உடல் வடித்தான் நாவலின் களம் தமிழுக்குப் புதிது. மனித உடல் நலத்தின் அடிப்படையான உடலைப் பேணி வளர்க்கும் சூழல் குறித்து நானறிந்தவகையில் புனைவு ஏதும் படித்ததாக நினைவில் வரவில்லை. இந்த நாவலில் கதையினூடாக மட்டுமல்லாது, ஒவ்வொரு அத்தியாயத்தின் தலைப்பிலும் உடற்பயிற்சிக் களங்களைப் பற்றிய நுண் தகவல்களை சிறு குறிப்புகளாகக் கொடுத்துச் செல்கிறார் ஆசாத். இது வாசகர்களுக்கு அந்த உலகைப் புரிந்து கொள்ள மேலும் உதவும்.
நூலாசிரியர், சார்பட்டா பரம்பரையில் அடிப்படை சிலம்பப் பயிற்சி பெற்றவர். உடற் பயிற்சியிலும், குத்துச்சண்டை உள்ளிட்ட தற்காப்புக் கலைகளிலும் ஈடுபாடு கொண்டவர் எனும் விவரங்கள் ஆசாத் பற்றிய குறிப்புகளில் உள்ளன. இந்தப் பின்னணி நாவலின் நம்பகத் தன்மைக்கு மேலும் வலுசேர்க்கிறது.
உடம்பார் அழியின் உயிரார் அழிவர்
திடம்பட மெய்ஞ்ஞானம் சேரவும் மாட்டார்
உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தே
உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே
உடல் என்பது ஒரு கருவி. அதனை எதற்கு வேண்டுமானாலும் பயன்படுத்த முடியும். உடல் அழிந்துவிட்டால், உயிரும் அழிந்துவிடும். பின்னர் மெய்ஞானம் அடைவது எப்படி? எனவே உடல் வளர்க்கும் வழிகளை அறிந்துகொண்டு, உடலை வளர்த்து அதன் மூலம் உயிரையும் வளர்த்தேன் என்கிறார் திருமூலர். அவருக்கு உடல் என்பது மெய்ஞானம் பெறுவதற்கான கருவி.
நாவலின் நாயகனான அப்துல் கரீம் இந்த உடலெனும் கருவியை தனக்கு நல்லதொரு வேலை வாய்ப்பினைப் பெற்றுத் தரக்கூடியதாகப் பார்க்கிறான். பத்தாம் வகுப்பு தேற முடியாத அப்துலுக்கு, அரசு வேலைகளில் விளையாட்டு வீரர்களுக்கு முன்னுரிமை உண்டு என்கிற தகவல் நம்பிக்கையூட்டுகிறது. உடற்பயிற்சிகளின் மூலமாக போட்டிகளில் ஜெயித்து, அந்த அடிப்படையில் ஏதேனுமொரு அரசுப் பணியில் சேர்வதுதான் அவனது லட்சியம்.
அப்துலின் பயணம் இந்தப் புள்ளியில் தொடங்கினாலும் நேர்கோட்டில் செல்லவில்லை. வாழ்கை என்பது எப்போதுமே அப்படித்தானே? எங்கோ ஆரம்பித்து, எதிலெதிலோ முட்டித் திரும்பி எண்ணியே பார்த்திராத இலக்குகளில் சென்று நின்று ஏங்குவதுதான் இங்கு பெரும்பாலானவர்களுக்கு வாய்க்கிறது. ஆனால் வெள்ளத்தின் எதிர்விசையால் எவ்வளவு தூரம் தள்ளிப் போய் கரையேறினாலும் கரை சேர்ந்துவிடுதல் முக்கியம். அப்துலுக்கு அதுவேனும் வாய்க்கிறதா என்பதுதான் கதை.
அப்துல்லின் வாழ்கைப் பயணம் ஆட்டோ ஓட்டியாக இருந்தவனை ஆணழகனாக, பயிற்சியாளராக மாற்றுகிறது. இடையில் சின்னதாக ஒரு ஈர்ப்பு, பிறகு திருமணம், குழந்தை எனவும் ஒரு இழை உண்டு. அவன் வாழ்வின் குறிப்பிட்ட காலகட்டத்தின் குறுக்குவெட்டுத் தோற்றத்தை முன்வைக்கிறது இந்நாவல்.
