மகாபாரதம் ஒரு இலக்கியம் என்ற அளவிலேயே முக்கியத்துவம் பெறுகிறது. மனித குலம் இதுவரை கண்ட அத்துணை விசித்திரமான கதாபாத்திரங்களையும் தன் உள்ளே சேகரித்து வைத்திருக்கிற கதைக் கடல் மகாபாரதம். ஆனால் மகாபாரதத்தின் சமூக விழுமியங்கள் மிகவும் பிற்போக்கானது. நிலவுடமைக்காலசமூக மதிப்பீடுகளைச் சுமந்து கொண்டிருப்பது.
இன்று வரை இரு பெரும் இதிகாசங்களின் மூலமே இந்து மத சாஸ்திரங்களும் சடங்குகளும் யாகங்களும் மனுதர்மத்தின் கோட்பாடுகளும் மக்கள் மனதில் ஆழமாக வேரூன்றி இருக்கின்றன. கட்டுக்கதைகளையே வரலாறு என்று நம்புகிற, உண்மை என்று போற்றுகிற, மனித இனமாக ஹோமோ சேப்பியன்ஸ் என்ற இனம் வாழ்ந்து கொண்டிருக்கிறது. அதனால் தான் இந்தியாவின் அத்தனை மூலை முடுக்குகளிலும் ராமாயணமும் மகாபாரதமும் நடந்ததாக மக்கள் நம்புகிறார்கள்.
மகாபாரதம் அடிப்படையில் வெற்றி பெற்றவர்களின் கதை .ஆனால் அந்த வெற்றிக்கு எத்தனை பழங்குடியினர், எத்தனை அப்பாவிகள்,எத்தனை சாமானிய மக்கள், ஏதும் அறியாத விலங்குகள் பறவைகள் பாம்புகள் பலியாகி இருக்கிறார்கள் என்பதை வெற்றியின் புகழ் மறைத்து விடுகிறது.
மகாபாரதம் முழுவதும் பலியானவர்களின் பாதிக்கப்பட்டவர்களின் மரண ஓலம் கேட்டுக் கொண்டே இருக்கிறது. அவர்கள் தான் இந்த மண்ணின் பூர்வ குடிகள். அவர்கள்தான் இயற்கையின் புத்திரர்கள். அவர்கள்தான் இயற்கையை வழிபடுகிறவர்கள். இயற்கையோடு இணைந்து வாழ்பவர்கள். ஆனால் அவர்களை காட்டுமிராண்டிகளாக, நாகரீகமற்றவர்களாக சித்தரித்தது தான் மகாபாரதம் மாதிரியான இலக்கியங்களின் தந்திரம்.
மகாபாரத மறுவாசிப்பு என்பது ஏற்கனவே எழுதப்பட்ட பிரதியை மீண்டும் ஊதிப் பெருக்குவது அல்ல. இதுவரை யாரும் கேட்டிராத, கவனித்திராத, பாதிக்கப்பட்ட வாழ்வையிழந்த கதாபாத்திரங்களின் வழியே மறுவாசிப்பு செய்யப்பட வேண்டும். அந்த வகையில் மகாபாரதத்தில் உள்ள ஒரு கதாபாத்திரத்தை மறுவாசிப்பு செய்து எழுதியிருக்கிறார் லக்ஷ்மி பாலகிருஷ்ணன் .
ஆதிஇந்தியர்களான நாகர்கள் எப்படி சில ஆயிரம் வருடங்களுக்கு முன்னால் இந்தியாவிற்குள் நுழைந்த ஆரியர்களால் அழிக்கப்பட்டார்கள், அடிமைப்படுத்தப் பட்டார்கள் என்பதையும் இந்த நாவலின் வழியே நம்மால் உணர முடிகிறது.
மானசா என்ற பெண்ணின் ஆளுமையை விவரித்து போற்றுகிற நாவலாக வெளிவந்திருக்கிறது எத்தகைய சூழ்நிலையிலும் தன்னுடைய சுயத்தை இழக்காத தனக்கான தேடலை எப்போதும் அடைகாத்து வைத்திருக்கிற ஒரு அபூர்வமான பெண்ணாக மானசா இந்த நாவலில் சித்தரிக்கப்பட்டிருக்கிறார்.
அழகான மொழி நடையில் மகாபாரதத்தின் கிளைக்கதையை அதன் கலை அமைதி கெடாமல் புதிய வெளிச்சத்தை காட்டி இருக்கிறது மானசா.
இப்படிப்பட்ட பிரதிகளே மகாபாரதத்தின் மறுவாசிப்பாக அமைய வேண்டும் என்று நம்புகிறேன்.
மானசாவை தமிழுக்குத் தந்த லக்ஷ்மி பாலகிருஷ்ணனை மனமார வாழ்த்துகிறேன்.
வெளியீடு – பாரதி புத்தகாலயம்
விலை – ரூ130.