இன்றோடு ஆனந்தவல்லி வெளியாகி சரியாக ஒரு வருடம் நிறைவுறுகிறது. இடைப்பட்ட காலத்தில் சமூக வலைத்தளங்களில் வெளியான நூலறிமுகக் குறிப்புகளைக் கணக்கெடுத்துப் பார்த்தால் நாவல் பரவலாக சென்று சேர்ந்திருப்பதாகத்தான் தோன்றுகிறது. விற்பனையும் நன்றாக இருப்பதாகவே பதிப்பகத் தோழர்கள் தெரிவிக்கிறார்கள்.
நாவலை எழுதி முடித்த பின்னரும் என் இயல்பான தயக்கத்தோடு போராடிக் கொண்டிருந்தேன். அண்ணன்கள் யூமா வாசுகி, கரு. ஆறுமுகத்தமிழன் இருவரிடமிருந்தும் கிடைத்த கருத்துக்களே இந்நூலை பதிப்பகத்திற்கு எடுத்துச் செல்லும் துணிவினை எனக்குத் தந்தன. இருவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
எப்போதும் தாட்சிண்யமற்ற விமர்சனங்களை முன் வைத்து எழுத்தை செழுமைப் படுத்திக் கொள்ள உதவும் தம்பி சரவணன், கென், அண்ணாச்சி ஆசிப் மீரான், தோழி மது ஆகிய நண்பர்களுக்கும் நன்றி.
தோழர் அ. மார்க்ஸும், மாலனும் அளித்த விரிவான விமர்சனக் கட்டுரைகள் நாவலுக்கான என் உழைப்பிற்கான அங்கீகாரமாகவே இருந்தது. இருவருமே கதை நடந்த காலகட்டத்தைப் பற்றிய விரிவான ஆராய்ச்சிப் பார்வை உடையவர்கள் என்பதால் அவர்களின் அங்கீகாரம் எனக்கு மிகுந்த நிறைவைத் தந்தது. மார்க்ஸ் அவர்களின் விமர்சனம் புத்தகம் பேசுது இதழிலும், மாலன் அவர்களது விமர்சனம் கல்கி இதழிலும் வெளியானது. இவ்விருவரைத் தவிர சரவணன் மாணிக்கவாசகம் அவர்கள் தமிழ் இந்துவில் எழுதிய பொம்மை ராஜாக்களும், உடன்கட்டைப் பெண்களும் எனும் கட்டுரையும் நாவலைப் பற்றிய விரிவான அலசலைத் தந்தது. மூவருக்கும் என் நன்றியும் அன்பும்.
இது தவிர தத்தமது முகநூல்/வலைப்பதிவில் விமர்சனங்களை எழுதிய நண்பர்கள், வாசிப்பை நேசிப்போம் குழுவில் தங்களது பார்வையைப் பகிர்ந்து கொண்ட முகமறியா வாசகர்கள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றி.
புதுக்கோட்டை புத்தகக் கண்காட்சியில் சிறந்த நாவல் விருதும், தமிழ்நாடு முற்போக்கு கலை இலக்கிய மேடையின் மக்கள்கவி இன்குலாப் நினைவு படைப்பாக்க மேன்மை விருதும் இந்நாவலுக்குக் கிடைத்திருக்கிறது. முதல் நாவலுக்கு கிட்டியிருக்கும் இந்த அங்கீகாரங்கள் எழுத்துப் பயணத்தைத் தொடர ஊக்கமும், உற்சாகமும் அளித்துள்ளன. இரு தேர்வுக் குழுவினருக்கும் என் மனமார்ந்த நன்றி.
இரண்டாம் சரபோஜி அரசரின் சரஸ்வதி மகால் நூல் நிலையத்தையும், முதலாம் சரபோஜி காலத்தில் அபிராமி அந்தாதி பாடப்பெற்ற நிகழ்வையும் தாண்டி தமிழக மராட்டிய அரச வம்சத்தினரைப் பற்றி பொதுவெளியில் அதிகம் பேசப்பட்டதில்லை. முழுக்க முழுக்க மராட்டிய ஆட்சிக் காலத்தைப் பின்னணியாகக் கொண்ட நாவல் என்கிற வகையில் ஆனந்தவல்லி புத்தம்புதிய முயற்சி.
இன்றுள்ள மராட்டிய மொழியைத் தாய் மொழியாகக் கொண்டவர்களால் கூட எளிதில் படித்துவிட முடியாத மோடி எனும் லிபியில் எழுதப்பட்ட ஆயிரக்கணக்கான ஏடுகள் சரஸ்வதி மகால் நூல் நிலையத்தில் மூட்டைகளாக சேமிக்கப்பட்டுள்ளன. அவற்றிலிருந்து உருவான மோடி ஆவணத் தொகுப்பு எனும் மூன்று பகுதி நூல்களையும், அந்த ஆவணங்களை அலசி ஆராய்ந்து எழுதப்பட்ட கா.ம.வேங்கடராமையாவின் இரு நூல்களையும் அனேகமாய் தினந்தோறும் பாராயணம் செய்து கொண்டிருந்தேன். தஞ்சை, திருவையாறு, திருவிடைமருதூர் என்று நேரிலும், மானசீகமாகவும் பயணித்துக் கொண்டே இருந்தேன்.
அளித்த உழைப்பிற்கு இன்னமும் கூட கொஞ்சம் கூடுதல் அங்கீகாரம் கிடைத்திருக்கலாமே என்ற ஆதங்கமும் எனக்குள் இருந்தாலும் எழுத்துப் பயணத்தைத் தொடரத் தேவையான உந்துதல் கிடைத்திருப்பதில் மகிழ்வும் அடைகிறேன். வருட இறுதியில் திரும்பிப் பார்க்கையில் மூன்று படைப்புகள் வரவிருக்கும் புத்தகக் கண்காட்சியில் வெளிவரத் தயாராக உள்ளன என்பது நிறைவளிக்கிறது.