
நவீன தமிழ்ச்சிறார் இலக்கியம் கிளைகள் பரப்பி, மலர்கள் மலர்ந்து மணம் வீசிக் கொண்டிருக்கும் காலம். ஒவ்வொரு மலரும் ஒவ்வொருவிதமாகப் பூத்துக் கொண்டிருக்கிறது. சிறார்களுக்கு அவர்கள் விரும்பும் விதத்தில் விரும்பும் வகையில் கதைகள் எழுதப்பட்டுக் கொண்டிருக்கின்றன. அதே போல வயது வாரியாகவும் சிறார் நூல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. அந்த வகையில் ஏற்கனவே எழுதாப்பயணம், ஆனந்தவல்லி, போன்ற நூல்களின் வழியே தமிழிலக்கியத்தில் தடம்பதித்துள்ள லஷ்மி பாலகிருஷ்ணன் இப்போது பதின்பருவத்தினருக்கான நாவலுடன் சிறார் இலக்கியத்தில் காலடி எடுத்து வைத்திருக்கிறார்.
நம்முடைய காலத்துக் குழந்தைகளுக்கு வீடும், பள்ளியும் தவிர்த்து வேறு புழங்கு வெளிகளே இல்லை. அவர்களுக்கு விளையாடத் தெருக்களில்லை. சுற்றித்திரிய காடு கரைகளில்லை. வயல்வரப்புகளில்லை. தாங்களாகவே கற்றுக் கொள்ளச் செடிகளில்லை. மரங்களில்லை, பறவைகளில்லை, சிறு பிராணிகளில்லை, பூச்சிகளில்லை, அவ்வளவு ஏன்? சண்டையிட்டுச் சேர்ந்துகொள்ளச் சேக்காளிகள் கூட இல்லை. சிறார்கள் தங்களுடைய குழந்தைமையின் வெகுளித்தனத்தை இழந்து விடுகிறார்கள். தங்களுடைய அனுபவங்களிலிருந்து தாங்களாக அறிந்து கொள்ளும் கற்றலை இழக்கிறார்கள். தங்களுடைய அனுபவங்களிலிருந்தும், கண்டு கேட்டவைகளிலிருந்தும் உருவாகும் கற்பனைவெளியை இழக்கிறார்கள். இத்தனை இழப்புகளையும் ஒருசேர உணர்த்துகிற நாவலாக மலர்ந்திருக்கிறது இந்த நாவல்.
பெருநகரத்தில் வளர்கிற ஒரு சிறுவன் கிராமத்துக்குப் போகும்போது அவன் அறிந்து கொள்கிற புதிய விஷயங்கள் அவனிடம் புதிய உணர்வுகளைத் தோற்றுவிக்கிறது. இதுவரை அவன் தெரிந்து கொண்டதற்கும் கிராமத்தில் அவன் அறிந்து கொள்வதற்கும் இடையில் உள்ள தலைகீழ் அர்த்தங்களே அவனிடம் மாற்றங்களை உருவாக்குகிறது. மிக அழகாக கிராமத்து சூழலை மனதில் ஆழப்பதியும்படி சித்திரமாய் வரைந்து அந்தச் சித்திரத்தில் நகரத்துக் குழந்தைகளிடம் இன்றளவும் உள்ள கேள்விகளை எளிமையாகவும் அழகாகவும் சொல்லியிருக்கிறார் லஷ்மி பாலகிருஷ்ணன்.
நாவலில் வரும் முத்துத்தாத்தா, மரகதம் பாட்டி, கதைநாயகன் கண்ணன், அவனது தங்கை மயூரி, காளிமுத்து, முத்துக்கண்ணு என்ற கதாபாத்திரங்களின் வழியே சிறார்களுக்கு ஒரு புத்தம் புதிய உலகத்தைக் காட்டுகிறார். அந்த உலகத்தைப் பார்க்கும் குழந்தைகள் இதுவரை தாங்கள் தவறாகத் தெரிந்து கொண்டதைச் சரியாக அறிந்து கொள்வார்கள். அவர்களுடைய பல சந்தேகங்களுக்கு, கேள்விகளுக்கு, பதில் கிடைக்கும். பல புதிர்களுக்கு விடை கிடைக்கும். அத்துடன் நம்முடைய சமகாலச் சமூகம் பற்றிய பார்வையும் கிடைக்கும்.
இந்த நாவலை வாசிக்கும்போது நீங்கள் அறியாதவற்றை அறிந்து கொள்வீர்கள். தெரியாதவற்றைத் தெரிந்து கொள்வீர்கள். புரியாதவற்றைப் புரிந்து கொள்வீர்கள். ஒரு விடுமுறைகாலப் பயணத்திற்குப் போய் வாருங்கள் குழந்தைகளே!
தமிழ்ச்சிறார் இலக்கியத்துக்கு புதுநெல்லின் பால்மணத்துடன் தடம் பதித்திருக்கும் லஷ்மி பாலகிருஷ்ணனுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்!
நல்வரவு!
வாழ்த்துகளுடன்
உதயசங்கர்
+++++++
(எனது இளையோர் நாவல் ‘நெல் விளைந்த கதை’க்கு அனுபவம் மிக்க எழுத்தாளர் உதயஷங்கர் அவர்கள் அளித்த வாழ்த்துரை.)