நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகளும் நிமிர்வும் கொண்டவளின் கதை


காவிய மீள் உருவாக்கங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதம். காவியத்தில் இருந்து ஒரு கதாபாத்திரத்தினை எடுத்துக் கொண்டு, அப்பாத்திரத்தின் நிலையில் நின்று பேசும், மாற்று உண்மைகளை நிறுவிப் பார்க்கும் பல்வேறு கதைகள் இங்குண்டு. எழுத்து வடிவிலான கதைகளில் மட்டுமல்ல கூத்து, பொம்மலாட்டம் போன்ற வடிவங்களில் கூட காவியங்களின் மீள் பார்வைகள் சர்வ சாதாரணமாக வைக்கப்பட்டே வருகிறது. ஒவ்வொரு சிறு விஷயத்தையும் தொட்டெடுத்து, வேறு வடிவில் புனைந்து பரப்பும் கர்ண பரம்பரைக் கதைகளுக்கும் இங்கு குறைவில்லை.

மகாபாரதம் ஒரு கதைக் கடல். அதிலிருந்து அவரவருக்கு சாத்தியப்பட்ட கொள்கலன்களில் முகர்ந்து கொள்ளலாம். முழு பாரதத்தையும் மீட்டுரைக்கும் எஸ். பைரப்பாவின் ’பர்வம்’ ; ஜெயமோகனின் ‘வெண்முரசு’ போலவோ, ஒரு பாத்திரத்தின் பார்வைக் கோணத்தை அடிப்படையாகக் கொண்ட எம்.வி.வி.யின் ‘நித்ய கன்னி’; எம்.டி. வாசுதேவநாயரின் ‘இரண்டாம் இடம்’ போலவோ எப்படி வேண்டுமானாலும் எழுதிப் பார்க்கலாம்.

வடிவம் எதுவாயினும் அக்கதை புதிதாக ஒரு கண்டடைதலை நிகழ்த்தி இருக்க வேண்டும் என்பதே அடிப்படை விதி. அதே நேரம் புதிதாக எதையேனும் சொல்ல வேண்டும் என்பதற்காக பொருந்தாத கருத்துக்களைப் புகுத்தினால் அது காலத்தில் எடுபடாது போய்விடும்.

வியாச பாரதத்தின் மகா பிரஸ்தான பருவத்தில், மற்ற கணவர்களைவிட, அர்ஜுனனைத் துளி அதிகமாக நேசித்தாள் என்ற காரணத்தால் உடலுடன் சொர்க்கம் புக முடியாது கீழே விழுவாள் திரௌபதி. எஸ். பைரப்பாவின் பர்வம் நாவலின் இறுதியில், அஸ்வத்தாமனால் தன் மக்கள் கொல்லப்பட்டு கிடக்கையில், தன் கணவர்கள் ஐவருமே தன் பிள்ளைகளைவிட, தத்தமக்கு மட்டும் தனிப்பட்ட மனைவியரில் பிறந்த மக்களையே அதிகம் நேசித்தார்கள் என்ற உண்மையினை உணர்ந்து கொள்வாள். திரௌபதிக்கு கிடைக்கும் இந்த அறிதலே தாய்வழிச் சமூகத்தின் எச்சங்களை இங்கிருந்து துடைத்தெறிந்திருக்க வேண்டும் என்பதை வாசிப்பவர் உணர முடியும்.

அல்லது இன்னொரு புறம், ஐந்து பேரையும் மணந்து, பாரதத்தின் பேரரசியாக ஆக அவர்களைப் பகடைக்காயாகப் பயன்படுத்தினாள் என்றும் எழுதலாம். இன்னும் முன்னகர்ந்து குந்தியே கூடத் தன் பேராசையால் பிள்ளைகளைத் தூண்டி பாரதப் போரை உருவாக்கினாள் என்றும் எழுதலாம். சுயமான பாலியல் தேர்வு கொண்ட தேவயானி, தமயந்தி, குந்தி, திரௌபதி என அனைவரையுமே பேராசைக்காரர்களாகவும், ஆதிக்க புத்தியுள்ளோராகவும் செதுக்கி வைக்கவும் முடியும். எந்தத் தரப்பிலிருந்து நாம் புனைவுகளை உருவாக்குகிறோம் என்பதை நமது கருத்தியலே முடிவு செய்யும்.

அந்த வகையில் மானசா, ஒரு நாகினியை, ஓர் அன்னையை, குலங்களுக்கு இடையிலான வஞ்சமறுத்தவளாகக் காட்டுகிறது. ஒற்றைப் பெற்றோளாக நின்று தன் மகனை வளர்த்தெடுத்த அவ்வன்னையின் மன உறுதியைப் பற்றிப் பேசுகிறது. மகனை உடலினால் மட்டுமல்ல அவனது ஆளுமையிலும் பலவானாக வடிவமைத்த திடமான தாய் அவள்.

பொதுவாகவே பெண்ணியம் பேசுமிடத்திலெல்லாம் முன் வைக்கப்படும் அறியாமை மிக்க, ஆனால் ஆணவமான கேள்வி ஒன்றுள்ளது, “ஆணாதிக்கம்னு சொல்றீங்களே, மாமியார் கொடுமை, நாத்தனார் கொடுமைன்னு பெரும்பாலான சிக்கல் பெண்களே ஏற்படுத்திக் கொள்வதுதானே”என்பதுதான் அது. அத்தகைய சூழலின் ஆணி வேராக இருப்பதெல்லாம் தனக்கு கிடைத்த சிறுமையைத் தன்னிலும் எளியவரிடம் மடைமாற்றிவிடும் மனித இயல்பே. அத்தகைய போக்கினையும் தன் மன விரிவினால் மாற்றியமைப்பவளே என் மானசா.

தங்கையாக, மனைவியாக, தாயாக என எல்லா நிலையிலும் தன் கடமைகளைச் சிறப்பாக நிறைவேற்றிவிட்டு, அதற்குப் பின்னர் தனக்கும் தனியான தேடல்கள் உண்டு என்றும், அதை நோக்கிப் பயணிப்பது தன் உரிமை என்றும் பிறருக்கு உணர்த்தியவள் இந்த நாகினி. நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகளும், நிமிர்வும் கொண்ட மானசாவின் கதை இது.

கண்காட்சி செல்வோர் கவனத்திற்கு : நூல் இன்னமும் அரங்கிற்கு வந்து சேரவில்லை. நாளைக்குள் கிடைக்குமென்று பதிப்பகத்தார் தெரிவித்துள்ளனர்.

#ChennaiBookFair

#cibf2023

#BharathiPuthakalayam

#மானசா_நாவல்

#சென்னைபுத்தக்கண்காட்சி

#மகாபாரதம்

Advertisement

About லக்ஷ்மி பாலகிருஷ்ணன்

சொல்லிக்கொள்ளுமளவு பெரிதாக ஏதுமில்லை. :)
This entry was posted in இலக்கியம், நாவல், பெண்ணியம், மகாபாரதம், மானசா நாவல் and tagged , , , , , . Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s