அப்துல் எப்படிப்பட்டவன் என்பதை நாவலின் முதல் அத்தியாயத்திலேயே, அவனை அறிமுகப்படுத்தும் போதே சொல்லிவிடுகிறார் ஆசாத். அவனது முழுப் பெயர் அப்துல் கரீம். ஆரம்பத்தில் அவனை கரீம் என்றுதான் சுருக்கமாக அழைக்கிறார்கள். ஒரு வளைகுடாவாசிக்கு ஆட்டோ ஓட்டப் போகையில் அப்துல் தனது பெயரைக் கரீம் என்று சொல்ல, அவரோ அதனை ஒரு மார்க்கப் பிரச்சனையாக்குகிறார். கரீம் என்பது இறைவனின் பெயர். அப்துல் கரீம் என்றால் இறைவனின் அடியவன் என்று பொருள் வரும். அப்படியிருக்க நீ கரீம் என்று உன் பெயரை சுருக்கிக் கொண்டால், இறைவனின் திருப் பெயரால் உன்னை அழைத்துக் கொள்வதாகாதா என்று அவர் கேள்வி எழுப்புகிறார். பொதுவாகவே விவாதங்களைத் தவிர்ப்பவனான அப்துல், உடனடியாக அக்கருத்தை ஏற்றுக் கொண்டு தன் பெயரை அப்துல் என்றே சுருக்கிக் கொள்கிறான். அன்று மட்டுமல்ல, அதற்குப் பின்னர் புதியவர்கள் யாருக்கும் அவன் அப்துல்தான். இப்படி அவன் உள்வாங்குவதற்கு அந்த வளைகுடாவாசி மூலம் கூட தனக்கு ஒரு வேலை வாய்ப்பு தகையக் கூடுமே என்ற நப்பாசையும் பின்னணியில் உண்டு.
இந்த ஒரு சம்பவம் மொத்த நாவலின் திசையையும் முன்னறிவித்துவிடுகிறது. வாழ்வின் பொருளாதார ஏணியில் ஏற நினைக்கும் அப்துல், உழைக்கத் தயங்காதவன், ஆனால் பிரச்சனைகளைத் தவிர்ப்பவன். இந்த அடிப்படையான கோட்டுச் சித்திரத்தை மீறாத கதாபாத்திரமாக அவனை செதுக்கியிருக்கிறார் ஆசாத்.
பரமேஸ்வரன், முக்த்தார் பாய், பார்த்திபன், தாஸ், உதயகுமார் என அவனுக்கு வழிகாட்டவும், தடுமாறுகையில் தாங்கிப் பிடிக்கவும், நல்லுள்ளம் கொண்டோர்கள் சூழ்ந்திருக்கிறார்கள். ஓடும்போது காலைத் தட்டி விடுபவர்களும் இல்லாமல் இல்லை. ஆனால் அவர்களிடமிருந்து ஒதுங்கியோ அல்லது அவர்களை அனுசரித்தோ போகும் அப்துலின் நல்லியல்பு அவனை காத்து நிற்கிறது.
அவன் கொஞ்சமேனும் எதிர்ப்பவர் என்றால் அவனது மாமா மட்டும்தான். ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் அவர் சொல்வதற்கு நேர்மாறாகவே அவனது மனம் சிந்திக்கிறது. மற்றபடி அவன் நாணல் போல் வளைந்து கொடுத்தே வாழ்பவனாக இருக்கிறான். உடற்பயிற்சியென்பது ஒருவனின் உடலை மட்டுமல்ல உள்ளத்தையும் வலிமையாக்கக் கூடியது. ஆனால் உள்ளும் புறமும் வலிமை பெற்ற பின்னும் அப்துல் தனது அடிப்படைக் குணத்திலிருந்து அதிகம் விலகிவிடுவதில்லை. அடக்கமான, அமைதியான, ஒதுங்கிப் போகும், சக்திக்கு அதிகமான ஆசைகளை துளிர்க்கும்போதே கிள்ளி எறிந்துவிடுமளவு நிதானமான ஆளுமையாக அப்துல் தன்னை வடித்தெடுத்துக் கொள்கிறான்.
உலக அழகிப் போட்டி என்பது ஆரம்பத்தில் பிகினி உடையைப் பிரபலப்படுத்துவதற்கான ஒரு உத்தியாகத்தான் அறிமுகமானது. ஆணோ பெண்ணோ உடலழகை வெளிப்படுத்துவது என்று வந்துவிட்டால், உடைக் குறைப்பையும் தவிர்க்க முடியாததுதானே? அப்துலுக்கு அதுவும் ஒரு சிக்கலாகிறது. இஸ்லாம் உடலை, குறிப்பாக இடுப்பிலிருந்து முட்டி வரையிலான பாகத்தை மறைக்கச் சொல்லுகிறது என்று அவனது மாமா வாதிடுகிறார். இதற்கு உறுதியான மறுப்பெதுவும் இல்லையென்றாலும் நம்மைவிட மார்க்க விதிமுறைகளை தீவிரமாகப் பின்பற்றும் சவுதி, துபை, எகிப்து போன்ற நாடுகளிலேயே ஆணழகர்கள் இருக்கிறார்கள் என்ற வலுவற்ற வாதத்தை வைத்தே அந்த ஆட்சேபனையைத் தாண்டுகிறான் அப்துல். ஆனால் இதை ஆசாத் விவரித்திருக்கும் பாங்கு அழகாக வந்திருக்கிறது.
