மானசா – குறுநாவல்
ஆசிரியர்: லக்ஷ்மி பாலகிருஷ்ணன்
பாரதி புத்தகாலயம்
விலை: ரூ.130
மகாபாரதத்திலிருந்து பிறந்த கிளைக்கதை மானசா, ஜரத்காரு என்னும் மானசா என்னும் நாக கன்னிகை. அவரை இயக்கியவர் இருவர்.
முதலாவதாக, தன்னுடைய குலம் தொடர வாரிசு வேண்டி குழந்தைப்பேறுக்கு மட்டும் மனைவியைத் தேடி, மானசாவை மணந்து, குழந்தை உண்டானதும் அற்ப காரணத்துக்காக அவரைப் பிரிந்து செல்லும் ஜரத்காரு முனிவர்.
இரண்டாவதாக, காண்டவ வன எரிப்பிலிருந்து அர்ஜுனனுக்கும் நாகர் குலத்துக்கும் இடையில் பகைமை துவங்கி அது அவர்களுடைய மகன்கள் கொள்ளுப் பேரன்கள் எனக் குலப்பகையாகச் செல்லும் சங்கிலியை அறுக்க முற்படும் அண்ணன் வாசுகி (ஆண், நாகர்).
ஜரத்காரு முனிவர் மானசாவைப் பிரிந்த பின், தங்கை மானசாவை எந்தக் குறையும் இல்லாமல் காப்பாற்றுகிறார், அண்ணன் வாசுகி. மானசா பெற்றெடுக்கப் போகும் ஆண் குழந்தை வளர்ந்து பெரியவனாகி குலப்பகைக்கு முற்றுப்புள்ளி வைத்து நாகர் குலத்தைக் காப்பான் என்பதில் நம்பிக்கை கொண்டவர். அதுதான் மூத்தோர் வாக்கும்.
கணவன் என்னும் முன்னாள் கணவன், அண்ணன், இவர்கள் இருவருடைய விருப்பத்துக்காகவும் மகனைப் பெற்று ஆளாக்கி நாகர்களைப் பேரழிவிலிருந்து காக்கிறார் மானசா.
தனித்தாய் என்பவள் தனித்தாய்தான். அவளுடைய அண்ணன் நாகர்களின் அரசனாக இருந்தாலும், அண்ணனின் நிழலில் அவள் வாழ்ந்தாலும், அழைத்த குரலுக்கு ஓடிவரத் தோழியும் பணிப்பெண்களும் இருந்தாலும், மகனைப் பெற்று வளர்க்கும் தனித்தாயின் வலியை யாராலும் உணர முடியாது.
சில வரிகளை ஒற்றி ஒட்டுகிறேன்.
// அவன் சொல்லிக்கொள்ள கோத்திரம் கொடுத்ததைத் தவிர, தந்தையென்பதற்கு வேறெந்தப் பொறுப்பும் கிடையாது என்பது இவர்களுக்கெல்லாம் அநியாயம் என்று புரியவே போவதில்லை. அது பற்றி எனக்கும் கவலை இல்லை. ஆனால், என் அச்சமெல்லாம் வேறடி. ஆஸ்திகன் திடமானவனாக வளரவேண்டும் என்பதிலேயே இவ்வளவு காலம் அக்கறை கொண்டிருந்தேன். அவனும், ஓர் ஆண்மகனாக எழுந்து நிற்கையில், அவனது தந்தையைப் போலவே சிந்திப்பானோ என்று இப்போது அஞ்சுகிறேன். //
தன்னுடைய வாழ்க்கையின் பொருள் குலம் தழைக்கவும், குலப்பகை நீங்கவும் ஒரு மகனைப் பெற்றுத் தருவது மட்டுமே என்பதை உணர்ந்த பின், அந்த நோக்கத்தைத் தவிர வேறெதிலும் பற்றற்று இருக்கும் தனித்தாய் மானசா.
கணவன் தன்னைப் பிரிந்ததும் தான் கணவனுடன் வாழ்ந்த குடிலை எரித்து சாம்பலாக்கச் சொல்கிறார்.
மகனுடையை திருமணப் பேச்சில், ‘பிரம்மச்சாரியாக வாழ், திருமணம் செய்துகொண்டால் மணமுடித்த மனைவியை எப்பொழுதும் பிரியாதே’ என்னும் வாக்குறுதியை மகனிடமிருந்து பெறும் தனித்தாய்.
மகனுடைய திருமணத்துக்குப் பின் ஒரு அரசனின் தங்கையாக, ஒரு வைதீகனின் தாயாக, ஒரு அத்தையாக, மானசா வாழ்ந்தாரா?
*
முனிவர்களின் நாகர்களின் வழிபாடுகளைச் சொல்லும்போது நாவலாசிரியர் அங்கங்கே பயன்படுத்தியிருக்கும் வடமொழிச் சொற்கள் என்னைப் போன்ற வாசகனுக்கு வேகத்தடையை உண்டாக்கும் என்னும் ஒரே ஒரு சுட்டிக்காட்டலைத் தவிர, வேறெந்தக் குறையும் இல்லாத தெளிவான நடை.
அந்தத் தெளிவான நடைதான் கதைக்குள் கதையாக நொடியில் கதைமாந்தர் வந்து அறிமுகமாகி மறையும் ஓட்டத்திலும் வாசகனை கதைக்குள் இழுத்து வைத்து அமர்த்துகிறது.
சகோதரி லக்ஷ்மி பாலகிருஷ்ணனின் மானசா பெருவாரியான வாசகர்களைச் சென்றடைய வாழ்த்துகள்!
*