மருத்துவர் தி.சி. செல்வவிநாயகம், இயக்குனர் பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்துத்துறை, முதன்மை பிறப்பு இறப்பு பதிவாளர் அவர்களின் ஆட்டிச விழிப்புணர்வு செய்தி இது.
எளிய மொழியில் ஆட்டிசத்தின் அறிகுறிகள், அதற்குத் தேவைப்படும் சிகிச்சை முறைகள், அரசு சார்பில் இலவசமாக தெரபிகள் கிடைக்குமிடம் போன்ற முக்கியமான தகவல்களைச் சொல்வதோடு இறுதியில் பெற்றோருக்கான நம்பிக்கையூட்டும் சொற்களோடு முடிக்கிறார்.
இந்த வீடியோவில் ஒரு இடத்தில் ஒவ்வொரு தெரப்பிக்கும் ஆகக் கூடிய கட்டண விவரப் பட்டியல் ஒன்று வருகிறது. அதைப் பார்த்ததும் எனக்கு நெஞ்சு வலி வராத குறையாக இருந்தது. எனக்கு என்றல்ல, எந்த சிறப்புக் குழந்தையின் பெற்றோருக்கும் இப்படித்தான் இருக்கும் என்றே நினைக்கிறேன்.

நாங்கள் கனிக்காக தெரபி வகுப்புகளை நோக்கி ஓடத் துவங்கி ஒரு தசாப்தம் கடந்து விட்டது. இந்த உலகிற்குள் வந்த நாள் முதல் இன்றுவரை நான் இந்த மாதிரியான கட்டண விகிதத்தை கேள்விப்பட்டது கூட இல்லை. 2011லியே இதைவிட இரண்டு அல்லது மூன்று மடங்கு கட்டணம் கொடுத்தோம். நாள் செல்லச் செல்ல தொகை ஏறிக் கொண்டே வந்தது. கடந்த மூன்று வருடங்களாக கொரோனா புண்ணியத்தில்(அல்லது பாவத்தில்) எந்த வகுப்புக்கும் செல்வதில்லை என்பதால் தற்போதைய நிலவரம் தெரியவில்லை. இன்னமும் பன்மடங்கு அதிகரித்திருக்குமே ஒழிய, குறைந்திருக்கப் போவதில்லை.
ஒரு தெரபிஸ்ட் குழந்தைகளுக்கு ஹோம் விசிட் செய்வார். ஒரு மணி நேரத்திற்கு என அவர் விதிக்கும் கட்டணமே ஒரு பகல் கொள்ளை. அது போதாதென அவரது தங்குமிடத்திலிருந்து குழந்தையின் வீட்டிற்கு கிளம்பிய மணித் துளியிலிருந்தே அவரது நேரத்தைக் கணக்கிட்டு, அத்தனை மணி நேரத்திற்கும் அதே கட்டணம் தர வேண்டும் என்பார். இது போக போக்குவரத்து செலவும் பெற்றோர் தலையில்தான். கேட்டால் பயண நேரமும் நான் உங்களுக்காக செலவிடுவதாகத்தானே கணக்கு என்பாராம்.
இப்படியான பகல் கொள்ளையர்கள் பலரும், உண்மையான, நேர்மையான தெரபிஸ்டுகள் சிலருமென பல்கிப் பெருகியிருக்கும் நிலையில், அரசு துறை சார்ந்த வல்லுனர்களையும், பெற்றோரையும் கலந்தாய்வு செய்து ஒரு நியாயமான கட்டண விகிதத்தை நிர்ணயம் செய்து அறிவிக்க வேண்டும். அத்தோடு தெரபி நிலையங்களை கண்காணிக்கவும் தனியானதொரு வாரியம் அமைக்க வேண்டும் என்று பணிவன்போடு கேட்டுக் கொள்கிறேன்.
மாண்புமிகு தமிழக முதல்வர் இப்படியோர் வாரியத்தை அமைத்து, தெரபி வகுப்புகளை முறைப் படுத்தினால் சுங்கம் தவிர்த்த சோழனைப் போல் கொள்ளை தவிர்த்த கோமகனாக கொண்டாடப்படுவார் என்பதில் ஐயமே இல்லை.