கூடுதல் ஒட்டுதலைத் தந்தது. ஆற்றுக் குளியல், மரபிசை ஆர்வம், ஆசிரியப் பெற்றோரின் மகளாக பள்ளியில் இருக்கும் சௌகரிய அசௌகரியங்கள், அம்மாவுக்குப் பரிந்து அப்பாவோடு கொள்ளும் முரண்கள் என பலப் பல கண்ணிகளில் அவரது அனுபவங்கள் என் வாழ்வோடும் பொருந்திப் போனதால் அவரது எழுத்துக்களை மிகவும் அணுக்கமாகப் பின் தொடர முடிந்தது.
அவரது பதிவுகள் பனி உருகுவதில்லை எனும் தலைப்பில் புத்தகமாக இருப்பதாக அறிந்ததும் கட்டாயம் வெளியீட்டு விழாவுக்குச் சென்றுவிட வேண்டுமென முடிவு செய்தேன். அதற்குள்ளாக எனது நாவலும் தயாராகிவிடவே அதையும் அவருக்குத் தந்துவிட எண்ணி, மடலில் தொடர்பு கொண்டேன். மடலனுப்பிய சில மணி நேரங்களுக்குள் பதில் வந்தது – வாங்க, சந்திப்போம் என்று.
கொரோனா தடைகளினால் விழா தள்ளிப் போவது தெரிந்ததும் பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்றிருந்தேன். ஆனால் முன்பே திட்டமிட்டபடி சென்னை வந்திருந்த அக்காவோ சந்திக்கலாம் என்றுவிட்டார். ஆஹாவென மகிழ்ந்து, குடும்பத்தோடு கிளம்பி அவர்கள் தங்கியிருந்த விருந்தினர் இல்லம் சென்று சந்தித்தோம்.
ஜெயமோகன் வேலையாக வெளியே சென்றுவிட்டதால் அவரை சந்திக்க இயலாது போனது. வெளிக்கிளம்பிக் கொண்டிருந்த சைதன்யாவை அறிமுகப்படுத்தி வைத்தார். வெளியே சென்றுவிட்ட அஜிதனை ஜன்னல் வழி காட்டினார். ஒரு தாயாக அவரது பெருமிதம் நிரம்பிய புன்னகை மிக இனிமையான ஒன்று.
அதன்பின் சில மணி நேரங்கள் பேச்சில் கரைந்தது. அவர் அஜ்மீர் சென்று வந்த ஆன்மிக உணர்வுகள் தொடங்கி, தஞ்சை மண்ணின் நினைவுகள், சஞ்சய்யின் தமிழிசை என கலவையான விஷயங்களைத் தொட்டபடி நீண்டது பேச்சு. ஏற்கனவே எழுதாப் பயணத்தைப் படித்திருப்பதாகச் சொன்னார். இந்த நாவலுக்கான தேடலைப் பற்றி விசாரித்தார். எங்கள் பேச்சின் நடுவில் எதிர்பாராதபடி கனி இரண்டு பாடல்களை பாடி எங்களை மகிழ்வித்தான். குறிப்பாக தேவனின் கோவிலில் பாடலை அவன் பாடியபோது ’இவன் என்ன எங்க தலைமுறைப் பாட்டெல்லாம் பாடறான்’ என்று அக்கா வியந்தார். அவனொரு இளையராஜா வெறியன் என்பதைச் சொல்லிவிட்டு, மேலும் 40களின் பாட்டெல்லாம் கூட பாடுவான் என்றேன். சிரிப்பும், இனிமையுமாக நேரம் நகர்ந்தது.
என் நாவலைக் கொடுத்து, புகைப்படங்கள் எடுத்துக் கொண்டு கிளம்பினோம்.


