தன்னைப் பெற்ற தந்தை மற்றும் தன் நாட்டை ஆளும் அரசராலேயே கைவிடப்பட்டு, சுரண்டப்படும் வாழ்வை எதிர்கொண்ட ஒரு சிறுமியின் கதை இது. இப்படி ஒரு தந்தை இருக்க முடியுமா என்னும் கசப்பை ஜீரணிக்கமுடியாது. முதல் அத்தியாயத்திலேயே அந்த தந்தையின் குணம் சொல்லப்பட்டு விடுகிறது. கொஞ்சம் கொஞ்சமாக அவனுடைய சுயரூபம் இதுதான் என்பதை நம் பார்வையில் திறந்து வைக்கிறார் நூலின் ஆசிரியர். குடும்பம், சாதி, நாட்டு மக்கள் என அனைத்தின் குறுக்கு வெட்டு தோற்றமும் அவ்வளவு சிறப்பாக அளித்திருக்கிறார்.
மராட்டியர்களின் தஞ்சை அரண்மனையில் விற்பனை செய்யப்பட்ட மீனாட்சி என்னும் அச்சிறுமியை, அவளுடைய ஐந்து வயதில் திருமணம் செய்த, முகம் நினைவில் இல்லாத மனைவியைத் தேடும் கணவன் சபாபதி அவளைத் தேடிச்செல்லும் கதை இது. சபாபதியின் போராட்டம் நாவலை பல கோணங்களில் பார்க்கச் செய்கிறது. நம் தேசத்து காவலர்கள், கும்பினி, குவர்னர், சாதாரண மக்கள், அந்தக் கால குடும்பம் என்று அனைத்தையும் விரிவான காட்சியாக பார்க்க வைக்கிறார் ஆசிரியர்.
கணவன் தன் மனைவிக்காக மதராஸ் மாகாணத்தின் கவர்னருக்கு எழுதிய கடிதத்தைப் படித்த எழுத்தாளர் லக்ஷ்மி பாலகிருஷ்ணன், அந்த கணம் விதையாக அவருடைய மனதில் விழுந்த அந்த உண்மை சம்பவத்தை ஆதாரமாகக் கொண்டு இந்த நாவலை எழுத ஆரம்பிக்கிறார். ஆனந்தவல்லியாக விரிவடைந்து பல அடுக்குகளைத் தன்னகத்தே கொண்டு எழுந்து நிற்கிறது.
ஒரு கடிதம் இவருள் இத்தனை உழைப்பை அளித்து, அந்த இடங்களுக்கு பயணம் செய்ய வைத்து, பல நூல்களை இவரைத் தேடித் தேடி வாசிக்கவைத்து, இவர் வாசித்து, இவரது அறிவுக்கூர்மையும், எழுத்தின் நேர்த்தியும் இந்த சிறப்பான நாவலை நமக்கு அளித்துள்ளது. முன்னுரையிலேயே இவற்றை குறிப்பிட்டு விடுகிறார் என்றாலும், நாவல் வாசிக்கையில் புதிதாகவே இருக்கிறது. புதுமையான வரலாற்று நாவலாகவும் இதைப் பார்க்கலாம். உண்மையும் புனைவும் இரண்டறக் கலந்து, ஆவணமாகும் அனைத்து கூறுகளையும் ஒருங்கே தன்னுள் கொண்டுள்ளது இந்த நாவல்.
தஞ்சபுரீஸ்வரர் கோயிலில் அன்னை ஆனந்தவல்லியின் சன்னதி இருக்கிறது. அக்கிரமம் செய்து கொண்டிருந்த தஞ்சகன், தண்டகன், தாரகன் என்னும் மூன்று அசுரர்களை, அம்மை பச்சைக்காளி, பவளக்காளி, வடபத்திர காளி என்று… எட்டு காளியாக வந்து அந்த அசுரன்களை வெட்டி சாய்த்ததும், சிவன் அவளை சாந்தப் படுத்தி இங்கே ஆனந்தவல்லியாக்கினாராம்.
சிறுமி மீனாட்சியோ தன்னை விற்ற தந்தை அழைக்க வருவான் என்று காத்திருந்து, அடிமை ஆனந்தவல்லியாக, அரசரால் உபயோகப்படுத்தப்படும் பெண்ணாக மாற்றப்படுகிறாள். சாதாரண பெண்களால் அசுரனாக அவளை அழிக்க வரும் எந்த ஆணிடமிருந்தும் விடுவித்துக்கொள்ள முடியவில்லை என்பதை இந்நாவல் கண்முன்னே காட்சிப் படுத்துகிறது. அரண்மனைகளில் அடிமைப்பெண்கள் நிறைந்திருக்கிறார்கள். பல அரசிகளும் அடிமைகளைப் போன்றவர்களாகவும் இருப்பதும் காட்டப்படுகிறது.
