ஆனந்தவல்லி – என் பார்வையில்
//கரடு முரடான பாதையில் தூரத்தில் வளைவு இருந்தால், வேகமாக ஓடும் குதிரையின் கடிவாளத்தை இருகப்பிடிப்பவன்தான் நல்ல சாரதி.வளைவிற்கு அந்தப் பக்கம் என்ன இருக்கிறது என்று தெரியாதபோது அறிவுள்ளவன் செய்ய வேண்டியது நிதானிப்பது.//
ராபின் ஷர்மாவின் “The Monk who sold his Ferrari” யில் வரும் motivation quotes-களுக்கு இணையானது இந்த வரிகள்.ஒரு தேர்ந்த படைப்பாளியால் மட்டுமே பாமரனுக்கும் புரியும் வகையில் எடுத்துரைக்கும் ஆற்றல் இருக்கும். அது நம் ஆனந்தவல்லியின் ரியல் தாயான இந்த லக்ஷ்மி அண்ணிக்கும் வாய்த்திருக்கிறது.
ஒரு கதை வலுப்பெறுவது திரைக்கதையின் நேர்த்தி மற்றும் அதன் உள்ளிருக்கும் சொல்லாடலின் மூலமாகத்தான். அதனடிப்படையில், இங்கே, நிகழ்காலத்தில் ஆனந்தவல்லியின் வாழ்க்கையையும், அவளின் கடந்த கால வாழ்க்கையையும் அடுத்தடுத்த அத்தியாயங்களில் ஒன்றன்பின் ஒன்றாக அடுக்கிய விதத்தில், Sidney Sheldon நாவல்களின் சாயல் இருப்பதை உணரமுடிகிறது.
தஞ்சையின் அழகையும் அதன் பெயர்க்காரணத்தையும் இடையிடையே தூவியிருப்பது கதையின் ஓட்டத்தை மேலும் அழகாக்குகிறது.
தாசிகளின் வாழ்வியலை முடிந்தவரை இலை மறை காய் மறையாகச் சொன்னதற்காக மீண்டும் ஒருமுறை மெய்சிலிர்க்கலாம்.
இளவரசன் பிரதாமன் தன்னுடைய முதல் கடமையை காவிரிக்கரையில் மரைக்காயரின் தென்னந்தோப்பில் வெள்ளைக்காரர்கள் எதிர்பாராத போது ஆற்றியது, நம் இப்போதைய தமிழில் சொல்வதென்றால் “மரண மாஸ்”.
பொன்னியின் செல்வன் கொடுத்த உற்சாகத்தில் தமிழ் சினிமாவின் ஆகச்சிறந்த படைப்பாளிகள் உங்களை விரைவில் தொடர்பு கொள்வார்கள். ஏனெனில், அதற்கான எல்லா அம்சங்களும் இதில் உள்ளது.
பேராசிரியர் கு. ஞானசம்பந்தன் அவர்கள் அடிக்கடி மேடைகளில் கூறும் சொர்ணம் தொடர் பற்றிய புனைவு போல, இப்போது நானும் தவிக்கிறேன் ஆனந்தவல்லிக்கும், சபாபதிக்கும் என்ன ஆகியிருக்கும் என்று?
அண்ணி, உங்களின் அடுத்த பாகத்தை எதிர்நோக்கும், கோடிக்கணக்கான வாசகர்களில் நானும் ஒருவனாக.