
கும்பகோணம் கல்லூரியில் உ.வே.சா பணியாற்றிக் கொண்டிருந்த நேரம். உ.வே.சா பழந்தமிழ் நூல்களை வெளியிடுவதையும், அதில் அவருக்கு வருவாய் ஏதுமில்லை, கைச்செலவே அதிமாகிறது என்றும் உணர்ந்திருந்தார் அக்கல்லூரி முதல்வரான ராவ்பகதூர் நாகோஜிராவ்.. அதனால் எப்படியாவது அவருக்கு நல்ல முறையில் வருவாயை ஏற்படுத்தித் தரவேண்டுமென்ற எண்ணம் கொண்டு, ஒரு பணியை ஏற்பாடு செய்கிறார். அதைப் பற்றி உ.வே.சாவிடம் தெரிவித்தபோது அவர் சொன்ன பதில் இது.
“நான் தங்களுடைய அன்பைப் பாராட்டுகிறேன். எனக்குள்ள துன்பங்களை எல்லாம் தாங்கள் நன்றாகத் தெரிந்து கொண்டிருக்கிறீர்கள். அதுவே எனக்குப் போதுமானது. தாங்கள் மாத்திரம் அல்ல. வேறு சில அன்பர்களும் பாடப் புத்தகங்களை நான் எழுத வேண்டுமென்று சொல்லி வருகிறார்கள். எனக்குப் பணம் முக்கியம் அல்ல. என்னுடைய நேரம் முழுவதும் இப்போது கல்லூரியில் பாடம் சொல்வதிலும், தமிழ் நூல்களை ஆராய்வதிலும் கழிகிறது. தமிழ் நூல் ஆராய்ச்சிக்கு எவ்வளவு நேரம் செலவழித்தாலும் போதாது. நான் வேறு துறையில் இறங்கினால் நூல் ஆராய்ச்சிக்கு வேண்டிய பொழுது கிடைக்காது. அது மாத்திரம் அல்ல, அதிக அளவுக்கு பணம் வந்து, செல்வ ஆசையும் பிறந்துவிட்டால், பழைய நூல்களை எல்லாம் அச்சிட வேண்டுமென்ற உயர்ந்த கருத்தை நான் மறந்து விடும்படி நேரிடலாம். நானும் மனிதன்தானே? தயை செய்து தாங்கள் இதை என்னை ஏற்கும்படி வற்புறுத்த வேண்டாம். என்னை என்னுடைய பழைய சுவடியோடு இருக்கும்படி விட்டுவிடுங்கள். தாங்கள் சொல்வதை நான் அவமதிப்பதாக நினைக்கக் கூடாது. பழைய நூல்களின் ஆராய்ச்சிக்கு எத்தனை நேரம் இருந்தாலும் போதாது. இந்த நாட்டில் தோன்றிய பழைய நூல்கள் எத்தனையோ இன்னும் கிடைக்கவில்லை. கிடைத்த ஒரு நூலை ஆராய்கிறபோது அதன் உரையில் குறிப்பிடப்பெற்றிருக்கும் வேறு பல நூல்கள் கண்ணால் பார்ப்பதற்குக்கூட கிடைக்கவில்லையே என்ற துக்கம் என்னை வாட்டுகிறது. கிடைப்பனவற்றை நல்ல முறையில் அச்சிட்டுவிட வேண்டும் என்று இருக்கிறேன். இந்தத் தொண்டுக்குத் தடை வராமல் இருக்கத் தாங்களும் என்னை ஆசீர்வாதம் செய்யுங்கள். இதைவிடப் பெரிய காரியங்கள் உலகத்தில் இருக்கலாம். ஆனால் இதுதான் எல்லாவற்றையும்விடச் சிறந்த பணியாக எனக்குத் தோன்றுகிறது.”
மேற்கண்ட செய்தி கி.வா.ஜகந்நாதன் எழுதிய ‘என் ஆசிரியப் பிரான்’ எனும் நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
’தவம் போல உழைப்பது’ என்ற சொற்றொடர் இன்று ஒரு தேய்வழக்காகி விட்டது. ஆனால் உண்மையில் வேறெந்த பற்றுக்கும் இடம் கொடுக்காது, தன் ஆழுள்ளம் வேரூன்றத் தகுந்த பணியெதுவெனத் தேர்ந்து அதில் மட்டுமே ஈடுபட்டு, தன்னிறைவு பெற்ற தமிழ் தாத்தாவைப் போன்ற சாதனையாளர்கள் மட்டுமே அப்பதத்திற்கு பொருத்தமானவர்கள்.
உ.வே.சாவின் பிறந்தநாள் இன்று. அவரது தன்னலமற்ற சேவையை என்றும் நினைவில்கொள்வோம்.
.