வாசகப் பரப்பில் பெருவெற்றி பெற்ற ஒரு நாவல், திரைப்படமாக்கப்படுவது ஒன்றும் தமிழுக்குப் புதிதல்ல. ஏற்கனவே இதற்கு ஒரு முன்னோடி உண்டு. தில்லானா மோகனாம்பாள்தான் அந்த முன்னோடி. அந்த நாவலும் 50களில் விகடனில் தொடர் கதையாக வந்தது. தமிழ்நாட்டில் மட்டுமல்ல ஆந்திராவில் கூட அதற்கு பெரிய ரசிகர் கூட்டம் இருந்தது. ஆந்திராவில் தமிழ் தொடர் கதை எப்படி என்று வியப்பாக இருக்கிறதா? தமிழ் தெரிந்த ஒருவர் அக்கதையை படித்து மொழிபெயர்த்துச் சொல்ல, மனவாடுகள் சுற்றி இருந்து கேட்டு மகிழ்வார்களாம். அப்படியொரு பிராபல்யம் கொண்ட கதையை வாசனே படமாக எடுக்க நினைத்து, பலகாலம் தள்ளிப் போய்ப் பின் ஏபிஎன் வசம் அந்த உரிமை வந்தது.
ஆனால் படத்தைப் பொறுத்தவரை மூலக்கதை மட்டுமே சுப்புவினுடையது. மற்றபடி திரைப்படம் நாவலின் மாறுபட்ட வடிவம்தான். நாவலின் இரண்டாம் பாகத்தை முழுக்கவே வெட்டி வீசிவிட்டு, மதன்பூர் அரசருக்கும் ஷண்முகத்திற்குமான அகங்காரப் போராட்டத்தை வெறும் மோகனா மீதான அரசரின் மோகமாக மட்டும் சுருக்கிக் கொண்டுதான் படமாக்கினார்கள். அது எந்த விதத்திலும் திரைப்படத்திற்கு குறையாக அமையவில்லை. போலவே கதையில் நாயகன் இருபது வயது இளங்காளை, நாயகியோ பதினெட்டு வயதுப் பருவப் பெண். படத்தில் யார் யார் நடித்தார்கள், அவர்களின் வயதென்ன என்று எல்லோருகும் தெரியும். ஆனால் அதுவும் குறையாகிவிடவில்லை. ஒருவேளை அந்தக் காலத்தில் நாவலை தொடர் கதையாகப் படித்தவர்கள் நாவலில் ஷண்முக சுந்தரத்திற்கு குடுமி வைத்துப் படம் போட்டார்களே, சிவாஜி கிராப் அல்லவா வைத்திருக்கிறார் என்பது போன்ற பற்பல அருங்குறைகள் சொல்லியிருக்கலாம். இப்போது போல சமூக ஊடகங்கள் இல்லாததால் அதெல்லாம் மரத்தடிகளிலேயே காற்றில் கரைந்து போயிருக்கக் கூடும். ஆனால் அறுபது வருடங்கள் கடந்தும் படம் வரலாற்றில் நின்று கொண்டிருக்கிறது. இரண்டாயிரத்திற்குப் பிறகு பிறந்தவனான என் மகன் கனியும் கூட அந்தப் படத்தின் பரம ரசிகன்.
அதே போல பொன்னியின் செல்வன் திரைப்படமும் கூட காலம் கடந்து நிற்கும் என்பதே என் எண்ணம். மூல நாவலை மிகச் சிறப்பாக, அதன் அழகு குறையாதபடி சுருக்கியிருக்கிறார்கள். நடிகர் நடிகைகளில் நான் மிகவும் எதிர்பார்த்தது விக்கிரமைத்தான். அவர் சற்றும் ஏமாற்றவில்லை. அதே போல் நான் மிகவும் மோசமாக மதிப்பிட்டிருந்தது ஜெயம் ரவியை. ஆனால் அவரோ நம்பமுடியாத அளவுக்கு அந்தப் பாத்திரத்தை அழகாக ஏற்று, சமன் செய்திருந்தார். கார்த்திக்கு மிகப் பொருத்தமான பாத்திரம். அருமையாக நடித்துமிருக்கிறார். ஒரு பத்து வருடம் முன்பு எடுக்கப்பட்டிருந்தால் நாகு டார்லிங்க் நடித்திருக்கலாமே என்று மிக லேசாக ஒரு பொறாமை எட்டிப்பார்த்தாலும், உண்மையை ஒப்புக் கொண்டுதானே ஆக வேண்டும். சுரங்கத்திற்குள் நுழையும்போது நந்தினியைக் கண்களால் விழுங்குவதாகட்டும், குந்தவையைப் பார்த்தவுடன் மெய்மறந்து நின்றாலும் கம்பீரத்தை விடாமல் பேசுவதாகட்டும், பூங்குழலியைச் சீண்டிப் பார்ப்பதாகட்டும், எல்லா இடங்களிலும் வந்தியத்தேவனின் விளையாட்டுத்தனம் நிறைந்த வழிசலை நன்றாகவே வெளிப்படுத்தியிருக்கிறார்.
