ஜீவன் உள்ள எழுத்து என்று மாலனும் ஓவ்வொரு பாத்திரமாக சாந்தியும் விவரித்து எழுதியபின் நான் எழுத ஒன்றும் இல்லைதான். ஆனாலும் என்னை வெகுவாக பாதித்திருந்தது ஆனந்தவல்லி.
நீண்டநாள் எடுத்துக்கொண்டேன், படித்துமுடிக்க. அவ்வப்போது லஷ்மியுடன் சந்தேகங்கள் வேறு. அதெப்படி பெண்கள் திருமணத்திற்கு வந்திருந்தால், சாதிவிட்டு சாதி கல்யாணம் நடப்பதை கண்டுபிடித்திருப்பார்கள்? அப்படி என்றால், சாதி, சம்பிரதாயம் எல்லாம் அழிய வேண்டுமென்றால், பெண்கள் இல்லாதிருந்தால் போதுமா?
காலம் காலமாக சடங்குகளும் கலாச்சாரமும் கட்டிக்காப்பது இன்னமும் பெண்களே என்பது போல வரையறுக்கப்படுவதென்னமோ உண்மைதான். அது அவர்கள் அணியும் உடையாகட்டும், அரசியல் கொள்கையாகட்டும் மத ரீதியான சடங்குகளாகட்டும்!
என் மகன் தன் மருத்துவப் படிப்பின் கடைசி வருடப்பயிற்சியில் சில மாதம் சிறுவர் மனநல சிகிச்சைப் பிரிவில் இருந்தான். அங்கே பல மாதங்களுக்கு பிறகு குணமடைந்து ஆர்வத்துடன் வீட்டுக்கு செல்ல காத்திருக்கும் ஒரு சிறுவனின் தந்தைக்கு தொலைபேசியபோது அவர், நான் இந்த வாரம் நிறையப் பணிச்சுமையில் இருக்கிறேன், அடுத்த வாரம் வரை அவனை அங்கேயே வைத்துக்கொள்ள முடியுமா என்றாராம். இன்னொரு சிறுவனின் பெற்றோர்களோ வராது போக சோஷியல் சர்வீசில் சொல்லி அழைத்துக்கொண்டதாக மிகுந்த வருத்ததுடன் சொன்னான். சைனாவில், காலை பள்ளியில் தன் மகனை கொண்டுவந்து விட்டிருக்கிறார் ஒரு தந்தை. பிள்ளை அவருடன் வசித்துவருகிறார். நண்பகலில் டிஎன் ஏ பரிசோதனையில் அவன் தன் மகன் இல்லை என்று தெரியவருகிறது. மாலை பள்ளி முடிந்து மகனை அழைத்துப்போக வரவே இல்லை என்று தெரிந்து அங்கேயே விட்டுவிட்ட செய்திகள் கூட கேள்விப்பட்டோம். இதெல்லாம் நவீன கால செய்திகள். ஆனால், இங்கே நம் ஆனந்தவல்லியை தன் சுயநலத்துக்காக எந்த வித குற்ற உணர்ச்சியும் இல்லாமல் ஒரு தந்தை விற்றுவிடுகிறான். அந்த பாத்திரம், கடைசி வரை அதற்காக வருந்துவதே இல்லை, ஒரு இடத்தில் கூட கலங்குவதே இல்லை, இப்படித்தான், எல்லா பாத்திரங்களுமே, அவர்களின் குணாதிசயங்களில் இருந்து பிறளாமல், செதுக்கிய சிலைபோல கடைசிவரை இயல்பு மாறாமல்.
நல்ல தெளிவான நீரோட்டம் போன்ற கதை, முகம் கூட சரியாக தெரியாத மனைவிக்காக போராடும் கணவன் சபாபதி மீது எழும் மரியாதை என்பதையும் தாண்டி, ராணி பவானி சதியேறுவது, உண்மையிலேயே தன் கணவன் மேலான காதலோ விதவையாக வாழ நேர்ந்தால் இருக்கும் கொடுமைக்காகவோ இல்லை, தன் மகனுக்கு கிடைக்கப்போகும் அங்கீகாரத்துக்கு என நினைக்கும் போது ஏனோ ஏமாற்றமாக இருக்கிறது. அதுகூட ஒரு வகையில் போலியான தாய்ப்பாசமாகவே தோன்றியது எனக்கு.
அரசரை மகிழ்வித்து அவர் மனதை ஆற்றுப்படுத்தி அனுப்ப வேண்டும் என்பதே தன் குறிக்கோள் என்கிற மாதிரி தன்னை நம்பி வந்த சிறுமியை அவரிடம் அனுப்பும் ருக்மிணி, என்னதான் அறிவுக்கூர்மை கொண்டிருந்தாலும் ஆனந்தவல்லியே பின்னாளில் கேட்பதுபோல அவளைவிடுவிக்க முன்வரவில்லை. பவானிக்கு சதியேற உதவி செய்ய பல திட்டங்கள் தீட்டும் அவர், நினைத்திருந்தால், ஆனந்தவல்லியின் தாயும் உறவினரும் வந்து கேட்டபோது அனுப்பியிருக்கலாம்.
ஆனந்தவல்லியின் சர்வைவல் மனநிலையை மிக அழகாக லஷ்மி எழுதியிருக்கிறார், மரகதம் போன்ற மற்ற சிறுமிகளுடனான உரையாடலைப் படிக்கிறபோது அது வெளிப்படுகிறது. வீரம்மா கூட ஆனந்தவல்லியை பவித்ராமாகாமல் இருக்க என்ன செய்யமுடியுமோ அத்தனையும் செய்வதில், தன் சினத்தை வெளிப்படுவதில் கூட உளவியல் சிக்கல்களைக் காணமுடிகிறது. பெண்ணின் பெற்றோருக்குச் சம்மதமா என்றெல்லாம் கேட்ட தான், அவளுக்கு மணமாகிவிட்டதா என்றூ கேட்க தவறிவிட்டேனே எனத் தன் தவறை உணர்ந்த அதிகாரி, அதை திருத்த முனைகையில், செய்த கவனப்பிசகும் அதை முறையாக பின்பற்றாமல் விட்ட தவறும் எப்படி ஆனந்தவல்லியின் வாழ்க்கையை மாற்றியதோ அதேபோல சின்ன சின்ன தவறுகளும் அதை ஒப்புக்கொள்ள முடியாத அதிகாரிகளின் ஈகோவும், அதைக் காலாகாலத்தில் சரிசெய்யாத மனப்போக்கும் இன்றும் அரசு அலுவலகங்களில் நிறைய முறைகேடுகள் நடக்க காரணமாக இருக்கின்றன. அதே போல, தன் மகளையே விற்ற கணவனைக் கூட ஆனந்தவல்லியின் அன்னையோ ஊரோ பெரிதாகத் தண்டிக்கவில்லைதான்.
சரித்திரகாலத்தில் நடந்த நிகழ்வு என்றாலும் இன்றைக்கும் பொருந்தும் கதை, ஆனால், சின்ன சின்ன வன்முறைகளுக்கு கூட பெண்கள் மீதே பழி சுமத்தும் ஆண்களிடையே இன்னொரு சபாபதியைத் தேடிக்கண்டுபிடிப்பதுதான் கடினம்.
நன்றி: பத்மா அரவிந்த்
#ஆனந்தவல்லி_நாவல்
#ஆனந்தவல்லி