பள்ளி நாட்களில் ஒருவர் எங்கள் ஊரில் இந்தி பிரச்சார் சபா தேர்வுகளுக்கான வகுப்பை ஆரம்பித்தார். அவர் தாராசுரத்திலிருந்தோ சுவாமிமலையிலிருந்தோ எங்கள் ஊருக்கு வந்து போனதாக நினைவு. முதலில் சில பையன்கள் சேர்ந்துவிட, அதற்குப் பிறகு விசாரிக்கப் போன எல்லா பெண் குழந்தைகளின் அப்பாக்களும் தயங்கினர். எல்லாம் பசங்களா இருக்காங்க, பொம்பளப் புள்ளைங்கள எப்படி அனுப்பறது என்பதே அந்த சிற்றூர்வாசிகளின் தயக்கம்.
ஆனால் என் அப்பாவோ என்னை சேர்ப்பதற்காக வகுப்பு நேரம் தொடங்கி தேர்வு எப்படி, எப்போது இருக்கும் என்பது வரை விசாரித்துக் கொண்டு வந்துவிட்டார். ஆனால் வேறு பெண் குழந்தைகள் இருக்கிறீர்களா என்ற கேள்வியே அவருக்குத் தோன்றவில்லை.
அதற்குள் தெருப் பெண்களின் உபயத்தில் அம்மா இந்த விஷயத்தில் அப்டேட்டாகி இருந்தார். ஒரே தடிப் பசங்களா இருக்கற எடத்துக்கு பொண் குழந்தைய அனுபலாமோ மாமி என்று கவிதா அக்கா ஏகத்துக்கும் ஏற்றிவிட்டிருந்தார். அம்மாவுக்கும் அப்பாவுக்கும் வாரத்திற்கு குறைந்தது எட்டு முறையாவது சண்டை போட்டே ஆக வேண்டும். அப்படி ஒரு அன்னியோன்யம். அந்த வாரத்தில் எட்டு சண்டைக்கும் இந்த ஒரே விஷயம் காரணமாகிப் போனது.
தஞ்சாவூர், கும்பகோணம் போலெல்லாம் நம்மூரில் வசதி வாய்ப்புகள் கிடையாது. ஏதோ ஒரு பையன் ஆர்வமா ஒரு விஷயத்தை ஆரம்பிக்கறான், குழந்தைக்கு(என்னைத்தான்) கத்துக் கொடுக்கலாம்னு பாத்தா, இப்படி ஆஷாடபூதியா இருந்தால் எப்படி என்பது அப்பாவின் ஆதங்கம்.
இருக்கற ஸ்கூல் புக்கையே கையால தொடாம அலையறா, இவளுக்கு ஹிந்தியும் பூந்தியும்தான் இப்ப குறைச்சல். பசங்களா இருக்கற எடத்துக்கு இவள மட்டும் தனியா அனுப்பினா ஊரே வழிச்சுண்டு சிரிக்காதோ என்பது அம்மாவின் வாதம்.
இதில் தனியா என்ற வார்த்தையை அப்பா பிடித்துக் கொண்டார்.
“இப்ப அவள மட்டும் தனியா அனுப்பக் கூடாதுன்றதுதானே உன் பாயின்ட். சரி, நானும் அவளோட சேர்ந்து கிளாஸ் போறேன்.” என்று கிளம்பினார். யாராலும் எதுவும் சொல்ல முடியவில்லை. மேலும் அது வரை தயங்கிக் கொண்டிருந்த இன்னும் சிலரும் சாரே ஹிந்தி கிளாஸ் போறாராம் என்று உற்சாகமாக தத்தம் பெண் குழந்தைகளை கொண்டு வந்து சேர்த்தனர்.
அப்பாவுக்கு ஓரளவு சமஸ்கிருதம் தெரியும் என்பதால் தேவநாகிரி லிபியில் சுலபமாக எழுதப் படிக்கக் கற்றுக் கொண்டுவிட்டார். எனக்குத்தான் முதல் தேர்வான பிராத்மிக்கை பார்டரில் பாஸ் செய்யவே வாயில் நுரை தள்ளியது. அத்தோடு இதுக்கு மேல என்னால முடியாது என்று கும்பிடு போட்டுவிட்டேன்.
கற்றுக் கொள்ளும் வாய்ப்பைக் கொடுத்துவிட வேண்டும் என்பதில் எத்தனை உறுதியாக இருப்பாரோ, அதே அளவுக்கு ஒரு குழந்தைக்கு ஒரு விஷயம் பிடிக்கவில்லை என்றால் துளியும் வற்புறுத்திவிடக் கூடாது என்பதிலும் அதே அளவு உறுதியானவர். எனவே என்னை அதற்கு மேல் வற்புறுத்தவில்லை.
தேர்வு முடிவுகள் வந்த பின்னர் ஒரு சின்ன பார்ட்டி வைக்கலாம் என்று அந்த ஆசிரியர் முடிவு செய்தார். பார்டி என்றால் பெரிதாக எதுவும் நினைத்துக் கொள்ளாதீர்கள் – கேசரியும், மிக்சரும் தின்று தேநீர் குடிப்பதற்குத்தான் எங்கள் ஊரில் பார்ட்டி என்று பெயர். அன்று எல்லோரும் குரூப் போட்டோ எடுத்துக் கொள்ளலாம் என்று அவர் சொல்ல, மீண்டும் பெண் குழந்தைகளையெல்லாம் போட்டோ எடுக்க அனுப்ப மாட்டோம் என்று மற்றவர்கள் ஒதுங்கிக் கொண்டனர். அப்பாவோ இதிலென்ன இருக்கு, படிக்கற இடத்துல எல்லாரும் ஒரு சின்ன ஞாபகார்த்தமா போட்டோ எடுத்துக்கறது ஒரு சந்தோஷம்தானே, நாங்க வந்துடறோம் என்றார்.
12வது, இளங்கலை, முதுகலை என்று ஒவ்வொரு மைல் கல்லிலும் அம்மாவும், சுற்றத்தாரும் திருமணத்தை நோக்கி என்னைத் தள்ளியபோது ஒற்றை விரலால் அனைவரையும் தடுத்து என்னை என் போக்கிலேயே முன்னேற அனுமதித்தவர். நான் மென்மேலும் படித்துக் கொண்டே இருக்க வேண்டும், உருப்படியான விஷயங்களைக் கற்றுக் கொண்டே இருக்க வேண்டும் என்பதே அவரது ஆசை.
திருமணம், குழந்தை என்றெல்லாம் ஆன பின்னரும் நான் சிறப்புக் கல்வியில் பி.எட் சேரப் போவதை சொன்ன போது மிகவும் மகிழ்ந்தார். தனது ஆசிரியர் பயிற்சிக் காலத்தைப் பற்றிய நினைவுகளை எல்லாம் பகிர்ந்து கொண்டார்.
அவரது காலத்திற்குப் பின்னரும், சென்ற ஆண்டில் முதுகலை கவுன்சிலிங்க் & சைக்கோதெரபியை கற்றுத் தேர்ந்திருக்கிறேன். கற்றல் இனிது என்பதையும், அதன் பின் அதற்குத் தக நிற்றல் அதைவிடவும் முக்கியம் என்பதையும் தன் வாழ்வின் மூலம் உணர்த்திய அவரை நினைத்துக் கொள்ள, எனக்குத் தனியாக நாளும், பொழுதும் வேண்டியதில்லை. ஒவ்வொரு நாளும் ஏதேனும் ஒரு காரணம் பற்றி அவரைக் குறிப்பிடாது நான் இருந்ததில்லை.
