ஏகோஜி தஞ்சையை கி.பி.1676ல் கைப்பற்றியது முதல் 1855ல் இரண்டாம் சிவாஜியின் ஆட்சி முடிவுற்றது வரையிலான இரு நூற்றாண்டு கால தஞ்சை மராட்டிய வரலாற்றின் பதிவேடுகள் மோடி ஆவணங்கள் என்றழைக்கப் படுகின்றன. இக்கையெழுத்துச் சுவடிகள் தஞ்சை சரஸ்வதி மகால் நூலகத்தில் பல மூட்டைகளாக கட்டி வைக்கப்பட்டுள்ளன. இன்றைய மராட்டி மொழியை அறிந்தவர்களாலும் கூட இச்சுவடிகளை படித்துவிட முடியாத அளவுக்கு பழைய நடையிலும் வேறுபட்ட லிபியிலும் அமைந்தவை இச்சுவடிகள்.
இச்சுவடிகளில் சிலவற்றை சரஸ்வதி மகால் நூலகத்தினர் மோடி மொழி வல்லுனர்களைக் கொண்டு மொழிபெயர்த்தனர். பின்னர் தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகமும் இந்த பெரும் பணியில் பங்கெடுத்துக் கொண்டது.இந்த ஆவணங்களின் தொகுப்பை குறிப்புரையோடு மூன்று தொகுதிகளாக பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. அதற்கான குறிப்புரைகளை அளித்தவர் அரிய கையெழுத்துச் சுவடித் துறையின் சிறப்பு நிலைப் பேராசிரியராக இருந்த கா.ம.வேங்கடராமையா என்பவர். அவரே, இந்த ஆணங்களை அடிப்படையாகக் கொண்டு, தஞ்சை மராட்டிய அரச வம்ச வரலாற்றையும், அக்காலத்து சமூக அரசியல் நிலையையும் பற்றியும் இரண்டு ஆய்வு நூல்களையும் எழுதி வெளியிட்டுள்ளார். மோடி ஆவணத் தொகுப்பை எப்படி புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்கான வழிகாட்டியாகவே இவ்விரு ஆய்வு நூல்களையும் கொள்ளலாம்.
ஆனந்தவல்லியை எழுதிய காலகட்டம் மிகுந்த உழைப்பைக் கோரியது. சமையல் கற்றுக் கொள்ள ஆரம்பிக்கையில் அம்மா எழுதித் தந்த குறிப்புகளையோ அல்லது மீனாட்சி அம்மாளின் புத்தகத்தையோ எப்படி அடிக்கடி புரட்டுவோமோ அப்படித்தான் இந்த மோடி ஆவணத் தொகுப்புகளை நினைத்து நினைத்து புரட்டிக் கொண்டிருந்தேன். நாவலில் புதியதாக ஒரு கதாபாத்திரத்தை நுழைப்பதென்றால் கூட இந்த நூலைத் திறப்பேன். என் நாவலின் அந்த பாத்திரத்தை ஒத்த மனிதர்களின் பெயர் ஏதேனும் ஆவணத்தில் கிடைக்குமா என துழாவுவேன். அரண்மனையில் ரஜா(விடுப்பு) கேட்டு விண்ணப்பித்த ஊழியரோ அல்லது நியாயசபையில் புகாராளித்த மனுதாரரோ மாட்டினால் உடனே எனது பாத்திரத்திற்கு நாமகரணம் முடிந்துவிடும்.
ஏனென்றால் இரு நூற்றாண்டுகளுக்கு முந்தைய மனிதர்களுக்கு நம் மனம் போன போக்கிலெல்லாம் பெயர் வைத்துவிட முடியாது. பழங்காலத்து மனிதர்களின் பெயரிலேயே அவர்களது ஜாதகமிருக்கும். தாத்தன் பெயர், பாட்டி பெயர்களைத் தாண்டி புதிதாகப் பெயர் தேடுவதெல்லாம் அன்று கிடையாது. நியூமராலஜியோ, பெயரில் தொனித்தாக வேண்டிய நளினமோ அன்றைய பெற்றோர்களுக்குத் தெரியாது. எனவே மீண்டும் மீண்டும் ஜாதிவாரியாக, பகுதி வாரியாக சில பத்து பெயர்கள்தான் புழங்கும்.
அரச குடும்பத்தவர் தவிர நாவலில் வரும் அடிப்படையான கதாபாத்திரங்களான ஆனந்தவல்லி, சபாபதி, சோலையாப் பிள்ளை, பெரிய நாயக் கொத்தன் ஆகிய நால்வர் மட்டுமே சரித்திரத்தில் இருந்த மனிதர்கள். மற்ற அனைவரும் கற்பனை பாத்திரங்கள்தான். ஆனால் அவர்கள் அனைவரையும் இருந்திருக்க சாத்தியமுள்ளவர்களாகக் காட்ட மிகவும் பிரயத்தனப்பட்டிருக்கிறேன். அவர்களுக்கான பெயர் தேடல் துவங்கி அவர்களின் மொழி வரை அனைத்தையும் கூடுமானவரை நம்பகத்தன்மையோடு கட்டமைக்கத் தேவையான சொல்வளத்தை வாரி வழங்கியது அந்த மோடி ஆவணக் குறிப்புகள்தான்.
பழங்காலத்தில் இந்த மண்ணில் நடந்த சிறந்த, பெரிய நற்காரியங்களுக்கு மட்டுமே இங்கே கல்வெட்டோ செப்பேடோ பதிவாகக் கிடைக்கும். கோவில் திருப்பணிகள், நிவந்தங்கள், போர் வெற்றிகள் போன்ற பெரிய விஷயங்கள் மட்டுமே ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. ஏனெனில் கல்லில் செதுக்கவோ செம்பில் பொறிக்கவோ அதிக உழைப்பும், பணமும் செலவிட வேண்டும். ஆனால் காகிதங்கள் வந்த பின்னர் ஆவணப்படுத்துதல் என்பது ஓரளவு இலகுவானது. அனந்தரங்கப்பிள்ளை போன்ற வசதி வாய்ந்த தனிநபர்களும், அரசுகளும் தினசரி நடவடிக்கைகள், வரவு செலவு கணக்குகள், கடிதப் போக்குவரத்துகள் போன்றவற்றை பதிவு செய்ய ஆரம்பித்ததாலேயே அந்த காலகட்டத்து சமூகத்தின் இருண்ட பகுதிகளும் வரலாறாகப் பதிவாகும் போக்குத் தொடங்கியது.
சரஸ்வதி மகால் நூலகத்தின் மூட்டைகளில் அடைபட்டுக் கிடக்கும் மொழிபெயர்க்கப்படாத மோடி ஆவணங்கள், அனந்தரங்கப் பிள்ளையின் நாட்குறிப்புகள், கர்னல் மெக்கின்சியின் தொகுப்புகள் போன்ற காலனி ஆதிக்க காலகட்டத்து பதிவேடுகளில் இன்னமும் எத்தனையோ ஆனந்தவல்லிகளும், சபாபதிகளும் காத்திருக்கிறார்கள்.
ஆனந்தவல்லியை ஆன்லைனில் வாங்க – https://thamizhbooks.com/product/anandhavalli/