தஞ்சையில் உள்ள மாவட்ட மைய நூலகம் என் வாழ்வில் மறக்க முடியாத இடம். கல்லூரி வாழ்வில் நுழையும் போது கிடைத்த சுதந்திரத்தை நான் பரிபூரணமாகப் பயன்படுத்திக் கொண்டது வாசிக்கத்தான். வாசிப்பை விட எனக்கு மகிழ்வு தரும் விஷயம் வேறெதுவும் இல்லை என்பதை நான் கண்டுகொண்ட நாட்கள் அவை.
சிறுவயதில் நான் கேட்ட புராணக் கதைகள் எல்லாமே “பகவான் கிருஷ்ணர் என்ன பண்ணினார் தெரியுமா” என்றோ “ஸ்ரீ ராமச்சந்திரமூர்த்தி என்ன சொன்னார் தெரியுமோ” என்றோதான் ஆரம்பிக்கும். பாட்டியோ அப்பாவோ பக்தி ரசம் சொட்டச் சொட்டத்தான் கதைகளைச் சொல்வார்கள்.
இளம் வயதில் கேட்ட கதைகள் என்பதால் ராமாயணத்தை ராமனின் பக்கமிருந்தும், பாரதத்தை பாண்டவர் பக்கமிருந்தும் மட்டுமே நினைக்கப் பழகியிருந்த மனதிற்கு, மகா ஸ்வேதா தேவியின் ஒரு படைப்பு புராணங்களுக்குள் புதையுண்டிருக்கும் விளிம்பு நிலை மனிதர்களின் மீதான கரிசனமின்மையை உடைத்து முன் வைத்தது. குந்தியும் நிஷாதப் பெண்ணும் என்ற அந்தக் கதை மரபான சூழலில் வளர்ந்து வந்த எனக்கு அளித்த அதிர்ச்சி மிகவும் அதிகம். அடுத்தது இவரது காட்டில் உரிமை எனும் படைப்பு, அது அளித்த பீர்சா முண்டா எனும் தலைவனின் அறிமுகம் என அந்த இளம் வயதில் என்னை மிகவும் பாதித்த எழுத்தாளுமை மகா ஸ்வேதா தேவி.
புராண இதிகாசங்களை மறுவாசிப்புக்கு உட்படுத்த வேண்டும் என்று நான் சொல்லும் போதெல்லாம் பாலா, சொல்லும் வார்த்தை, உன்னுடைய சிந்தனையில் மகா ஸ்வேத தேவியின் பாதிப்பு அதிகம் தெரிகிறது என்பதுதான்.
அள்ள அள்ளக் குறையாத அட்சயபாத்திரம் போன்ற மகாபாரதத்தில் இருந்து ஒரு பகுதியை மட்டும் எடுத்து, என் பார்வையில் ஒரு நாவல் எழுதி முடித்துவிட்டேன். இப்போது பாலாவின் கூற்று சரியானது என்றே தோன்றுகிறது. வன அழிப்பு, அதை முன் வைத்து ஒரு பெண்ணின் வாழ்வையும் வனவாசிகளின் பாடுகளையும் பேசுவதும்தான் இந்நாவலின் மையச்சரடு. நாவலை எழுதி முடித்தாயிற்று என்பது தரும் ஆசுவாசத்தை நட்புகளுடன் பகிர்ந்து கொள்ளவே இப்பதிவு.
நாவலின் தலைப்பு: மானசா
ஜனவரி புத்தகக் கண்காட்சியில் மானசா வருவாள் என நம்புகிறேன்.
#மானசா_நாவல்
#மானசா
#லக்ஷ்மிபாலகிருஷ்ணன்
