உலகமே கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு திணறிக் கொண்டு இருந்தபோது, ’மூஞ்சிக்கு நேரா டேபிள் ஃபேன அஞ்சுல வச்சு ஓடவிட்டால் போதும், அப்புறம் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்படாது’ என்ற ஹீலர்களுக்கும், ’வேலை வெட்டி இருந்தா டிப்ரஷன் எப்படி வரும்’னு கேட்கும் ஃபேஸ்புக் மூட கருத்தாளர்களுக்கும் எட்டென்ன, ஒரே ஒரு வித்தியாசம் கூட கிடையாது என்றுணர்க. ( பின்னதில் மயிரு, குசு, மலம் போன்ற சிலபல அதியத்புத வார்த்தைகள் தூவப்பட்டு பின்னவீனத்துவ மணம் கமழ இருக்கும் என்பது மட்டுமே ஒரே ஒரு வித்தியாசம்.)
அவ்வப்போது இது போல சிலபல உளறல்கள் கண்ணில் பட்டாலும் சிரித்துக் கடப்பதே வழக்கம் என்றாலும் இந்த விஷயத்தில் கவுன்சிலிங் & சைக்கோ தெரப்பியில் முதுகலை பட்டம் பெற்றவள் எனும் முறையில் சொல்வதற்கு சிலது இருப்பதாக எண்ணுவதால் இந்தப் பதிவு. சொல்வதென்றால் கருத்தாளருக்கு பதில் சொல்வதல்ல – அது முழுக்க நிரம்பிய கோப்பையில் மேலும் தேநீர் வார்ப்பது போன்ற வீண் செயல் என்பதறிவேன். ஆனால் ஹீலர்கள் பேச்சைக் கேட்டு வீட்டிலேயே பிரசவம், பார்த்து தாயையும் சேயையும் தொலைத்துவிட்டு நிற்பவர்கள் மீது தோன்றும் பரிதாபம் காரணமாகவே இதில் பேச வேண்டியிருக்கிறது.
டிப்ரஷன் என்பதற்கு மருத்துவ உலகம் சொல்லும் காரணிகள் பாலியல்/உணர்வுச் சுரண்டலுக்கு ஆளாவது, வேறெதேனும் உடல் நலச் சிக்கலுக்காக எடுக்கும் சில மருந்துகள், நெருங்கியவர்களின் மரணம், உறவு முறிவு, மரபு ரீதியான குறைபாடுகள், விட்டமின் குறைபாடு என நீள்கிறது. மேலும் ஆண்களைக் காட்டிலும் பெண்களுக்கு டிப்ரஷன் ஏற்படும் விகிதம் அதிகமாகவே உள்ளது(உலக அளவிலேயே கூட இதுதான் நிலவரம்). இதற்கும் எந்த திட்டவட்டமான காரணத்தையும் இன்று வரை கண்டுபிடிக்க முடியாததால் இந்தப் பழியையும் தூக்கி ஹார்மோன்களின் தலையிலேயே இப்போதைக்கு போட்டு வைத்திருக்கிறோம். டிப்ரஷன்கள் வெளிப்படும் விதத்தைப் பொறுத்து அதன் அடர்த்தியையும் வரையரை செய்து உள்ளனர். லேசான, மிதமான, தீவிரமான டிப்ரஷன்களுக்கு மேற்கொள்ளப்படும் சிகிச்சை முறைகள் வெவ்வேறானவை. தகுந்த உளவியல் நிபுணர்கள் மட்டுமே முடிவெடுக்க வேண்டிய நுட்பமான விஷயங்கள் அவையெல்லாம்.
தூக்கக் குறைவு அல்லது அதீத தூக்கம், இனம் புரியாத சோகம், தன்னம்பிக்கை குறைவு, தொடர்ந்து பசி இல்லாது போவதால் ஏற்படும் எடைக் குறைவு, சினம் போன்ற எதிர்மறை உணர்வுகள், உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த முடியாமல் எரிந்து விழுவது என்று வெளிப்பட ஆரம்பிக்கும் அறிகுறிகள் மெல்ல மெல்ல நமது எல்லா உறவுகளையும், சூழலையும் கெடுத்து தற்கொலை எண்ணங்களைத் தூண்டுவது வரை போகலாம்.
