தோழி ஒருத்தியின் கணவருக்கு ஒரு உடல் நலச் சிக்கல். அதற்கென அறுவை சிகிச்சை மேற்கொள்ளப் போவதாகச் சொன்னாள். என் உறவுக்கார அக்காவின் கணவருக்கும் அதே சிக்கல் இருந்ததும், அது மருந்து மாத்திரையிலேயே சரியானதும் நினைவுக்கு வந்தது. அக்காவிடம் பேசி அந்த மருத்துவரின் விவரம் கேட்டு, அதை தோழிக்கு அனுப்பினேன். அறுவை சிகிச்சை என்று முடிவெடுப்பதற்கு முன் இரண்டாம் ஆலோசனையாக இந்த மருத்துவரைப் பாரேன் என்றேன்.
சில நாட்கள் கழித்து மருத்துவரைப் பார்த்ததாகவும், திருப்தி இல்லை என்பதால் முதலில் சொன்ன மருத்துவமனையிலேயே அறுவை சிகிச்சைக்கு ஏற்பாடு செய்து விட்டதாகவும் சொன்னாள். அந்த மருத்துவர் நல்ல அனுபவம் வாய்ந்தவராயிற்றே, எனக்குத் தெரிந்தே அக்கா கணவருக்கு மருந்து மாத்திரையில் குணப்படுத்தியிருக்கிறாரே, ஏன் அவர் வேண்டாம் என்கிறாய் என்று கேட்டேன்.
அதற்கு தோழி சொன்ன பதில் அசர அடித்தது. “அவர் என்ன டாக்டர், அது என்ன ஹாஸ்பிடலோ? ஒரு ரிஜிஸ்ட்ரேஷன் கூட கிடையாது. நேரா போய் கியூவுல உக்காந்து, உள்ள போனா நேரடியா டாக்டர் செக் பண்ணிட்டு, மருந்து மாத்திரை போதும், சர்ஜரி வேணாம்ன்றார். ஃபீஸ அவர்கிட்டயே கொடுக்கணுமாம், அதுக்கு தனி கேஷ் கவுண்டர் கூட இல்ல. இந்த மாதிரி ஹாஸ்பிடலுக்கு ஏண்டா போனோம்னு ஆகிருச்சு” என்று மூச்சு விடாமல் புலம்பினாள்.
செலவை விடுங்கள், தேவையில்லாமல் உடலில் ஒரு அறுவை சிகிச்சை, அதன் மூலம் ஏற்படும் மன உளைச்சல்கள் என்று எத்தனையோ சிரமங்களை தவிர்ப்பதை விட உள்ளே நுழைந்ததும் ஒரு ஃபைல் போட்டு, ஒரு சிப்பந்தி பெயர், விவரங்களைக் குறிப்பதும், பணம் கட்ட தனி கவுண்டரும், ஒவ்வொன்றிற்கும் அங்கே போ, இங்கே போ என்று அலைக்கழிப்பதுமான பந்தாக்கள்தான் நல்ல மருத்துவமனை என்ற பிம்பத்தை யார் ஏற்படுத்தியது?
கல்வி விஷயத்திலும் அதே கதைதான். ”எங்க பாப்பா படிக்கற ஸ்கூலுக்குள்ள ரீசஸ் டைம்ல கூட தமிழ்ல பேசக் கூடாது, பேசினா உடனே ஃபைன்தான்” என்று பெருமை பேச ஆரம்பித்து, குழந்தைகளோடு சேர்த்து பெற்றோராகிய நம்மையும் எவ்வளவுக்கெவ்வளவு டார்ச்சர் செய்கிறார்களோ, அவ்வளவுக்கு அது உசத்தியான் ஸ்கூல் என்ற பிம்பத்தை உருவாக்கிய மசோக்கிஸ்ட்கள்தான் இன்று உண்மையான குற்றவாளிகள். பள்ளிகள் கடுமையாக இருந்தாலும் நல்ல ரிசல்ட் காட்டினால் அது நல்ல பள்ளி என்று நினைத்துக் கொண்டு, அதை நோக்கி படையெடுத்து, முற்றுகையிட்டு, ஏகப்பட்ட சிபாரிசுகள் பிடித்து, பணத்தைக் கொட்டி, இந்தா எங்கள் செல்வங்களை வைத்து எவ்வளவு முடியுமோ அவ்வளவு வதைத்துக் கொள் என்று கொடுத்துவிட்டு வரும் மனநிலை எப்படி இங்கே உருவானது, நிலை கொண்டது என்று வியப்பாக இருக்கிறது.
கும்பகோணம் பள்ளி தீ விபத்துக்குப் பின்னர் தான் பிஎஸ்பிபியில் நீச்சல் குளத்தில் ஒரு சிறுவன் இறந்தான். அதற்குப் பின்னர்தான் சியோன் பள்ளிப் பேருந்தில் குழந்தை விழுந்து இறந்தது. அதற்கும் பின்னர்தான் வெங்கடேஸ்வரா பள்ளி வளாகத்திற்குள்ளேயே குழந்தை பேருந்தில் நசுங்கிய சம்பவம். இவற்றிலிருந்தெல்லாம் நாம் என்ன பாடம் கற்றுக் கொண்டுவிட்டோம்? இதோ இப்போது கள்ளக்குறிச்சி மாணவியின் பலி.
கால காலமாக அடிமைக் கூட்டமாக இருந்துவிட்டு, திடீரென பேரிடி தலையில் விழுந்த பின்னர் ஒரே நாளில் பொங்கி எழுந்து போராடினால் நடுவில் காலிகள் ஊடுருவி கலவரமாக்கிவிட்டுப் போவார்களே தவிர பயனேதும் இருக்கப் போவதில்லை. பெற்றோர் ஆசிரியர் கழகங்களை வலுப்படுத்துவதும், குழந்தையை மதிப்பெண்/பரிசுகள் பெறும் இயந்திரமாகப் பார்க்காமல், நல்ல நட்புணர்வுடன் அவர்களை நடத்துவதும்தான் நிரந்தரத் தீர்வு. தனியார் பள்ளிகளின் அராஜகத்திற்கு மணி கட்டுவது காலத்தின் கட்டாயம். அதை அரசு சட்டபூர்வமாகச் செய்தாலும் சரி, மக்கள் தன்னெழுச்சியாக மனம் திருந்தி செய்தாலும் சரி, இனியும் பிஞ்சுக் குழந்தைகளை இழக்கக் கூடாது.