ஆனந்தவல்லி – a late tribute
லக்ஷ்மி அண்ணி எழுதிய ஆனந்தவல்லி நாவலைப் படிக்க நேற்றுதான் வாய்த்தது. கையிலெடுத்த புத்தகத்தைக் கீழே வைக்காமலே முழு நாவலையும் படித்து முடித்தேன். ஆங்காங்கே சிதறிக் கிடக்கும் முத்துக்களை மாலையாகக் கோர்க்க கொஞ்சம் தடுமாறித்தான் போனேன்.
சபாபதியைப் போலான காதல் சாத்தியமா?
கொத்தன் போல புத்தி கொண்ட பலர் இந்த மண்ணில் வாழத்தானே செய்கிறார்கள்? அவர்களால் எப்படி உறங்க முடிகிறது?
மஹாலில் ஊழியம் செய்யும் அந்த மோஹிதேவைப் போலத்தானே மாத சம்பளம் வாங்கும் பலரின் நிலையும்?
புத்தகத்தை விட முன்னுரையில் அண்ணி சொல்லிச் செல்லும் சதி எனும் உடன் கட்டை ஏறும் அகத்தூண்டல் காரணிகள் என்னை பலவாறு சிந்திக்கச் செய்தது.
நற்குணம் சொல்வதை அப்படியே ஏற்று எதிர்க் கேள்வி கேட்காத தம்பியை நற்குணம் கொஞ்சமேனும் கண்டித்திருக்கலாமே என்ற எண்ணம் ஏற்படாமல் இல்லை.
நாவல் ஆங்காங்கே அலைபாய்ந்தாலும், மைய அச்சிலிருந்து விலகாத சாரட் வண்டியைப் போன்ற ஓட்டம்.
சதி எனும் உடன்கட்டை ஏறும் அத்தியாயம் ஒரு விறுவிறுப்பான திரைப்படத்தின் ஆக்சன்ப்ளாக் போல அமைந்துவிட்டது. வைகைக் கரையில் இது போன்ற தென்னந்தோப்புகளைக் கண்டவன் என்பதால் அந்த வர்ணனைகளை மனதில் ஓட்டிப் பார்த்துக்கொண்டேன்.
ஆனந்தவல்லி தற்கொலை செய்யப் போகும் இரண்டு பெண்களிடம் பேசுவதை இன்னும் நீண்ட நெடிய அத்தியாயமாய் எழுதி இருக்கலாம்.
அந்த மஹாலின் மானோஜி ராவ் போன்ற கபடதாரியைக் கொல்வதைப் போல் ஒரு ஆக்ரோசம் வந்தாலும், இந்தப் புனைவு நிஜத்திற்குப் பக்கத்தில் இருப்பதால் அவன் மன்னிக்கப்பட்டிருக்கலாம்.
மலர்வனமாய்ப் பூத்துக்குலுங்கிய காலத்திலேயே, வார்த்தைகளைக் கோர்த்து வடிக்கும் வித்தை அண்ணிக்கு கை வந்த கலை என்பதை அறிந்தவனாகையால், இந்த நாவல் இவ்வளவு தாமதமாக வந்திருப்பதில் கொஞ்சம் வருத்தம் தான்.
இன்னும் பல படைப்புகள் அண்ணி எழுதட்டும். அதையாவது வெளியாகும் போதே படிக்கும் வாய்ப்பு எனக்கு கிடைக்கட்டும்.
நன்றி Ahamed Zubair A
#ஆனந்தவல்லி_நாவல்
#ஆனந்தவல்லி