காரணமற்ற உடல் வலி, அல்சர், தொடர் தலைவலி, தோல் பிரச்சனைகள் என பல்வேறு உடல் உபாதைகள் கூட உள்ளுக்குள் குமையும் டிப்ரஷனின் வெளிப்பாடுகளாக இருக்கக் கூடும். இதை சைக்கோ சொமாட்டிக்(psycho somatic) என்பர். அதாவது இந்த நோய்களுக்கு காரணமே இருக்காது -ஆனால் உள்ளுக்குள் இருக்கும் மனச் சோர்வின் காரணமாகவே உடலில் இந்தக் கோளாறுகள் வெளிப்படும். எனவே இந்நோய்களுக்கான மருந்தை அளிப்பதை விட மனச் சோர்வை சரி செய்வதே நிரந்தரத் தீர்வு என்பதை முறையான மருத்துவர்கள் அறிவர்.
மனச் சோர்வை எக்ஸ்ரே, ரத்தப் பரிசோதனை, ஸ்கேன் என்பது போன்ற புறவயமான சோதனைகளால் அளவிட முடியாது. தொடர்ச்சியான உரையாடலின் மூலமாக உளவியல் வரலாற்றை(case history) உருவாக்கி, அதன்படியே சிகிச்சையை திட்டமிடுவார்கள். நோயாளியின் நலன் அளவீட்டுக்கான கேள்விப் படிவங்கள்(Patient Health Questionnaire -PHQ) உண்டு. அவையெல்லாமே அறிவியல்பூர்வமாக, தகுந்த நிபுணர்களால் தயாரிக்கப்பட்ட கேள்விகள். அந்தக் கேள்வித்தாள் மட்டும் கையிலிருந்தால் போதாது – அவற்றுக்கான பதில்களை எப்படிப் புரிந்து கொள்வது(Decode டீகோட் செய்வது) என்பதற்கும் வழிகாட்டுதல்கள் உண்டு. அவற்றையெல்லாம் புத்தகங்களில் படித்ததோடு நில்லாது பயிற்சிக் காலத்தில் மருத்துவமனையில் சென்று அருகிலிருந்து பார்த்துக் கற்றுக் கொண்டு, செயல்முறைத் தேர்வில் செய்து காட்டிய பின்னரே உளவியலாளர்கள் பட்டம் பெற முடியும்.
இப்படியெல்லாம் கற்றுக் கொண்டு பட்டம் பெற்றாலும் கூட உளவியல் துறையைப் பொறுத்தவரை ஒவ்வொரு நாளும் புதிது புதிதாகக் கற்றுக் கொண்டாக வேண்டும். அவற்றையெல்லாம் நிபுணர்கள் தங்களுக்குள் விவாதித்து, அறிவை மேம்படுத்திக் கொண்டும் இருப்பார்கள். அத்தகைய பயிற்சி சிறிதும் இல்லாதவர்கள் ’அதான் எனக்குத் தெரியுமே’ என்று பூரி சுடக் கிளம்புவது சமூக வலைத்தளங்களின் கட்டற்ற தன்மையின் சாபக் கேடுகளில் ஒன்று. அத்தகைய பூரி சுடும் பதிவுகளைப் பார்த்து வேலைகளை இழுத்துப் போட்டுக் கொண்டு செய்தால் மனச்சோர்வு அகன்றுவிடும் என்று யாரொருவரும் தவறான பாதையில் போய்விடக் கூடாதே என்பதற்காகவே இப்பதிவு.
சமாளித்துக் கொள்ள முடியாத சிக்கல்கள் என்று தோன்றினால் முறையான உளவியல் நிபுணர்களை நாடுங்கள். உண்மையில் உங்களுக்கு ஒன்றுமே சிக்கல் இல்லையென்றால் கூட அவர்கள் உங்களை எள்ளி நகையாடப் போவதில்லை. உங்கள் விவரங்களை பொதுவெளியிலோ மற்றவர்களுடனோ பகிர்ந்து உங்களை தாழ்வுணர்ச்சிக்கு ஆளாக்க மாட்டார்கள். வாயுவால் வந்த வலியா மாரடைப்பா என்பதை மருத்துவர்கள் சொல்லட்டும். வாயால் பூரி சுடும் ’அதான் எனக்குத் தெரியுமே’ கோஷ்டியினரின் கருத்துக்களைக் கேட்டு மனச்சோர்வெனும் புதைகுழியில் முழுகி விடாதீர்கள்.