இதற்கு முன் திரிஷாவை நான் மிகவும் ரசித்தது கொடி படத்தில்தான். அதற்குப் பிறகு இந்தப் படத்தில்தான் அவரது அழகும், திறமையும் ஜொலிக்கிறது. சோழ சாம்ராஜ்யத்தின் மூன்று தலைமுறை அரசர்களைக் கட்டி மேய்க்கும் அளவு ராஜதந்திரியான, அழகிலும் சோடை போகாத இளவரசியின் கதாபாத்திரத்தையும், அதற்கான பிரம்மாண்டமான கொண்டையைப் போலவே அனாயாசமாக சுமந்து நடித்திருக்கிறார். பிரகாஷ்ராஜ், சரத்குமார், பார்த்திபன் அனைவருமே தங்கள் இடம் உணர்ந்து அடக்கமாக, கச்சிதமாக நடித்திருக்கிறார்கள்.
மொத்தத்தில் மணிரத்னம் கல்கி ஏற்படுத்தி வைத்திருந்த பிரம்மாண்டமான மைல்கல்லைத் தொட்டுவிட்டார். சமகாலத்தவர்களுக்குப் புரியும் படியான, அதே நேரம் பேச்சுத் தமிழளவுக்கு இறங்கிவிடாத வசனங்களில் ஜெயமோகனும் அப்படியே. மணிரத்னத்னமும் கல்கியும் வசனங்களின் அளவு விஷயத்தில் நேரெதிர் துருவங்கள். இருவரையும் இழுத்துப் பிடித்து ஒரு மையமான அளவில் கொண்டு வந்து நிறுத்தியிருப்பதெல்லாம் இமாலய சாதனை. அது ஜெயமோகன் போன்ற அதிதிறமைசாலியான ஒருவருக்கே சாத்தியம்.
குறை என்று பெரிதாக எதுவுமில்லை. ஆனாலும் ஆங்காங்கு சில கற்கள் தட்டுப்படவே செய்கின்றன. சுந்தர சோழரின் நோய்ப் படுக்கையும், அவருக்கான வேர், தழை, பற்ப செந்தூரம் போன்றவற்றைக் அடிப்படையாகக் கொண்ட நாட்டு வைத்தியம் அல்லது சித்த வைத்திய சிகிச்சைகளும் நாவலில் விரிவாகப் பேசப்பட்ட விஷயங்கள். மேலும் அதன் தொடர்ச்சியாகத்தான் பினாகபாணியும், வந்தியத் தேவனும் மூலிகை தேடி இலங்கை போவதாகச் சொல்லியே குந்தவை அவர்களை அனுப்பி வைப்பாள். நந்தினியின் உத்தரவால் பாண்டிய ஆபத்துதவிகளும் அதே காரணத்தைச் சொல்லித்தான் இலங்கைக்குப் போவார்கள். தந்தை நோயால் படும் துன்பம் கண்டு மனம் கசிந்து நாட்டில் பல ஆதூர சாலைகளை குந்தவை அமைப்பதும் நாவலிலேயே வரும் செய்தி. இப்படி பல இடங்களில் குறிப்பிடப்பட்ட விஷயத்தை வம்படியாக பீதர் நாட்டு சூசிமர்த்த வைத்தியமாக(அக்குபஞ்சர்) மாற்ற வேண்டிய தேவையோ, பாண்டிய ஆபத்துதவிகளும் சுந்தர சோழருக்காக யானை முடி, நரிப் பல் போன்ற மாந்திரீக சாமான்கள் சேகரிக்கவே இலங்கை போவதாகவும் காட்ட வேண்டிய தேவையோ இருப்பதாகத் தோன்றவில்லை.
