வரலாற்றில் ஆவணப்படுத்தப்பட்ட ஒரு நிகழ்வை ஒட்டிய புனைவு.
வரலாறு என்றால் நம் பள்ளி கல்லூரி பட புத்தகங்களிலோ அல்லது அரசாங்க தேர்வுகளுக்கு படிக்கும் பாடத்திட்டங்களை ஓட்டிவரும் தரவுகளின் வழியோ நன்கு அறியப்பட்ட நிகழ்வுகளோ, போர்களோ, படைகளோ, நாயகர்களோ இல்லை.
சோழர்கள் கொடி கட்டி ஆண்ட தஞ்சைத் தரணியில் சோழர்களுக்குப் பின் வந்த மராத்தியர்களின் ஆட்சி. பெண்கள் ஜாதி மற்றும் பொருளாதாரத்தின் எந்த படிநிலைகளில் இருப்பவர்களானாலும் சரி, எந்த வகையில் அடிமைப்பட்டு கிடந்தார்கள் என்பதை காட்டும் நாவல்.
பொட்டு கட்டிவிடப்பட்டு தேவதாசிகளாக, தாசிகளாக, நடனப்பெண்டிராக வாழ்ந்து கோலோச்சிய அல்லது வீழ்ந்தவர்கள் கதைகளை படித்ததுண்டு. அவ்வாறாக இல்லாமல் அவர்களுக்கு அடுத்த படிநிலையில், மன்னர் மற்றும் மகாராணியர்களின் அனைத்து தேவைகளையும் தீர்த்து வைக்கும் சேவைகளை செய்யும் பெண்களின் கதை ஆனந்தவல்லியில் வாழ்க்கையின் ஊடக நாவலில் விரிகின்றது.
பெற்றவர்களே பணத்தேவைக்காக தம் மகளை தாசியாக, பணிப்பெண்ணாக விற்ற, அதிலும் மணமுடித்து தந்த மகளை தந்தையே விற்ற அதிர்ச்சியூட்டும் உண்மை ஆனந்தவல்லியினுடையது.
’12 years a slave’ , ‘ஆஸ்திரேலியா’ போன்ற திரைப்படங்களை பார்த்து குறிப்பிட்ட இனத்தினர் மட்டுமே அடிமைச்சங்கிலிகளால் பிணைக்க பட்டிருந்தனர் என்ற என் குறுகிய அறிவிற்கு விழுந்த பெரிய அடி.
தமிழ் நாட்டிலும் குறிப்பாக பெண்கள் அடிமைகளாக விற்கப்பட்டிருக்கிறார்கள் என்பதை அறிய நேரும் பொழுது முதுகுத்தண்டில் சிலிர்க்கிறது. இதற்கு மரத்தியர்களையோ, பஞ்சத்தையோ காரணம் கூறி சமாதானம் செய்துவிட முடியாது. அடிமைகளாய் இருக்கிறோம் என்றா உணர்வில்லாமை, பிள்ளைகளின் அருமை தெரியாமை, அவர்களின் உணர்வுகளை புரிந்து கொள்ளாத தன்மை, பெண் தானே என்ற அலட்சிய போக்கு இப்படியாக பல காரணங்கள்.
பெண் அடிமையாக விற்கப்பட்ட சம்பவத்தை அடிப்படியாக கொண்டு தனது முதல் நாவலை கட்டமைக்க நிறையவே தைரியம் வேண்டும். நாடகத்தன்மையோ மிகையான உணர்வுகளோ இல்லாமல், அரசாங்க இயந்திரம் அதன் இயக்கத்திற்கு தடையாக எது வந்தாலும் நசுக்கிவிட்டு முன்னேறி செல்லும் என்பதை தெளிவாகக் காட்டிய லக்ஷ்மி பாலகிருஷ்ணனுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்.
சபாபதியின் பற்றி நினைக்கையில் மனதை ஏதோ ஒன்று பிசைகிறது.
*******************
நன்றி அகிலா