அரண்மனையில், பெண்கள், அடிமைகள், தாதிகள் என்று அனைவரின் நிலையும், விலைமகள் என்று பெண்கள் அனைவருமே சுரண்டப்படுபவர்களாகவும், உபயோகத்துக்கான பொருள்களாக மட்டுமே இருக்கும் அவலநிலை பேசுபொருளாக உள்ளது. அந்தக்காலப் பெண்கள், மக்களின் உளவியல், வரலாறு ஒவ்வொரு காட்சியிலும் கன கச்சிதமாகக் கொடுக்கப்பட்டுள்ளது.
அரசருக்கு அறிவுரை சொல்லும் இடத்திலும் பெண் இருக்கிறாள். இறந்த அரசருடன், தடையை மீறி அரசிகள் உடன்கட்டை ஏறும் காட்சி திரைப்படத்துக்கு நிகரான காட்சியாகக் கொடுக்கப்பட்டுள்ளது. இந்தக் காட்சி மட்டுமல்ல, அரசன் ருக்மணியை சந்திக்க வரும்போது, மாதவிலக்கென்று அவளுக்கு பதிலாக சிறுமியை அனுப்புவது, தற்கொலை செய்துகொள்ள அறைக்குள் இருக்கும் சிறுமிகளை ஆனந்தவல்லி மீட்கும் காட்சி, எப்படியாவது மீனாட்சியைச் சந்திக்க சபாபதி ஒவ்வொரு இடமாக அவளைத் தேடுவதும், மீனாட்சியுன் தாய், பெரியப்பா அரண்மனையில் அவளுக்காக போய் பிராது வைக்க நிற்கும் காட்சி, தெரிந்தே அரண்மனையில் தன்னிச்சையாக சிறுமியை வெளியில் வேறு இடத்துக்கு அனுப்புவது, சபாபதியும் தந்தையும் உரையாடும் காட்சி, சபாபதியின் தந்தையிடம் சபாபதி சென்றவன் திரும்பி வரவில்லை என்று சொல்வதும், என ஒவ்வொரு காட்சியுமே விறுவிறுப்பு குறையாமல், அவசியம் இதை திரைப்படமாக எடுக்கும் அளவில் காட்சிப்படுத்தியிருக்கிறார். எல்லா காட்சிகளையும் சொல்லக்கூடாது என்று இத்துடன் நிறுத்திக்கொள்கிறேன். சொல்லச் சொல்ல இன்னும் எடுத்துச் சொல்ல அத்தனை விஷயங்கள் உள்ளன. மனிதர்கள் உரையாடும் காட்சிகள் உண்மைத்தன்மையுடனும் உணர்வு பூர்வமாகவும் உள்ளன. மனிதருக்குள் இருக்கும் மேன்மை, கீழ்மை விழுமியங்களை எடுத்துச் சொல்லும் விதமாகவும் காட்சிகள் நகர்கின்றன.
இத்தனை விரிவான களத்தில் காட்டப்படும் அதிகாரத்தின் கீழ் வாழும் எளிய மக்களின் வாழ்க்கை மனதை நெகிழ வைக்கிறது. ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் தேர்ந்த பொம்மலாட்டக் கலைஞர் போல ஆசிரியர் நம் மனதில் உலவவிடுவதில் வெற்றி பெறுகிறார்.
அரண்மனை சாப்பாடு, மரக்கறி, கதாயி கபாப் குறித்த விபரங்கள், துயருக்கு நடுவில் பெண்களின் சாப்பாடு, சிரிப்பு என பேச்சுகள், வசனங்கள் சிறப்பு. வாழ்க்கை தத்துவங்கள் ஆங்காங்கே அள்ளித் தெளிக்கப்பட்டுள்ளன. சில உதாரணமாகக் கீழே தரப்பட்டுள்ளது.
பதிகப் பாடலும், விறகிற்றீயினன், கலையாத கல்வியும் வாசிக்கும்போதே அந்த நடுத்தர வயது மனிதரின் இனிய குரல் காதில் கேட்பது போலிருந்தது.