போலவே கண்டராதித்தரின் துணைவியான செம்பியன் மாதேவி நாவலில் துறவி போல வாழும் கைம்பெண்ணாகவே வருவார். படத்தில் ஜெயச்சித்திராவுக்கு திருநீறோடு குங்குமமும் நெற்றியில் அணிவித்திருக்கிறார்கள். குங்குமத்தை நாமம் என்று சொல்லி ஆதித்த கரிகாலனை வைஷ்ணவனாக்கிவிட்டதாகப் புலம்பிய எதிரணியினர் கூட இந்த சறுக்கலைக் குறிப்பிடவில்லை என்பது வியப்புத்தான். கைம்பெண் குங்குமம் அணியக் கூடாது என்றல்ல, அந்தக் காலகட்டத்தில் அப்படி ஒருவர் செய்திருக்க வாய்ப்பில்லை என்பதாலேயே இது பிழையான சித்தரிப்பாகிறது.
பழுவேட்டரையர் மாளிகையிலிருந்து கிளம்பும் சுரங்கப்பாதையில் அத்தனை தீவட்டிகள் எரிவது இன்னொரு அபத்தம்.
இலங்கையில் அருண்மொழிக்கு சிங்கள சிம்மாசனத்தை அளிக்கும் புத்த பிட்சுவின் குரல் ஜெயமோகனுடையதைப் போன்று தோன்றுவது என் பிரமையாக இருக்கலாம். 🙂
நாவலில் கப்பல் உடைந்த பின் கடலில் குதிக்கும் வந்தியத்தேவனும், அருண்மொழியும் மிதக்கும் கொடிமரத்தைப் பற்றிக் கொண்டு நீந்துவதாகக் காட்சி வரும். ஆனால் சம்பந்தமே இல்லாமல் உடைந்து கொண்டிருக்கும் கப்பலில் கொடிமரத்தின் உச்சிக்கு இருவரும் ஏன் ஏறுகிறார்கள் என்று புரியவில்லை. இப்படி ஆங்காங்கு சிற்சில பிசிறுகள் இருந்தாலும் இப்படம் யானையை வெற்றிகரமாக எய்த வேலேதான்.
இன்னமும் அதிகம் வெளிப்படாத வீரபாண்டியனின் கதாபாத்திரமும், அறிமுகமே ஆகாத மணிமேகலை பாத்திரமும் இரண்டாம் பாகத்தில் நன்றாக வளர்த்தெடுக்கப்படலாம். நந்தினியாக சமாளித்துவிட்ட ஐஸ்வர்யா, மந்தாகினியாக எப்படி வெளிப்படுகிறார் என்று பார்க்கவேண்டும். அருண்மொழி கடலில் மூழ்கி விட்டதான வதந்தியோடு அழகாக முடித்திருக்கிறார்கள். ஆனால் ஆதித்த கரிகாலனோ மலையமானோடு சேர்ந்து கோபமாக படை நடத்தி வருவதாகக் காட்டியிருக்கிறார்கள். இந்நிலையில் கரிகாலனின் கொலையை எப்படிக் கொண்டு போகப் போகிறார்கள் என்று தெரியவில்லை. செம்பியன் மாதேவியின் கதாபாத்திரமும், சேந்தன் அமுதனுக்கும் கூட நிறைய காட்சிகள் இருந்தாக வேண்டும். அவையெல்லாமும் இரண்டாம் பாகத்தை ஆவலுடன் எதிர்பார்க்க வைத்திருக்கின்றன.
பி.கு: நாவல் படிக்காத இளந்தலைமுறையினருக்கு நாவலின் பின்னணியை சற்று விவரமாக ஒரு டாகுமெண்ட்ரியாக மணிரத்னமே தயாரிக்கலாம். அதில் படத்தில் நடித்தவர்களையே கொண்டு தங்கள் கதாபாத்திரத்தைப் பற்றி, அவர்களின் வரலாற்றுப் பொருத்தத்தைப் பேச வைத்து வெளியிட்டால் அது பலருக்கும் உதவியாக இருக்கும் என்றெண்ணுகிறேன். ஜெயமோகனே அதற்கும் பிரமாதமாக ஸ்கிரிப்ட் எழுதித் தந்துவிடுவார். அது சோழர் வரலாற்றையும், திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தையும் மக்கள் நன்கு புரிந்து கொள்ளவும் உதவும்.