குறிப்பாக முக்தார் பாயிடம் அப்துல், முதலில் விஷயத்தைச் சொல்லாமல் முஸ்லீம்களில் பாடி பில்டர் உண்டா எனும் கேள்வியை முன்வைக்கையில் அவர் கொள்ளும் சீற்றம்- எந்தவொரு தொழில் நேசிப்பாளனுக்கும் உரிய அடிப்படை இயல்பு. பின்னர் அப்துல் வேலைவாய்ப்புக்காக பாடி பில்டர் ஆக விரும்புவதைத் தெரிவிக்கும் போதும் முக்தார் பாயும் சரி, தாசும் சரி வேலைவாய்ப்புக்காக என்று மட்டும் உள்ளே நுழையாதே என்று தெளிவாகவே சொல்கிறார்கள். இதில் ஈடுபாட்டோடு உழைக்க வேண்டுமானால் அடிப்படையில் உடற்பயிற்சிகளைக் காதலிக்க வேண்டும். வெற்றியோ தோல்வியோ அதைப் பொருட்படுத்தாமல் பேஷனைத்(Passion) தொடரும் மனநிலையை அப்துல் வளர்த்துக் கொண்டபின்னரே வெற்றி அவனைத் தேடி வருகிறது.
உடலை முறுக்கிக் காட்டுகையில் அரங்கில் ஏற்படும் கரவொலி, கண்ணாடியில் நின்று பார்க்கையில் விரியும் தசைக்கட்டுகள், பட்டுக் கயிறென நெளிந்து செல்லும் நரம்புக் கூட்டம் போன்ற உடற்பயிற்சியின் ஆதாரப் புள்ளிகளில் இன்பம் காண்பவனாக, வெற்றி தோல்வியை இரண்டாவதாகவும், வேலைவாய்ப்பை மூன்றாவதாகவும் மாற்றிக் கொள்ளும் பக்குவத்தை அடைகிறான் அப்துல்.
செல்வியின் மீது அப்துலுக்கு ஏற்படும் பிரமிப்பு மெல்ல மெல்ல ஈர்ப்பாக மாறுமிடங்கள் அழகாக வெளிப்பட்டிருக்கிறது, ஆனால் வாழ்கைச் சூழலின் பேதங்களைக் கணக்கிட்டு அதை கசியவிடாமல் வைத்துக் கொள்ளும் அவனது மென்மைக்கு வாழ்கை ஈடு செய்துவிடுகிறது – தெளிவும், அடக்கமுமான ராபியாவை அவனுக்குரிய வாழ்கைத் துணையாக அளிப்பதன் மூலம்.
ஆசாத்தின் முந்தைய நாவலான மின் தூக்கியையும் நான் படித்திருக்கிறேன். அதுவும் இதே போல் முன்னேறத் துடிக்கும் ஒரு இளைஞனின் கதைதான். மின் தூக்கியின் பாட்ஷாவும் சரி, உடல் வடித்தானின் அப்துலும் சரி, இருவருமே மிக எளிய பின்னணி கொண்ட குடும்பங்களிலிருந்து புறப்பட்டு, தனக்கென ஒரு துறையைத் தேர்ந்தெடுத்து, மெல்ல மெல்ல தங்களைத் தாங்களே வடிவமைத்துக் கொண்டு முன்னகர்பவர்கள்.
பள்ளியில் படிக்கும்போதே ஐஐடி பற்றிய திட்டமிடல்களை கைக்கொண்டு, கல்லூரியில் காலெடுத்து வைக்கையிலேயே., வளாகத் தேர்வுக்கென அங்கு வரும் நிறுவனங்களின் பட்டியலை சீர் தூக்கிப் பார்த்து, வேலைக்கு சேரும் போதே.. விசா கனவுகள் கண்டு, அன்னிய மண்ணில் காலெடுத்து வைக்கும்போதே… கிரீன் கார்டுக்கான திட்டமிடல்களோடு இறங்கும் மேல் நடுத்தரவர்க்கத்து இளைஞர்களோடு போட்டியிட்டு, முட்டி மோதி, அப்பாவிகளாலும் தங்களுக்கென ஒரு ஆசனத்தை உருவாக்கிக் கொள்ள முடியும் என்ற நேர்மறை சிந்தனையை விதைப்பதில் ஆசாத் வெற்றி பெற்றிருக்கிறார்.
புதியதொரு கதைக்களத்தில், ஒரு தெளிவான வாழ்கைப் பார்வை கொண்ட நாவலைப் படிக்க விரும்புபவர்களுக்கு உடல் வடித்தான் நல்லதொரு தேர்வாக இருக்கும்.
++++
நூலின் பெயர் : உடல் வடித்தான்
ஆசிரியர்: அபுல் கலாம் ஆசாத்
பதிப்பகம்: எழுத்துப் பிரசுரம் வெளியீடு
விலை: 270 | பக்கங்கள்: 221
மார்ச் 2022 புத்தகம் பேசுது இதழில் வெளியான கட்டுரை