///என்ன ஸ்வாமி, சதுரங்கத்தில் காய்களை நகர்த்துவது போலவா அரச பதவியை இடம் மாற்றி விட முடியும்?///
///ஏற்கனவே இந்தத் தலைமுறையைச் சேர்ந்த பாமர மக்கள் பலரும் பெரிய கோவிலையே மராத்திய மன்னர்கள்தான் கட்டியதாக நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். இப்போது இத்தகைய கல்வெட்டுகளையும் ஏற்படுத்திவிட்டால், வரும் தலைமுறைகள் கோவிலைக் கட்டிய சோழர்கள், திருப்பணி செய்த நாயக்கர்கள் எல்லோரையும் மறந்துவிடக்கூடும்.///
///ஜீவிதம்னா இப்படித்தாண்டி… யாரு இருந்தாலும் இல்லாட்டியும் ஓடிகிட்டேதான் இருக்கும். உப்பும் தண்ணியும் உள்ள எறங்க எறங்க எப்பேர்ப்பட்ட துக்கமும் ஆறிப்புடும்.///
///நினைவுபடுத்திக்கொள்ளவே தேவையில்லாதபடி அந்தப் பெண் மீனாட்சியின் விவகாரம் அடிக்கடி மோஹிதாவின் அந்தராத்மாவைத் தொந்தரவு செய்து கொண்டிருந்த ஒன்றுதான். இருந்தாலும் தன் பேரில் விழாதபடிக்கு எதை எப்படிச் சொல்லலாம் என்று யோசித்துக்கொள்ள மோஹிதேவுக்கு சிறிது நேரம் தேவைப்பட்டது.///
///இந்த பத்தினியா இருக்கறதுன்றதெல்லாம் பெரிய மனுஷனுங்க குடும்பத்து பொண்டுகளுக்குத்தான். பெரிய மனுஷனுக்கு வாழ்க்கைப்பட்டவங்க எவ்வளவுக்கு எவ்வளவு புருஷனுக்கு விசுவாசமா இருக்காங்களோ அவ்வளவுக்கு அவங்க பெத்த புள்ளைங்களுக்கு மதிப்பும் மரியாதையும் கூடும். இப்ப நம்ப பவானியம்மா சிதையேறினாத்தான் யுவராஜா பிரதாபசிம்மருக்கு மதிப்பு. அதுக்காவத்தான் இது மாதிரி சம்பிரதாயமெல்லாம் வச்சிருக்காங்க. நம்மள மாதிரி வயத்து பொழப்புக்கு அடுத்தவன அண்டியிருக்கிறவங்களுக்கு இந்த மாதிரி கௌரவமெல்லாம் கெடயாது///
///மேல மேல ஊகத்துலயே பேசிக்கிட்டிருந்தா இதுக்கொரு முடிவே இருக்காது. எனக்கு அவள ஒரு மொறையாச்சும் நேருக்கு நேரா பார்க்கணும். அதுக்கப்புறம் அவ என்ன நெனக்கிறாளோ அதும்படி செஞ்சுக்க வேண்டியதுதான்///
இப்படித் தன் மனைவியைத் தேடிச் சென்ற ஆணின் மனநிலையில், இப்போது ஒரு ஆண் இருக்க முடியுமா? ஏனென்றால், அந்தப் பெண் ஒருவேளை திரும்பி வந்தால், தனியாக வருவாளா இல்லை குழந்தையுடன் வருவாளா என்னும் அந்தக்கால சமூக பொது புத்தி கேள்வி கேட்கும்.
நற்குணம், பரிமளா என ஒவ்வொரு கதாபாத்திரமும் கச்சிதமான படைப்பு.
வலங்கை சாதி எடங்கை சாதிக்காரர்களைப் போல திருமணம் செய்வது என்று நுணுக்கமான விஷயங்களை எப்படி கோர்வையாக சேர்த்துவைக்கிறார் என்று பாராட்ட வேண்டும். அதீத ஞானம் இந்த வயதிலேயே வாய்த்திருக்கிறது.
எழுத்தாளர் தனுஷ்கோடி ராமசாமி ஒரு சிறுகதையில் ஒரு ஆணைப் படைத்திருப்பார். வாழ்க்கை நெருப்பூ என்னும் அந்தச் சிறுகதை, ஒரு பெண்ணைப் போற்றும் ஆண் மனதின் பேரொளியின் தரிசனத்தைக் காட்டும் கதை.
அதைப் போன்று இந்த நாவலின் சபாபதிப்பிள்ளை கதாபாத்திரம் மிகுந்த உயர்ந்த மனதைக் கொண்ட ஆணாக மிளிர்கிறான்.
இதுவரை வெளிவந்த வரலாற்று நாவல்களை விஞ்சும் வகையிலும் ஒரு வித கட்டுக்கோப்புடனும் தெளிந்த நீரோட்டமான நடையிலும் புதுவித பாணியை கட்டைமத்தபடியும் இந்த நாவல் வடிவமைக்கப்பட்டுள்ளது,
முதல் நாவல் என்பதற்கான எந்தத் தடயமும் இல்லை. அதுவே உங்கள் வெற்றி. தொடர்ந்து பல விருதுகளைப் பெரும் அளவில் இந்தப் படைப்பு உள்ளது. அத்தனை உழைப்பை அளித்திருக்கிறீங்க. மேலும் பல படைப்புகள் அளிக்க மனம் நிறைந்த வாழ்த்துகள்மா லக்ஷ்மி.
அன்புடன்
மதுமிதா
30.07.2022
பாரதி புத்தகாலயம்,
7. இளங்கோ சாலை,
தேனாம்பேட்டை,
சென்னை 600018